பெகாசஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | Dinamalar

'பெகாசஸ்' வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : செப் 15, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி : மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துள்ளது. வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக
 'பெகாசஸ்' வழக்கு, தீர்ப்பு ஒத்திவைப்பு ,  மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி : மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துள்ளது. வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


கூடுதல் அவகாசம்

இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 'இந்தப் பிரச்னை தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பார்லி.,யில் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். பொய்யான தகவல்களின் அடிப்படையில் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையதால், விரிவான பதில் மனு அளிக்க மத்திய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.'நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தெரிவிக்க தேவையில்லை. அதே நேரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹீமா கோஹ்லி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.


விரிவான பதில்

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:ஒரு குறிப்பிட்ட நாட்டின் உளவு மென்பொருளை நம் அரசு பயன்படுத்தியதா என்பது குறித்து பொதுப்படையாக எதையும் தெரிவிக்க முடியாது. இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பான விஷயம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை. போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக நிபுணர்கள் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமர்வு உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைக்கிறோம். அடுத்த சில நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்.அதற்குள் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றி, விரிவான பதில் மனு தாக்கல் செய்ய முன்வந்தால் தெரியப்படுத்தலாம்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X