''அண்ணே போலீசு வந்து உங்களை கேட்பாங்க, எதையும் சொல்லிடாதீங்க... அடிச்சு கேட்பாங்க அப்போதும் சொல்லிடாதீங்க,''... என்ற நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
அதுபோல உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்ற வசனத்தையும் பலர் இன்று தங்கள் வாழ்க்கையில் ஏதாவது நிகழ்வின் போது பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த நகைச்சுவை மூலம் தமிழ் திரையுலகில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்து கொண்டிருப்பவர் போண்டா மணி 57.
இலங்கையிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் சாதித்தவர்கள் பட்டியலில் இவரும் ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளார்.மதுரையில் தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்தவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
இலங்கையில் பிறந்தேன். என் கூட பிறந்தவங்க 16 பேர். நான் 15வது ஆள். சிறிய வயதில் தமிழ் சினிமாக்களை பார்த்து வளர்ந்தவன். சினிமாவில் நடிக்க ஆசை. ஆனால் இலங்கையில் நடந்த சண்டையில இதெல்லாம் நடக்காது என இருந்தேன். படித்து முடித்து கிடைத்த வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். 1983ல் அகதியாக இங்கு வந்தேன். சிதம்பரம் முகாம்ல அடைச்சுட்டாங்க. தம்பியுடன் பழ வியாபாரம் செய்தேன். சினிமாவில் நடிக்க முயற்சித்து முடியாமல் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டேன்.
பிறகு 1990ல் நடந்த சண்டையில் காலில் குண்டடி பட்டு என்னை தமிழகத்திற்கு அனுப்பிட்டாங்க. சேலம் எடப்பாடி முகாமில் இருந்த போது, அருகில் சினிமா சூட்டிங் நடக்கும். அப்போது பூலாம்பட்டி பாலு என்பவர் மூலம் இயக்குனர் பாக்யராஜை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர் மூலம் பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமானேன். பிறகு தென்றல் வரும் தெருவில் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது.
அதன் பிறகும் பட வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்தது.அப்போது நடிகர் மன்சூரலிகான், ராதாரவி உதவியாக இருந்தனர். வடிவேலு, விவேக் என்னை அழைத்து அவர்களது படங்களில் நடிக்க வைத்தனர். வடிவேலுவுடன் நடித்த காட்சிகள் எனக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. நடிகன் என்ற அந்தஸ்தையும் வழங்கியது. இதுவரை 270 படங்களில் நடித்து விட்டேன்.
தற்போது நடிகர் குமரிமுத்து துவங்கிய சாய் கலைக்குழு மூலம் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். கொரோனா ஊரடங்கால் அதற்கும் தற்போது இடைவெளி விட்டாச்சு. தற்போது நிலைமை திரும்பி கொண்டிருப்பதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் உள்ளிட்ட சில படங்களில் வாய்ப்பு வந்துள்ளது.
நான் எம்.ஜி.ஆர்.ரசிகன். ஆனால் சிவாஜி படங்களை அதிகம் பார்ப்பேன். அதுபோல இலங்கையிலிருந்து வந்தாலும் எனக்கு இதுவரை பாஸ்போர்ட் இல்லை. இதனால் என் குடும்பத்தினரை கூட பார்க்க முடியவில்லை. அலைபேசி வந்த பிறகு அவர்கள் வெளிநாடுகளிலிருந்து பேசுவர்.எனக்கு திருமணம் கூட நடிகர் வடிவேலு முயற்சியால் தான் நடந்தது. தற்போது மனைவி, இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் கழுத்தில் பெரிய கட்டி ஏற்பட்டு சிரமப்பட்டேன். மதுரையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் தான் என்னை அழைத்து வந்து அவரது மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சையளித்து பூரண குணமாக்கி அனுப்பினார். இப்படி என் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உதவியதை மறக்க முடியாது.வாழ் நாள் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் எனக்கில்லை என்றார்.
வாழ்த்த 94442 12191
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE