கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு
புதுடில்லி: டில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.இதில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மூத்த தலைவர்கள் பங்கஜ் குப்தா செயலராகவும், என்.டி.குப்தா பொருளாளராகவும் தேர்வாயினர்.அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 34 உறுப்பினர்கள் அடங்கிய கட்சியின் நிர்வாக குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
4 மாடி கட்டடம் இடிந்து விபத்து
தானே: மஹாராஷ்டிராவின் தானேவில், 25 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் இருவர் பலியாயினர். இதையடுத்து, குடியிருப்பு 'சீல்' வைக்கப்பட்டதுடன், அங்கு வசித்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ரயிலில் சிக்கிய பெண் மீட்பு
பால்கர்: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் வசாய் ரயில் நிலைய தண்டவாளத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண் நின்றதை, பணியில் இருந்த போலீஸ்காரர் ஏக்நாத் நாயக் கவனித்தார். அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் ரயிலை நிறுத்த 'சிக்னல்' கொடுத்த அவர், விரைந்து சென்று அப்பெண்ணை நடைமேடைக்கு துாக்கினார்.அப்போது ரயிலும் அங்கு வந்தது. இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. மீட்கப்பட்ட பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது.
பிரதமருக்கு சிராக் நன்றி
புதுடில்லி: பீஹாரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரது மகன் சிராக் பாஸ்வானுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில், தன் நண்பரை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கடிதத்தை 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிராக் பாஸ்வான், 'சமுதாயத்திற்கு என் தந்தை ஆற்றிய பணிகளை கடிதம் வாயிலாக கவுரவித்த பிரதமருக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.
பலத்த மழை: 4 பேர் பலி
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜி பஷீர் அகமது காரி குடும்பத்தினர், பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத் பகுதியில் வசித்தனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மிக பலத்த மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில் சிக்கிய ஹாஜி பஷீர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாயினர். ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றொருவரை மீட்பு படையினர் தேடுகின்றனர்.'
அதானி' பெயர் அகற்றம்
மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலைய பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகள் சில மாதங்களுக்கு முன் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அங்கு அதானி விமான நிலையம் என பெயர் பலகை அமைக்கப்பட்டது.இதனை கண்டித்த சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதுடன், விமான நிலைய ஆணையத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பினர். இதையடுத்து விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட அதானி பெயர் பலகைகள் நேற்று அகற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE