மணல் கடத்திய டிப்பர் பறிமுதல்
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று மணலுார் பகுதயில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மணல் கடத்தி வந்த நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராசு, 32: என்பவரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
வியாபாரி தற்கொலை
பண்ருட்டி: பண்ருட்டி லிங்க்ரோட்டை சேர்ந்த முத்துகுமாரசாமி மகன் நரேந்திரன்,33; முந்திரி வியாபாரி; இவர் முந்திரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது தந்தையிடம் பணம் பெற்று சில கடன்களை அடைத்தார்.மேலும் கடன் இருந்ததால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலை 5:30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். காலை 8:30 மணியளவில் இந்திராகாந்தி சாலையில் தனியார் வங்கி உள்ள காம்ப்ளக்ஸ் மேலாளர் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆனந்தகுடி கிராமத்தைச்சேர்ந்தவர் சுதா, 36; இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினரோடு வீட்டில் முன்புறம் துாங்கினார். இரவு 12.30 மணியளவில் சத்தம் கேட்டதால் விழித்து எழுந்த சுதா, பின்பக்க கதவு திறந்திருந்ததை பார்த்து கூச்சலிட்டார். அவரது கழுத்தில் இருந்த ஆறே கால் பவுன் தாலி செயின் காணவில்லை. புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பைக் திருட்டு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கலியங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன், 34; இவர் கடந்த மாதம் 31ம் தேதி தனது உறவினர் ராமமூர்த்தி என்பவரின் பைக்கை வாங்கிக் கொண்டு நாச்சியார்பேட்டையில் உள்ள கார்த்திகேயன் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின், வெளியே வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கடை மேலாளருக்கு மிரட்டல்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்,36; நடுவீரப்பட்டில் ஜவுளிக்கடையில் மேலாளராக பணி புரிகிறார். நேற்று காலை பட்டிக்குப்பத்தை சேர்ந்த இளவரசன் ஜவுளிக்கடையில் துணி எடுக்க வந்தார். அவர் கேட்ட துணி கடையில் இல்லாததால் கடை பணியாளர்களை தரக்குறைவாக திட்டினார். இதை சுரேஷ் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இளவரசன் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் இளவசரன் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
குளவி கொட்டி பெண் பலி
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சின்னநரிமேடு கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மனைவி பூரணி,59; இவர் நேற்று காலை வீட்டின் தோட்டத்திற்கு சென்று திரும்பி வந்தார். அப்போது தோட்டத்தில் இருந்த குளவிகள் பூரணியை கொட்டியது. கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE