பீய்ஜிங்: டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இலக்கு என்று சீனா அஞ்சுகிறது. இதன் காரணமாக வைரஸ் பரவும் இடங்களில் ஆங்காங்கே பள்ளிகளை மூடி வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் கொரோனா உலகமெங்கும் பரவிவிட்டது. கொரோனா முதல் அலையை சீனா தீவிர லாக்டவுன், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தியது. இது உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது.
இந்நிலையில், உலகளவில் பல்வேறு நாடுகளிலும் இரண்டாவது, மூன்றாவது அலை என்று வேகமெடுக்க சீனா ஆங்காங்கே ஏற்படும் தொற்றுகளுக்கு ஏற்ப நுண் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி வந்தது.

இந்நிலையில், தென் சீனப் பகுதியில் பல்வேறு நகரங்களிலும் ஒரே நாளில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பள்ளிக் குழந்தைகள் வாயிலாகப் பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு தென்பட அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 14 நாட்கள் தனிமையில் இருந்த அந்த நபருக்கு பரிசோதனையில் நெகடிவ் என்றே வந்துள்ளது. ஆனால், அதன் பின்னர் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை எனத் தெரிகிறது.

சீனாவில் ஆங்காங்கே டெல்டா வைரஸ் பாதிப்பு தென்படுவதால் அந்நாடு டெல்டாவைக் கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இன்று செப்.,14 மட்டும் புஜியானில் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இப்போது டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இலக்கு என்று சீனா அஞ்சுகிறது.
புட்டியான் நகரில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம், ‛‛சீன மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீண்டும் கொரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE