பொது செய்தி

தமிழ்நாடு

மனம் திறந்து பேசினால் மயக்கம் தெளியும் தற்கொலை எண்ணத்தை போக்க மனநல மருத்துவர் ஆலோசனை

Added : செப் 13, 2021
Share
Advertisement
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, வயது வித்தியாசமின்றி தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, தற்கொலை என்பது ஏதாவது ஒரு பகுதியில் நடக்கும் அரிய சம்பவமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக தற்கொலையில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தொழில் நஷ்டம், கடன்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, வயது வித்தியாசமின்றி தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, தற்கொலை என்பது ஏதாவது ஒரு பகுதியில் நடக்கும் அரிய சம்பவமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக தற்கொலையில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தொழில் நஷ்டம், கடன் பிரச்னை, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, உடல் நலக்குறைவு, வாழ்க்கை பிரச்னை, மதுபோதை, கள்ளத் தொடர்பு அம்பலம் என, தற்கொலைக்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், தற்கொலையில் ஈடுபடுவோர், மனதளவில் பாதிக்கப்படுவதே அவர்களின் தவறான முடிவுக்கு காரணமாக அமைவதாக, மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், சமீபத்தில் மிகக்குறுகிய காலத்தில், 150க்கும் மேற்பட்டோர், தற்கொலை செய்ததாக, காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த, 6ம் தேதி, ஒரே நாளில், வட சென்னை பகுதியில் மட்டும், ஆறு பேர் தற்கொலை செய்துள்ளனர்.இது குறித்து, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த, மனநலத் துறை மருத்துவர் டி.சாய் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதை, அவரின் பேச்சு மற்றும் அவர் நடந்து கொள்ளும் விதத்தில் எளிதாக கண்டறிந்துவிடலாம். கடும் மன உளைச்சலில் இருப்போர், பேச்சு அல்லது வழக்கமான செயலில் இருந்து மாறுபடுவர். மன அழுத்தம் பற்றி நண்பர்களுக்கோ, நெருக்கமான உறவினர்களுக்கோ, நேரடியாகவோ, மறைமுகமாகவே உணர்த்துவார்.அதை சரியாக புரிந்து கொண்டு, 'உனக்கு நான் இருக்கேன்' என்ற நம்பிக்கையான பேச்சின் மூலம், அவரது தற்கொலை எண்ணத்தில் தளர்வை ஏற்படுத்தி, உடனடியாக உரிய மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று, 'கவுன்சிலிங்' பெற வைக்கலாம்.அதே போல், தற்கொலை எண்ணம் உள்ளவர்கள், அது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவிக்க வேண்டும். மனம் திறந்து பேச வேண்டும். அவர்கள் நம்மை ஏளனமாக பார்ப்பார்களே என, தயக்கம் கொள்ளக் கூடாது.

மனிதர்களில் அனைவருக்குமே, குறைந்தபட்சம், ஒரே ஒரு நபராவது நம்பிக்கைக்கு உரியவராக இருப்பர். மிகவும் ரகசியமான அல்லது சென்சிடிவான விஷயங்களை, அந்த நம்பிக்கைக்கு உரியவரிடம் மனம் திறந்து பேச வேண்டும். பெரியவர்கள் தற்கொலை செய்வதே தவறான முடிவு எனும் போது, தேர்வில் தோல்வி, பெற்றோர் கண்டிப்பு ஆகியவற்றால், சிறுவர்கள் எடுக்கும் திடீர் தற்கொலை முடிவு துரதிஷ்டவசமானது.ஏனென்றால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அல்லது திட்டம் ஏதும் இருக்காது.பெற்றோர் கண்டித்தால், அவர்களிடம் தங்களது எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமல், தற்கொலை செய்து கொள்கின்றனர். அது அவர்களையும் அறியாமல் நிகழ்ந்து விடுகிறது.இதனால், முதலில் பெற்றோர் விழிப்புணர்வு பெற வேண்டும். பிள்ளைகளை கண்டிப்பதில் முரட்டுத்தனத்தை கையாளக்கூடாது. ஏனென்றால், பள்ளிக்கூடத்தில், வெளியில் பிரச்னை என்றால், நமக்கு ஆதரவாக பேச பெற்றோர் உள்ளனர் என்ற நம்பிக்கையில், பிள்ளைகள் இருப்பர்.பிள்ளைகளுக்கு எது தெரியும், எது வரும் என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும். அவர்களை புரிந்து கொண்டு, இக்கட்டான சூழலில் அவர்களுக்கு ஆதரவாக பேச வேண்டும். எதையும் கட்டாயப்படுத்தி செய்ய வைப்பதில் எந்தப் பலனும் ஏற்படாது.

பிடிக்காத துறையை தேர்வு செய்ய வைத்து, பிள்ளைகளை படி படி என கூறுவதால், அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்குமே தவிர, கற்கும் திறம் நிச்சயம் மேம்படாது.அதே போல், குறிப்பிட்ட துறையில் மட்டும் தான் சாதிக்க முடியும் என்ற தவறான எண்ணத்தை பெற்றோர் முதலில் கை விட வேண்டும். அதை பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். சிறுவர் - சிறுமியர் தங்கள் மற்றும் பெற்றோர் மீதான நம்பிக்கை சிதையும் போது தான், அவர்கள் குழப்பமான முடிவை எடுக்கின்றனர். அதனால், ஒருவருக்கு ஒருவர், மனரீதியான நட்பையும், நம்பிக்கையையும் உறுதிப்படுத்திக்கொண்டால், தற்கொலைகளை தடுக்கலாம். மனிதர்கள் அனைவருமே தங்கள் மனம் திறந்து பேச கற்றுக்கொண்டால், மன அழுத்தம் என்பதே இல்லாமல் போகும்.அழுத்தமற்ற மனது, குழப்பத்திற்கு ஆளாகாது. குழப்பமற்ற மனம் எந்த வித தவறான முடிவையும் எடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார். மனம் ஒருமுகப்படும்!மாணவர்கள் மற்றும் படிப்பை முடித்து, குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் உள்ள இளைஞர்கள், சொற்ப காரணங்களுக்காக, தற்கொலை செய்து கொள்வது, அவர்களது குடும்பத்தை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக, மாணவர்களின் தற்கொலைகள், முழுமையாக தடுக்கப்பட வேண்டும். அதற்கு, பள்ளிகளில் யோகா, தியான வகுப்புகளை நடத்த வேண்டும். அந்த பழக்கம், வாழ்நாள் முழுக்க அவர்களை, மனதளவில் தைரியமாகவும், தெளிவாகவும் வைத்திருக்கும். நல்ல நினைவாற்றலையும் கொடுக்கும். இதன் மூலம் மனம் ஒருமுகப்பட்டு, லேசாகும் என்பதால், தவறான முடிகள் எடுப்பதை தடுக்க முடியும். சு.சேகரன், 51,சமூக ஆர்வலர், கொரட்டூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X