சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எதற்கும் ஒரு விலை வேண்டும்!

Updated : செப் 14, 2021 | Added : செப் 13, 2021
Share
Advertisement
மாயவரத்தான், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை புளியந்தோப்பு பகுதியில், 112 கோடி ரூபாய் மதிப்பில் 2018 - -2019ல் கட்டப்பட்ட குடியிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.தரமில்லாத கட்டுமான பொருட்கள் பயன்படுத்தியதால் கட்டடங்கள் வலுவிழந்து உள்ளன. கையால் தட்டினாலே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன; மேலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது.
 இது உங்கள் இடம்

மாயவரத்தான், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை புளியந்தோப்பு பகுதியில், 112 கோடி ரூபாய் மதிப்பில் 2018 - -2019ல் கட்டப்பட்ட குடியிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.

தரமில்லாத கட்டுமான பொருட்கள் பயன்படுத்தியதால் கட்டடங்கள் வலுவிழந்து உள்ளன. கையால் தட்டினாலே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன; மேலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

சரி, இது யார் தவறு?அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு, 'கமிஷன்' கொடுத்தது போக, மீதி இருக்கும் தொகையில் லாப பங்கை ஒப்பந்ததாரர் எடுத்த பின், ஏதோ இருக்கும் கொஞ்ச பணத்தில் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அதில் தரத்தை எப்படி எதிர்பார்க்கலாம்?புளியந்தோப்பு மட்டுமல்ல; குடிசை மாற்று வாரியம் கட்டியிருக்கும் அத்தனை குடியிருப்புகளும் மோசமாக, தரமற்ற முறையில் தான் கட்டப்பட்டு உள்ளன.குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் சுகாதாரமும் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. அங்கு வசிப்போர் சுற்றுப்புறத்தை அசுத்தமாக தான் வைத்துக் கொள்கின்றனர்.

அரசு அதிகாரிகள், அந்த குடியிருப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்வதே இல்லை. பலர், தங்கள் வீடுகளை உள்வாடகைக்கு விட்டு உள்ளனர்.மக்களுக்கு ஒரு பொருளை இலவசமாகக் கொடுத்தாலும், மிகக் குறைந்த விலையில் கொடுத்தாலும், அதன் தரம் இப்படி தான் மிக மோசமாக இருக்கும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசு நிதியில் மக்களுக்கு இலவசமாக கொடுத்த 'டிவி'க்கள் அனைத்தும் காயலான் கடைக்கு சென்றுவிட்டன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட மின்விசிறியின் கதியும் அதே தான்.'மிக்சி, கிரைண்டர், சைக்கிள், லேப்டாப்' என, தமிழக அரசு வழங்கிய அனைத்து இலவச பொருட்களும் தரமற்றவை தான்.

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலையை எத்தனை பேர் உடுத்துகின்றனர்? வடகம், வத்தல் காய போடுவதற்கு தான் அதை பயன்படுத்துகின்றனர்.ஆக, எதையும் இலவசமாக கொடுக்கக் கூடாது. எதற்கும் ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அதன் மதிப்பு புரியும். பணம் கொடுத்து வாங்கிய பொருளில் குறை இருந்தால், மக்களும் தட்டிக் கேட்க வேண்டும் என நினைப்பர்.

சிலையின் பயன் என்ன?

எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கருணாநிதிக்கு நினைவிடம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம், ஈ.வெ.ரா.,வுக்கு சிலை என, முதல்வர் ஸ்டாலின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதாவது அறிவித்தபடியே இருக்கிறார்.தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தை போற்றுவதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தான் பிரச்னையே!

நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்னதை போல, ஈ.வெ.ரா.,விற்கு 100 கோடி ரூபாயில் சிலை அமைக்க வேண்டும் என சொல்வோரை, அவர் உயிருடன் இருந்திருந்தால், தன் கைத்தடியால் துரத்தி அடித்திருப்பார்.ஈ.வெ.ரா., தான் பயன்படுத்திய எழுதுபொருள் முதல் தண்ணீர் வரை அனைத்திலும் சிக்கனத்தை கடைப்பிடித்தவர்

.தலைவர்களின் நினைவை போற்றுவதற்கு, மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தலாம்.ஏழை, எளிய மாணவர்களுக்கு விடுதி வசதியுடன் கூடிய கல்வி அளிக்கலாம். தொழில் பயிற்சி கூடங்கள் அமைக்கலாம். அறக்கட்டளை துவக்கி சமூக மேம்பாட்டுக்கு உதவலாம்.அதை எல்லாம் செய்யாமல், சிலை அமைப்பதால் என்ன பயன்?பறவைகள் எச்சம் போடும் பயன்பாடு தவிர வேறு எந்த பயனும் சிலையால் இல்லை.அரசு நிதியையும் வீணாக்கி, தலைவர்களையும் அசிங்கப்படுத்தாதீர்!
கொள்கைக்கு ஒண்ணு; கொள்ளைக்கு ஒண்ணு!

-வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஊரில் உள்ள ஒரு சில வீடுகளை பார்த்து, 'பிழைக்க தெரிந்த குடும்பம்' என விமர்சனம் செய்வர். காரணம் என்னவென்றால், அந்த குடும்பத்தில் உள்ளோர் ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சி களில் உறுப்பினர்களாக இருப்பர்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த குடும்பம் பலன் அடையும். அவர்கள் வீட்டு அலமாரியில், பல்வேறு கட்சிகளின் கரைவேட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

பிழைக்க தெரிந்த குடும்பம் போல, அரசியல்வாதிகள் சிலர், 'லெட்டர்பேடு' கட்சியில் பொறுப்பு வகித்தபடியே, இன்னொரு கட்சியின் மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கின்றனர். தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் உதிரி மற்றும் லெட்டர்பேடு கட்சிகள், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து கொள்கின்றன.

தங்கள் கட்சி சின்னத்தை புறக்கணித்து, 'உதயசூரியன்' சின்னம் அல்லது 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர்.அப்படி வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இன்று புலம்புகின்றனர்.'ஐயா... நான் அந்த கட்சியின் நிர்வாகியாக இருந்தேன்... தேர்தலின் போது இந்த கட்சியில் சேர்ந்து உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறேன்...' என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவதை பார்க்கும் போது வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

வி.சி., பொதுச்செயலராக இருந்த ரவிகுமார், 2019 லோக்சபா தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.இப்போது நீதிமன்றத்தில், 'நான் தி.மு.க., உறுப்பினர்; அதற்கான அடையாள அட்டையும் உள்ளது' என தெரிவித்து உள்ளார்.இவர் மட்டுமல்ல; பல்வேறு லெட்டர்பேடு கட்சி பொறுப்பாளர்களும், திராவிட கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகள்.பதவிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள், அனைத்து கட்சியிலும் சேர்ந்து உறுப்பினர் அட்டை வாங்கிக் கொள்ளலாம். 'ஆசைக்கு ஒரு குழந்தை; ஆஸ்திக்கு ஒரு குழந்தை' என்பது போல, கொள்கைக்கு ஒரு கட்சி; கொள்ளைக்கு ஒரு கட்சி என, பித்தலாட்ட அரசியல்வாதிகள், 'ஜோராக' வாழ்கின்றனர்!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X