தேவீரம்மணி ஏரியில் தண்ணீர்; சுற்றுலா பயணியர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேவீரம்மணி ஏரியில் தண்ணீர்; சுற்றுலா பயணியர் கூட்டம்

Added : செப் 12, 2021
Share
மாண்டியா : கே.ஆர்.பேட்டின் நாகமங்களா சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவீரம்மணி ஏரியில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதை காண்பதற்காகவே சுற்றுலா பயணியர் கூட்டம் குவிகிறது. மாண்டியா கே.ஆர்.பேட்டின் நாகமங்களா சாலையில் தேவீரம்மணி ஏரி அமைந்துள்ளது. மூன்று, நான்கு ஆண்டுகளாக மழை பற்றாக்குறையால் ஏரி வறண்டிருந்தது. மக்கள், விவசாயிகள் வருத்தமடைந்தனர். 250 ஏக்கர் பரப்பளவில்

மாண்டியா : கே.ஆர்.பேட்டின் நாகமங்களா சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவீரம்மணி ஏரியில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

இதை காண்பதற்காகவே சுற்றுலா பயணியர் கூட்டம் குவிகிறது. மாண்டியா கே.ஆர்.பேட்டின் நாகமங்களா சாலையில் தேவீரம்மணி ஏரி அமைந்துள்ளது. மூன்று, நான்கு ஆண்டுகளாக மழை பற்றாக்குறையால் ஏரி வறண்டிருந்தது. மக்கள், விவசாயிகள் வருத்தமடைந்தனர். 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி, நுாற்றாண்டுகளாக விவசாயிகளின் விளை நிலங்களுக்கு, தண்ணீர் வழங்குகிறது. கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு, அடைக்கலமளிக்கிறது. மக்களின் நலனுக்காகவே, மஹாராணி தேவீரம்மணி, இந்த ஏரியை உருவாக்கினார். இதன் காரணமாக ஏரிக்கு, அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் நல்ல மழை பெய்ததால், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. கூடுதல் தண்ணீர் ஏரிக்கரையை கடந்து, வெளியே பாய்கிறது. கே.ஆர்.பேட்டை ஒட்டியுள்ள ஏரியை, அபிவிருத்தி செய்தால் இப்பகுதி சிறந்த சுற்றுலா தலமாக மாறும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது ஏரியை சுற்றிலும், 'ஜாகிங் டிராக்' அமைப்பதுடன், ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி, ஏரியின் சுற்றுப்பகுதியை அபிவிருத்தி செய்ய, இத்தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான நாராயணகவுடா ஆர்வம் காண்பிக்கிறார். ஐந்து கோடி ரூபாய் செலவில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறை அதிகாரியொருவர் கூறியதாவது:தேவீரம்மணி ஏரிக்கு, புதுப்பொலிவு தரும் நோக்கில், ஹேமாவதி நீர்ப்பாசன திட்ட அதிகாரிகளுடன், கூட்டம் நடத்திய அமைச்சர், நிதியையும் வழங்கியுள்ளார். விரைவில் பணிகள் துவங்கும். பணிகள் முடிந்த பின், ஏரி சிறந்த சுற்றுலா தலமாக மாறி, மக்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகளின் இன விருத்திக்கு அனுகூலமாகும் வகையில் ஏரி நடுவில் ஆங்காங்கே குன்றுகள் அமைத்து மரக்கன்றுகள் நடப்படும். ஜலக்கிரீடைகளுக்கு வசதி செய்யப்படும், ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீரை, மக்கள் அமர்ந்து ரசிப்பதற்காக, இருக்கைகள் அமைக்கப்படும்.ஏரியை சுற்றிலும், பூந்தோட்டம் அமைக்கப்படும். ஹைமாஸ்ட் மின் விளக்குகள் பொருத்துவது உட்பட, பல அபிவிருத்தி பணிகள் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X