புதுச்சேரி : ''பாரதியாரின் நினைவு நுாற்றாண்டை முன்னிட்டு இளைஞர்கள், கவிஞர்கள், தேசபக்தர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்'' என கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி அரசு சார்பில் நேற்று, பாரதியாரின் நுாற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:பாரதியார் அதிகமாக வாழ்ந்தது புதுச்சேரியில் தான். பாரதியாரின் நினைவு நுாற்றாண்டு, வ.உ.சிதம்பரனார் பிறந்த 150வது ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் நினைவு நுாற்றாண்டு என்பதால் இளைஞர்கள், கவிஞர்கள், தேசபக்தர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.பாரதியார் நாட்டுப்பற்றை மட்டுமல்ல ஆன்மிகத்தையும் புதுச்சேரியில் விதைத்துள்ளார். பகவத் கீதையை அவர் தமிழில் மொழி பெயர்த்தது புதுச்சேரியில் இருந்த போதுதான். ஆகவே, இவை அனைத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் அளவிற்கு அரசின் நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு கவர்னர் கூறினார்.