சூரிய ஒளி மின்சக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சூரிய ஒளி மின்சக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த

Added : செப் 13, 2021
Share
புதுச்சேரி : 'அரசு கட்டடங்கள் மற்றும் பெரிய கட்டடங்களில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி சாதனங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைப்பது கண்டிப்பான தேவையாகி உள்ளது' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக, ஹெலிகாப்டர் மூலம் நேற்று புதுச்சேரி வந்தார். லாஸ்பேட்டை ஏர்ப்போர்ட்டில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி,
 சூரிய ஒளி மின்சக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த

புதுச்சேரி : 'அரசு கட்டடங்கள் மற்றும் பெரிய கட்டடங்களில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி சாதனங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைப்பது கண்டிப்பான தேவையாகி உள்ளது' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக, ஹெலிகாப்டர் மூலம் நேற்று புதுச்சேரி வந்தார். லாஸ்பேட்டை ஏர்ப்போர்ட்டில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனி ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் விழா அரங்கிற்கு வந்தார்.ஜிப்மரில் ரூ. 7.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் திட்டத்தை துவக்கி வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்ட மக்களும் கொரோனா காலத்தில் ஜிப்மரில் சிகிச்சை பெற்றுள்ளனர். உலகின் அழகிய நகரமான புதுச்சேரி, இந்திய பாரம்பரியம் மற்றும் பிரெஞ்சு கட்டடக் கலைகளின் தனித்துவமான, சங்கமிக்கும் இடமாக உள்ளது.

கல்வி, சுற்றுலா மற்றும் ஆன்மிகத்தின் செழிப்பான மையமாக விளங்குகிறது.சூரிய மின் உற்பத்தி கூரை அமைக்க ஜிப்மர் வளாகத்தில் உள்ள 15 மருத்துவமனை மற்றும் விடுதி கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மின் ஆலை ஜிப்மரின் 15 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்யும். இதன்மூலம், 1.5 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்படும். புதுப்பிக்கவல்ல எரிசக்தி பயன்படுத்துதலில் இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது.சூரிய ஒளி மின் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. அரசு கட்டடங்கள் மற்றும் பெரிய கட்டடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனம் பொறுத்துதல், மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைப்பது கண்டிப்பான தேவை.

இவற்றை மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டும்.கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சூரிய சக்தி மின் திட்டத்திற்கு அரசு மானியம் தருகிறது. இதற்கான சாதனங்களை பொருத்த முதலில் நிதி தேவைப்பட்டாலும், நீண்ட காலம் பயன் தரும். மின் கட்டணம் செலுத்தும் தேவை இருக்காது.கடந்த இரண்டு வருடமாக வரலாறு காணாத தொற்று நோயை எதிர்த்து போராடி வருகிறோம். கொரோனா, நமது சுகாதார அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது.காற்று மற்றும் சூரிய ஒளி இயற்கையின் பரிசுகள். அவை நமது ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நம் முன்னோர் புரிந்து வைத்திருந்தனர்.

அது, அவர்களின் கட்டட அமைப்புகளில் பிரதிபலித்தது.வாழ்விடம் மற்றும் பணியிடங்களில் போதுமான காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி இருக்க வேண்டும். நடுவில் இவற்றை நாம் மறந்து விட்டோம். புதிய கட்டடங்கள் கட்டும்போது இயற்கையான காற்று வந்து செல்லும் வகையிலும், சூரிய ஒளி உள்ளே வரும் வகையிலும் புதிய கட்டமைப்பு அவசியமாகிறது.கொரோனா தீவிர நோயாளிகளை சிறப்பாக கையாண்ட ஜிப்மர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.இவ்வாறு, துணை ஜனாதிபதி பேசினார்.நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், ஆறுமுகம், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X