விருத்தாசலம் : மது போதையில் சுற்றி வரும் துணை பி.டி.ஓ., வை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர், கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று காலை 11:30 மணிக்கு துவங்க இருந்தது. அதிகாரிகள் மரியாதை அளித்து அழைக்கவில்லை என கூறி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வராசு, பாக்யராஜ், சரவணன், அய்யாசாமி, குணசேகர் ஆகியோர் வெளியேற முயன்றனர். ஒன்றிய சேர்மன் செல்லத்துரை சமாதானப்படுத்தினார். பின், நடந்த கூட்டத்திற்கு சேர்மன் செல்லத்துரை தலைமை தாங்கினார். துணை சேர்மன் பூங்கோதை, பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமாரி, முருகன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., சிவா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.கவுன்சிலர் சரவணன் (பா.ம.க., ) பேசுகையில் எருமனுாரில் ஊராட்சியில் நடந்து வரும் 100 நாள் வேலைத் திட்ட என்.எம்.ஆர் பதிவேட்டை கிழித்தெறிந்த ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எருமனுார் ஊராட்சியை கவனிக்கும் துணை பி.டி.ஓ., மதுபோதையில் 24 மணி நேரமும் தலைவருடன் சுற்றி வருகிறார். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார். அதற்கு யாரும் பதிலளிக்காததால் கவுன்சிலர் சரவணன், துணை பி.டி.ஓ., ராஜேஷை எழுந்து பதில் கூறுங்கள் என ஆவேசமாக கூறினார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், நான் மது குடித்ததை நீங்கள் பார்த்தீர்களா என கேட்டார். ஆமாம் நான் தெரிந்து தான் கூறினேன். படம் எடுத்து காட்டவா என சரவணன் கேட்டார். அதற்கு பதிலளித்த பி.டி.ஓ., ஜெயக்குமாரி, இது போன்று துணை பி.டி.ஓ., செயல்பட மாட்டார். நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் முகாம்கள் நடந்ததால் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது என்றார். தன்னை பற்றி பேசிய கவுன்சிலரை கண்டித்து துணை பி.டி.ஓ., ராஜேஷ் அரங்கை விட்டு வெளியேறினார். அவருடன் பணியாற்றும் சக அலுவலர்களும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. கவுன்சிலரின் பேச்சை கண்டிக்கிறோம் என கூறி வெளிநடப்பு செய்தனர்.ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், பாக்யராஜ், செந்தில்குமார், அய்யாசாமி, செல்வராஜ், குணசேகர், ரோசி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். பின், ஒன்றிய சேர்மன் செல்லத்துரை, பி.டி.ஓ., ஜெயக்குமாரி சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். பின் நடந்த கூட்டத்தில் தங்களது பகுதி குறைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டனர்.ஒன்றிய கவுன்சிலர், துணை பி.டி.ஓ., ஒரு குடிமகன் என கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.