சேலம்: ''கவிதை எழுதுவதற்கு அதிக நேரம் சிந்தியுங்கள்,'' என, எழுத்தாளர் சோ.தர்மன் பேசினார்.
சேலம், முள்ளுவாடி கேட் அருகே எழுத்துக்களம் அமைப்பு சார்பில், சூர்யநிலாவின் நீர்க்காகம் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. தாரை ஆ.குமரவேல் தலைமை வகித்தார். சிறப்பாளராக பங்கேற்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், கவிதை நூலை வெளியிட்டு பேசியதாவது: கவிதைகள் தற்போது அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. முகநூலில் கவிதைகள் எழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்கள் என சொல்லி கொண்டு உள்ளனர். ஆனால் கவிஞர்கள் அப்படி அல்ல. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சங்க இலக்கியம் நிற்பது போல், கவிதைகளை கவிஞர்கள் எழுத வேண்டும். கவிதை எழுதுவதற்கு அதிக நேரம் சிந்தியுங்கள். அதோடு வாழ்க்கை நடத்துங்கள். அதன் பின்பு கவிதையை பொதுவெளிக்கு விடலாமா என யோசியுங்கள். என்னை பொறுத்தவரை நாவல் எழுதுவதற்கு அவசரம் காட்டுவது கிடையாது. ஒரு நாவலுக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் கூட எடுத்து கொள்வேன். 600 பக்கம் எழுதிய நாவலில், 400 பக்கம் சரியில்லையென்றால் கிழித்து விடுவேன். 200 பக்கத்தை வைத்து கொண்டு மறுபடியும் எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதிய நாவல்கள் தான் தூர்வை, கூகை, சமீபத்தில் விருது பெற்ற சூல் நாவல். எழுத்தை வெளி உலகத்துக்கு கொடுக்கும் போது, அதிக பொறுமையாக, நன்றாக சிந்தித்து கொஞ்சமாக எழுத வேண்டும். நிதானமாக உங்கள் இலக்கிய பயணங்களை தொடருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE