நீட் தேர்வு ரத்து விவகாரம் அ.தி.மு.க., - பா.ம.க., வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு ரத்து விவகாரம் அ.தி.மு.க., - பா.ம.க., வலியுறுத்தல்

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை-'நீட் தேர்வு பற்றியஉண்மையான நிலையை அரசு உணர்த்த வேண்டும்' என அ.தி.மு.க.,வும், 'இத்தேர்வு சமூக நீதிக்கு தீங்கானது' என பா.ம.க.,வும் தெரிவித்துஉள்ளன.அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி, 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று, டாக்டராக வேண்டிய மாணவன் தனுஷை, மரணக்குழியில் தள்ளியிருக்கும் தி.மு.க., அரசே, 'நீட்'

சென்னை-'நீட் தேர்வு பற்றியஉண்மையான நிலையை அரசு உணர்த்த வேண்டும்' என அ.தி.மு.க.,வும், 'இத்தேர்வு சமூக நீதிக்கு தீங்கானது' என பா.ம.க.,வும் தெரிவித்துஉள்ளன.

அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி, 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று, டாக்டராக வேண்டிய மாணவன் தனுஷை, மரணக்குழியில் தள்ளியிருக்கும் தி.மு.க., அரசே, 'நீட்' தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? மாணவச் செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக் கூடாது.கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், நீட் தேர்வுநடைபெற்ற நிலையில், இன்று சட்ட சபையில் நீட் தேர்வை எதிர்த்து, இந்த அரசு தீர்மானம் கொண்டு வரப் போவதாக, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு உட்பட தமிழகத்தை பாதிக்கும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையாக எடுத்து வைத்து செயல்பட்டோம். தி.மு.க.,வை போல நாங்கள் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இனியாவது, மாணவச்செல்வங்களுக்கு, நீட் தேர்வு பற்றியஉண்மையான நிலையை உணர்த்துங்கள். தனுஷை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'நீட்' தேர்வு சமூக நீதிக்கு தீங்கானது; அது உடனே ரத்து செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், இந்த பிரச்னைக்கு தற்கொலை தீர்வு அல்ல.மாணவச் செல்வங்களின் உயிர் விலை மதிப்பற்றது. வாழ்ந்து சாதிக்க வேண்டிய அவர்கள், தவறான முடிவை எடுக்கக் கூடாது. மாணவர்கள் தங்களின் உயர் கல்வி குறித்த பார்வையை விசாலப்படுத்த வேண்டும். மருத்துவம் மட்டுமே உயர் கல்வி அல்ல.அதை விட சிறந்த வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய படிப்புகள் பல உள்ளன. அவற்றின் மீதும், கவனம் செலுத்த வேண்டும்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: இந்த தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் புதிய சட்டம், இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.அதற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றுத் தர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X