பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2019ம் ஆண்டு காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல், ‛‛பா.ஜ.,வில் இணைய தனக்கு எவ்வளவு பணம் கேட்டாலும் தரத் தாயாராக இருந்தார்கள்,'' என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் பா.ஜ., 104 இடங்களிலும், காங்., 80 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் வென்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரசும், ம.ஜ.த.,வும் இணைந்து ஆட்சி அமைத்தது. ம.ஜ.த., தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். வெறும் 14 மாதங்களே நீடித்த இந்த ஆட்சியில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
காங்.,கை சேர்ந்த 14 பேரும், ம.ஜ.த.,வை சேர்ந்த 3 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் காங்.,கை சேர்ந்த ஒருவர் மட்டும் ராஜினாமாவை திரும்ப பெற்றாலும், காங்., - ம.ஜ.த., கூட்டணி பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. ராஜினாமா செய்த 16 பேரும் பா.ஜ.,வில் இணைந்தனர். இதனையடுத்து பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில், பா.ஜ.,வில் இணைந்தவர்களில் 12 பேர் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ., ஆனார்கள்.

அதில் முக்கியமானவராக பார்க்கப்படும் ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல், எடியூரப்பா அமைச்சரவையிலும் இடம்பெற்றார். சமீபத்தில் முதல்வர் பதவியை விட்டு எடியூரப்பா விலகியதை அடுத்து, பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் ஸ்ரீமந்த் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஸ்ரீமந்த் பாலாசாகேப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஒரு ரூபாய் கூடப் பெறாமல் பா.ஜ.,வில் இணைந்தேன். கட்சியில் சேர எனக்குப் பணம் கொடுப்பதாகத் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம். ஆனால் நான் பணத்தைக் கேட்கவில்லை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதால் அமைச்சர் பதவியை மட்டுமே கேட்டேன். இப்போதுள்ள அரசு எனக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? என எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் எனக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் கூட பேசியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீலின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் காங்கிரஸ் உள்ளிட்ட அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.