படிச்சு தெரிஞ்சுக்குங்க முதல்வரே!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

படிச்சு தெரிஞ்சுக்குங்க முதல்வரே!

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
படிச்சு தெரிஞ்சுக்குங்க முதல்வரே!ரா.கணேசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.தமிழக அரசியல்வாதிகளுக்கு சி.ஏ.ஏ., சட்ட திருத்த மசோதா குறித்த புரிதல் இல்லையோ என தோன்றுகிறது.கடந்த 1955ல் அமல்படுத்தப்பட்ட சி.ஏ.ஏ., சட்டத்தில் சிறு மாற்றங்கள் தற்போது


படிச்சு தெரிஞ்சுக்குங்க முதல்வரே!


ரா.கணேசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.தமிழக அரசியல்வாதிகளுக்கு சி.ஏ.ஏ., சட்ட திருத்த மசோதா குறித்த புரிதல் இல்லையோ என தோன்றுகிறது.கடந்த 1955ல் அமல்படுத்தப்பட்ட சி.ஏ.ஏ., சட்டத்தில் சிறு மாற்றங்கள் தற்போது செய்யப்பட்டன; அவ்வளவே!இந்தியாவிற்கு அகதியாக வந்த ஒருவர், எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும், 11 ஆண்டுகளுக்கு பின் அவரின் நன்னடத்தையை பொறுத்து, குடியுரிமை பெறுவார் என்பது 1955 முதல் இருந்து வரும் சி.ஏ.ஏ., சட்டம்.இதில், பா.ஜ., அரசு செய்துள்ள திருத்தம் சரியான விஷயம் தான்.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து சிறுபான்மையினரான ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர், பவுத்தர், சமணர், பார்சி சமூகத்தினர் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்தால், ஐந்து ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம்.இந்த சட்ட திருத்தம் மூலம் 2014 டிசம்பருக்கு முன் வந்த 31 ஆயிரம் அகதிகள், இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர். இப்போது சட்ட திருத்தத்தை திரும்ப பெற, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவதால் என்ன பயன்?இந்த சி.ஏ.ஏ., சட்ட திருத்தம், 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., அளித்த வாக்குறுதி தான். பா.ஜ.,விற்கு அளிக்கப்பட்ட ஓட்டுகள், அக்கட்சி அளித்த வாக்குறுதிக்கும் சேர்த்து தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மை மக்களுக்கு, இந்த குடியுரிமை சலுகை வழங்குவதில் நியாயம் உள்ளது; ஆனால், அந்நாடுகளில்வசிக்கும் பெரும்பான்மை மக்களான இஸ்லாமியருக்கு, அந்த சலுகை வழங்க வேண்டிய அவசியம் இல்லையே!உலகில் இருக்கும் மற்ற இஸ்லாமிய நாடுகள், அவர்களுக்கு உதவலாமே! ஆனால், சிறுபான்மையோருக்கு இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை.பா.ஜ., சிறுபான்மையோருக்கு எதிராக செயல்படும் கட்சி என்றால், இந்த திருத்த மசோதாவில் கிறிஸ்துவருக்கு அந்த சலுகை வழங்கப்பட்டு இருக்காது.

கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து லட்சம் இலங்கை அகதிகள், இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர்; தற்போது 90 ஆயிரம் அகதிகள் உள்ளனர். அவர்கள், தாய்நாடான இலங்கைக்கு திரும்புவதையே விரும்புகின்றனர்.இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்பட்டால், இலங்கை அரசு அதை ஒரு வாய்ப்பாக கருதி, மொத்த தமிழர்களையும் அங்கிருந்து விரட்டியடிக்க துணியும்.முதல்வர்- ஸ்டாலின் அவர்களே... சட்டசபை தீர்மானம் உங்களுடைய புரிதலின்மையை காட்டுகிறது அல்லது சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை தக்க வைத்துக்
கொள்ளும் முயற்சியாக தெரிகிறது.முதல் விஷயம் என்றால், படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது விஷயம் தான் உண்மையானால், அந்த ஓட்டுகள் எப்போதும் உங்களுக்கே. அதற்காக நீங்கள்
இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை.


அறிவிப்பு பலகை காமெடி!சுந்தரமூர்த்தி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.தரிசனம் முடிந்து வெளியே வரும்போது, முன் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் உள்ள விபரங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.அதில், கட்டட வணிகம் மற்றும் மனை வணிகம் வாடகை நிலுவையில் அதிகம் உள்ள முதல் 16 நபர்கள், குடியிருப்பு மற்றும் மனை குடியிருப்பு வாடகை நிலுவையிலுள்ள முதல் 20 நபர்கள் என வகைப்படுத்தி இருந்தனர்.
கடந்த 2019 ஜூன் வரையில், இரண்டு வகையிலும் நிலுவையில் உள்ள மொத்த தொகை 1.03 கோடி ரூபாய். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நிலுவை தொகையின் அளவு மேலும் அதிகரித்து இருக்கும்.கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தை வணிக நோக்கத்திற்காக வாடகைக்கு பயன்படுத்திய நபர் ஒருவர் மட்டும், 21.64 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார். கூட்டுறவு பண்டகசாலை நிறுவனம், 17.54
லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

கோவில் சொத்து மற்றும் கடையை, பிற மதத்தினருக்கு கொடுக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் பிற மதத்தினருக்கு கோவில் சொத்தை பயன்படுத்த அனுமதித்தது மட்டுமல்லாமல், 15 லட்சம் ரூபாய் வாடகையை வசூல் செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.ஜம்புகேஸ்வரர் கோவிலில் மட்டுமல்ல, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இதே நிலை தான் இருக்கிறது.இப்படி அறிவிப்பு பலகை வைத்தால், தங்கள் மானம் போய்விடும் என்பதால், நிலுவை தொகையை உடனே செலுத்தி விடுவர் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நினைக்கின்றனர் போலும். அதெல்லாம் நடக்கவே நடக்காது!
மின்சார கட்டணம் முதல் விற்பனை வரி வரை அனைத்தையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் செலுத்த தவறினால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. கோவிலுக்கு வர வேண்டிய தொகையை மட்டும் வசூலிப்பதில், அறிவிப்பு பலகையை மட்டும் வைத்து அறநிலைய துறை காமெடி செய்கிறது.


காமெடி கோரிக்கை!ரா.சேது, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநில தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில், 'தேர்தல் நேரத்தை நீட்டிப்பது வன்முறைக்கு வழிவகுத்து விடும்' என, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்திய ஒருமித்த கோரிக்கையை கேட்டபோது, சிரிப்பு தான் வந்தது.ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிக்காமல் இருந்தால் மட்டும் அத்துமீறல் நடக்காதா? தமிழகத்தில் எந்த தேர்தலாவது வன்முறையின்றி நடந்திருக்கிறதா? அதுவும் உள்ளாட்சி தேர்தல் என்றால் கேட்கவே வேண்டாம்... முறைகேடு, வன்முறை எல்லாம் தாராளமாக நடக்கும்.தேர்தல் கால தில்லுமுல்லில், இரு திராவிட கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல; அது அக்கட்சியினருக்கு கை வந்த கலை!திராவிட கழகங்களை பின்பற்றி, இப்போது அனைத்து கட்சியினரும் தங்கள் பங்கிற்கு வன்முறையில் துணிந்து ஈடுபடுகின்றனர்.ஓட்டுச்சாவடிக்குள் புகுந்து ஊழியர்களிடம் சண்டையிடுவது, கள்ள ஓட்டு போடுவது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை துாக்கிச் செல்வது என எல்லாம் நடக்கிறது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது, குவார்ட்டர், பிரியாணி வழங்குவது என எல்லாமே குற்றங்களே.'அரசியல் கட்சியினர் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால், ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிக்க முடியாது' என, தேர்தல் ஆணையம் தான் சொல்ல வேண்டும். ஆனால் அதை அரசியல்வாதிகள் சொல்வது, நிச்சயம் காமெடியான கோரிக்கை தான்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X