கோவை:பி.எல்.ஐ., திட்டத்தின் முதலீட்டு உச்சவரம்பு, ரூ.10 கோடியாக குறைக்கப்படும் பட்சத்தில், எம்.எஸ்.எம்.இ.,கள் வளர்ச்சி பெறுவதுடன், வேலை வாய்ப்பும் பெருகும் என்கின்றனர் ஓ.இ., மில்களின் நிர்வாகிகள்.உலகம் முழுவதும் செயற்கை பஞ்சு கலந்த ஆடைகளுக்கான தேவை, 70 சதவீதம் உள்ளது.
நம் நாட்டிலும் இதற்கான உற்பத்தியையும், ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும் விதமாக, உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்தை(பி.எல்.ஐ.,), மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தில், 100 கோடி, 300 கோடி என இரு பிரிவுகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, ஊக்கச்சலுகை வழங்க, 10 ஆயிரத்து, 683 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, தொழில் துறையினரிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.இருப்பினும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முதலீடு உச்சவரம்பை, 10 கோடியாக குறைக்கும் பட்சத்தில், தொழில் வளர்ச்சியுடன், வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்கின்றனர், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களின் நிர்வாகிகள்.ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்(ஓஸ்மா) தலைவர் ஜெயபால் கூறியதாவது:சர்வதேச நாடுகளுடன் போட்டித்திறனை அதிகரிக்கும் வகையில், பி.எல்.ஐ., திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
கழிவுப் பஞ்சு, பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில்கள், ஆடைகளின் கழிவுகள் என மறுசுழற்சி பொருட்களை கொண்டு, ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் நுால் தயாரிக்கின்றன.இந்த மில்கள் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இத்திட்டத்தில் உச்சவரம்பு, 100 கோடியாக இருப்பதால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பயன்பெற முடியாது.பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாது என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் முதலீடு உச்சவரம்பு, 10 கோடி ரூபாயாக குறைத்தால், புதிதாக தொழில்முனைவோர் உருவெடுப்பர்.
பெட் பாட்டில் உள்ளிட்ட மறுசுழற்சி பொருட்களை, பி.எல்.ஐ., திட்டத்தில் சேர்த்தால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். மத்திய அரசிடம் இது குறித்து கோரிக்கை முன்வைக்கவுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE