திருநெல்வேலி--இளங்கலை சட்டப்படிப்பில் தங்கபதக்கம் வென்ற மாணவர்கள் கூட முதுகலையில் சேர முடியாத சூழலை அரசின் புதிய திட்டம் உருவாக்கி உள்ளது.
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலையின் கீழ் சென்னையில் இரண்டு கல்லுாரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 13 கல்லுாரிகள் உள்ளன. பிளஸ் 2 முடித்து 5 ஆண்டு சட்டம் பயிலும் மாணவர்களும், ஏற்கனவே ஏதாவது பட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகள் சட்டம் பயிலும் மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர்.2016--2017 கல்வி ஆண்டு வரையிலும் இரு தரப்பு மாணவர்களும் எழுத்து தேர்வுகள் மூலமே தேர்ச்சி பெற்றனர்.
2017--2018 கல்வி ஆண்டு முதல் புதிய தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 70 சதவீத மதிப்பெண்ணுக்கு எழுத்து தேர்வும், 30 சதவீதத்திற்கு அகமதிப்பீடும் செயல்படுத்தப்படுகிறது.100 சதவீத எழுத்து தேர்வு முறையில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் கிடைப்பதில்லை. ஆனால் புதிய தேர்வுமுறையில் 70 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்களை எளிதில் பெறுகின்றனர்.2020ல் முதுகலை சட்டம் பயில விண்ணப்பித்த இருதரப்பு மாணவர்களுக்கும் ஒரே கட்ஆப் அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.இதில் 5 ஆண்டு முடித்தவர்கள் பழைய முறையிலும் 3 ஆண்டு படித்தவர்கள் புதிய முறையிலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். 3 ஆண்டு மாணவர்களுக்கு அக மதிப்பெண் அதிகம் வழங்கப்படுவதால் அதிக முன்னிலை பெறுகின்றனர்.
மொத்தமுள்ள 360 இடங்களில் பெரும்பான்மையான இடங்கள் மூன்றாண்டு மாணவர்களுக்கே கிடைத்தது. பல்கலை அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்ற 5 ஆண்டு மாணவர்களுக்கு கூட இடம் கிடைக்கவில்லை.கட்ஆப் மதிப்பெண்ணும் மிகவும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் அரசுக்கும், சட்டக்கல்வி இயக்குநரத்திற்கும் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை.
கடந்த ஆண்டு, நடப்பாண்டில் இறுதியாண்டு முடித்த 5 ஆண்டு மாணவர்கள் மட்டுமே இந்த பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.எனவே 100 சதவீத மதிப்பெண்ணுக்கும் தேர்வு எழுதிய 5 ஆண்டு மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் முதுநிலை மாணவர் சேர்க்கையை அரசு நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE