நெல்லிக்குப்பம் : வெள்ளப்பாக்கம் அரசு நெல் விதைப்பண்ணை இடத்தில் கடலுார் நகராட்சி குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் தமிழக அரசின் நெல் விதைப்பண்ணை 100 ஏக்கர் பரப்பில் செயல்பட்டது. அது பல ஆண்டுகளாக செயல்படாததால் முட்புதர்கள் வளர்ந்து பாழாகி வருகிறது. அந்த நிலத்தில் சில ஏக்கர் இடத்தை போலீசார் குடியிருப்பு கட்ட எடுத்து கொண்டனர். மீதியுள்ள இடத்தில் 40 ஏக்கர் பரப்பில் கடலுார் நகராட்சிக்கு குப்பை கிடங்காக மாற்ற முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் இடத்தை சுத்தம் செய்ய வந்த பொக்லைன் இயந்திரத்தை மக்கள் மறித்து திருப்பி அனுப்பினர். குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் பெண்கள் உட்பட 500 பேர் நேற்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் துவக்கினர். தாசில்தார் பலராமன், டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், பி.டி.ஓ., சக்தி பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் உள்ளதால் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுசூழல் பாதிக்கும். மீண்டும் விதைப்பண்ணை அமைத்தால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்கள் பகுதி மக்கள் அனைவருக்கும் மனைபட்டா வழங்க வேண்டும். குப்பை கொட்டுவதை உயிரை கொடுத்தாவது தடுப்போம் என்றனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு கிடைக்காததால் சமாதானம் கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என அதிகாரிகள் கூறியதையேற்று 2 மணி நேரத்துக்கு பிறகு 12 மணிக்கு கலைந்து சென்றனர். அதிகாரிகளை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE