இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்4 மாடி கட்டடம் இடிந்து விபத்துதானே: மஹாராஷ்டிராவின் தானேவில், 25 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் இருவர் பலியாயினர். இதையடுத்து, குடியிருப்பு 'சீல்'
இன்றைய கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்


4 மாடி கட்டடம் இடிந்து விபத்து

தானே: மஹாராஷ்டிராவின் தானேவில், 25 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் இருவர் பலியாயினர். இதையடுத்து, குடியிருப்பு 'சீல்' வைக்கப்பட்டதுடன், அங்கு வசித்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ரயிலில் சிக்கிய பெண் மீட்பு

பால்கர்: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் வசாய் ரயில் நிலைய தண்டவாளத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண் நின்றதை, பணியில் இருந்த போலீஸ்காரர் ஏக்நாத் நாயக் கவனித்தார். அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் ரயிலை நிறுத்த 'சிக்னல்' கொடுத்த அவர், விரைந்து சென்று அப்பெண்ணை நடைமேடைக்கு துாக்கினார்.அப்போது ரயிலும் அங்கு வந்தது. இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. மீட்கப்பட்ட பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது.

பலத்த மழை: 4 பேர் பலி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜி பஷீர் அகமது காரி குடும்பத்தினர், பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத் பகுதியில் வசித்தனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மிக பலத்த மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில் சிக்கிய ஹாஜி பஷீர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாயினர். ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றொருவரை மீட்பு படையினர் தேடுகின்றனர்


தமிழக நிகழ்வுகள்

தீவிபத்தில் தம்பதியர் பலி; பேரனே தீ வைத்ததாக சந்தேகம் உள்ளதாக போலீசார் விசாரணை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பாரதியார் தெருவில் உள்ள வீட்டினுள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காசியம்மாள், 70, காட்டுராஜா, 72, ஆகியோர் உயிரிழந்தனர் தம்பதி உயிரிழப்பு சந்தேகம் உள்ளதாக ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தம்பதியர் காங்கிரஸ் நிர்வாகி முன்னாள் ஊராட்சி தலைவர் ராணி தேசிங்கு என்பவரின் பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அவர்களுடை பேரனே தீ வைத்து கொன்றதாக சந்தேகம் வந்துள்ளதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.




latest tamil news




தனியார் பஸ் - சரக்கு வாகனம் மோதல் :அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், தனியார் பஸ், சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷடவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.கோவையில் இருந்து, தனியார் பஸ், பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி வந்தது.

குள்ளக்காபாளையம் பிரிவு அருகே வந்த போது, பொள்ளாச்சியில் இருந்து இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம், எதிர்திசையில் திரும்பி ரோட்டோரம் சென்றது.அப்போது பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சின் பக்கவாட்டு பகுதி மற்றும் கண்ணாடி சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். டிரைவர் உள்பட, இரண்டு பேர் லேசான காயமடைந்தனர். இரண்டு வாகனமும் மோதியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து விசாரித்தனர்.

தொடர் விபத்து

பொள்ளாச்சி - கோவை ரோட்டின் இருபக்கங்களிலும் கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கு செல்வதற்காக ரோட்டின் நடுவே இடைவெளி விடப்பட்டுள்ளது. இதனால், கிராம சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கவனிக்காமல் திரும்புவதால், கோவை ரோட்டில் வரும் வாகனங்களில் மோதுகின்றன.மேலும், ஒரு சில வாகனங்கள் விதிமுறை மீறி, ஒருவழிப்பாதையில் வருவதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய, அதிகாரிகள், போலீசார் இணைந்து கண்காணிப்பு பணி மற்றும் அங்கு விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சூலுார்:கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, வடமாநில வாலிபர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாக்கூர், சூலுார் அடுத்த, பட்டணம் காவேரி நகர் பகுதியில் தங்கி, கட்டட வேலை செய்துவந்தார்.அவருடன், உறவினரான மேற்கு வங்கத்தை சேர்ந்த சிபு தாக்கூரும், தங்கி, வேலை செய்து வந்துள்ளார். கடந்த, 5ம் தேதி இரவு, இருவருக்கும் இடையில் தகராறு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த சிபு தாக்கூர், ராஜேஷ் தாக்கூரை கடப்பாரையால் தாக்கி, கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.வழக்குப்பதிவு செய்த சூலுார் போலீசார், சிபு தாக்கூரை தேடி வந்தனர்.சிபு, ரயிலில் சென்னைக்கு, தப்பிச் சென்றதை அறிந்த போலீசார், அங்கு விரைந்தனர். அதற்குள், சிபு சொந்த ஊரான, மேற்கு வங்கம் மாநிலம், சேத்பாரா கிராமத்துக்கு தப்பிசென்றார்.தன்னை போலீசார் தேடி வருவதை அறிந்து, அச்சமடைந்த சிபு தாக்கூர், ஓடும்ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து மேற்கு வங்க போலீசார், சூலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டது குறித்த அறிக்கையை, கோர்ட்டில் தாக்கல் செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.


latest tamil news


சட்ட விரோதமாக லாரிகளில் மண் கடத்தல்

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, லாரிகளில் லோடு, லோடாய் ஏராளமான மண் கடத்தப்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர், வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காரமடை அருகே கிட்டாம்பாளையத்தில், தனியாருக்கு சொந்தமான, 47 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் லே-அவுட் போடும் பணிகள் நடைபெறுகின்றன.இந்த நிலத்தை சமன் செய்வதற்காக பொக்லைன், ஹிட்டாச்சி இயந்திரங்கள் வாயிலாக, மேடான பகுதியில் உள்ள மண்ணை, தோண்டி அள்ளும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு, எடுக்கப்படும் மண், கீரணத்தத்திற்கு, லாரிகளில் கடத்தப்படுகிறது.இங்கு மண் எடுத்து, லாரிகளில் காரமடை வழியாக, வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதற்கு, வருவாய்த் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக, அனுமதியின்றி, லாரிகளில் மண் எடுத்துச் செல்வதால், அரசுக்கு கிடைக்க வேண்டிய பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக நடைபெறும், மண் கடத்தலை தடுக்க வேண்டிய மேட்டுப்பாளையம் தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், முறையான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளாவிடம் கேட்டபோது,"லாரிகளில் மண் கடத்தல் குறித்து தகவல் வந்தது. உடனடியாக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அனுப்பி ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் மண்ணுடன் செல்லும் லாரிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.குற்றச்சாட்டுதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், காரமடை சுற்றுப்பகுதிகளில் செங்கல்சூளைகள் புற்றீசலாய் முளைத்துள்ளன. காரமடையில் தொடர்ந்து கனிமவளம் தொடர்பான புகார்கள் அதிகரித்து வந்தாலும், வருவாய்த்துறையோ, கனிமவளத்துறையோ உரிய நடவடிக்கை எடுப்பதாக இல்லை, என, சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விசாரிக்க சென்ற ஏட்டுக்கு விழுந்தது அரிவாள் வெட்டு

ஈரோடு-ஈரோட்டில், 'டாஸ்மாக்' கடையில் விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டை, இளநீர் வியாபாரி அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோட்டில், பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை பகுதியில், டாஸ்மாக் கடை செயல்படுகிறது. தண்ணீர் பந்தல்பாளையத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன், 45, நேற்று மதியம் மது வாங்க சென்றார். கடன் கேட்டு தகராறு செய்யவே, கருங்கல்பாளையம் போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.பணியில் இருந்த ஏட்டு ராஜு, 44, கடைக்கு சென்று விசாரித்தார். அப்போது, முருகன் மறைத்து வைத்திருந்த இளநீர் வெட்டும் அரிவாளால், ஏட்டை வெட்டினார்.

வலது மார்பு, வலது கையில் வெட்டு விழுந்து, ராஜு துடித்தார்.ரத்தம் கொட்டிய நிலையில் ஆம்புலன்சில், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.முருகனை அங்கிருந்தவர்கள் பிடித்து, கை, கால்களை கட்டி போட்டனர். கருங்கல்பாளையம் போலீசார் வந்து, முருகனை ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றனர்.சிகிச்சைக்கு பின், ஏட்டு உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


யானை தாக்கி விவசாயி பலி; உறவினர்கள் மறியல்

ஓசூர்-ஒற்றை யானை தாக்கி, மேலும் ஒரு விவசாயி பலியானார். அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே 10ம் தேதி, ஒற்றை யானை இருவரை தாக்கி கொன்றது.கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி ஏரி அருகே முகாமிட்டிருந்த அந்த யானை, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 65, என்பவரை தாக்கி கொன்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், வெங்கடேசன் சடலத்தை எடுக்க விடாமல், ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

வெங்கடேசனின் மனைவி தேன்மொழி, 54, அவரது மகன்கள் நிர்மல், 39, விமல், 35, ஆகியோரிடம் மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, முதல் கட்ட இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். மக்களை ஒற்றை யானை தாக்கி வருவதால், அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை எட்டு பேர் யானை தாக்கி இறந்துஉள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட போலி நீதிபதி கைது

அரியலுார்-இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட போலி நீதிபதி கைது செய்யப்பட்டார்.அரியலுார் மாவட்டம் பார்ப்பனச்சேரியைச் சேர்ந்த கண்ணன் மனைவி செல்வி என்பவருக்கும், அவரது சித்தப்பாவுக்கும் இடையே இடப் பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், பார்ப்பனச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மரியசூசை வியாகுலம், 64, என்பவர், செல்வியை சந்தித்து, தான் இசைவு தீர்ப்பாய நீதிபதி எனவும், இடப் பிரச்னை தொடர்பாக மாரியம்மாள் என்பவரும் மனு கொடுத்துள்ளார். எனவே, இடத்துக்கான ஆவணங்களை தர வேண்டும். இல்லாவிட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து, அரியலுார் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவிடம் செல்வி புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஆகஸ்ட் 19ல் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், மரியசூசை வியாகுலம் நீதிபதி இல்லை என்பதும், பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து, பார்ப்பனச்சேரியில் பதுங்கி இருந்த மரியசூசை வியாகுலத்தை நேற்று கைது செய்து, பெரம்பலுார் கிளைச் சிறையில் அடைத்தனர்.

கடையில் தீ விபத்து ரூ.1.50 கோடி நாசம்

வேலுார்-காட்பாடியில், வீட்டு உபயோக பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

வேலுார் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் ரமேஷ், 46. இவர், வள்ளிமலை சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்திருக்கிறார். கடைக்கு அருகில் குடோன் உள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.சிறிது நேரத்தில் அருகில் இருந்த குடோனுக்கும் பரவியது. காட்பாடி தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரண மாக தீ பிடித்தது, முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X