புதிய பணிகள் துவங்கல; பழைய பணிகளும் பாதியில்...!| Dinamalar

புதிய பணிகள் துவங்கல; பழைய பணிகளும் பாதியில்...!

Added : செப் 14, 2021 | |
''நம்ம பேசுறது, பலருக்கும் கேக்குதுக்கா'' என்று, மித்ரா சொன்னதும், வியப்புடன் பார்த்தாள், சித்ரா.''திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில படிக்கிற செவிலிய மாணவிகளுக்கு தரமான உணவு தர்றது இல்லைன்னு, பேசினோம்ல. இந்த விஷயமா சமையலர், உதவியாளரை மாத்திட்டாங்களாம். இப்ப பெரிய டாக்டரே சாப்பாட்டை ருசிபார்க்க ஆரம்பிச்சுட்டாராம்.''அந்த மருத்துவமனையில சிகிச்சை
புதிய பணிகள் துவங்கல; பழைய பணிகளும் பாதியில்...!


''நம்ம பேசுறது, பலருக்கும் கேக்குதுக்கா'' என்று, மித்ரா சொன்னதும், வியப்புடன் பார்த்தாள், சித்ரா.

''திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில படிக்கிற செவிலிய மாணவிகளுக்கு தரமான உணவு தர்றது இல்லைன்னு, பேசினோம்ல. இந்த விஷயமா சமையலர், உதவியாளரை மாத்திட்டாங்களாம். இப்ப பெரிய டாக்டரே சாப்பாட்டை ருசிபார்க்க ஆரம்பிச்சுட்டாராம்.

''அந்த மருத்துவமனையில சிகிச்சை பலனளிக்காம இறந்து போறவங்களோட சடலத்தை, அவங்க வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க தான் இலவச அமரர் ஊர்தி இருக்கு. ஆனா, அது வெளிய போயிருக்கு; கண்டிஷன் சரியில்லைனு ஏதேதோ காரணம் சொல்லிடறாங்களாம். இதனால, மூவாயிரத்துல இருந்து அஞ்சாயிரம் வரை செலவழிச்சு, தனியார் ஆம்புலன்ஸ்ல சடலத்தை எடுத்துட்டு போக வேண்டியிருக்குனு நிறைய பேரு புலம்பறாங்க...

''இதுல கமிஷன் பாக்கிறாங்கன்னு பேசிக்கிறாங்க. இதையும் பெரிய டாக்டர் கவனிச்சு சரிபண்ணாருன்னா நல்லா இருக்கும்'' என்றாள் மித்ரா.புரோக்கர் மூலம் வசூல்''கமிஷன்னு சொன்ன உடனே, ஞாபகம் வருது. நெருப்பெரிச்சல்ல இருக்கிற பத்திரப்பதிவு ஆபீஸ்ல, பத்திரப்பதிவு செய்றவங்களோட இடத்தை கள ஆய்வு செஞ்சு முடிச்சதுக்கு அப்புறமா, புரோக்கர் மூலமா, அதிகாரிகள், கமிஷன் தொகையை வசூல் பண்ணிக்கிறாங்களாம்.

'அங்க மட்டுமில்ல... பல இடங்கள்ல அப்படிதான் இருக்குங்கறதுதான் உண்மை. இது விஷயமா, 'புருஷோத்தமன்' அண்ணா கூட என்கிட்ட ஆதங்கப்பட்டாரு'' என்றாள் சித்ரா, ஆசுவாசத்துடன்.

''பணம் கொழிக்கிற துறையா இருக்கறதால தான், பல்லடம் பத்திரப்பதிவு ஆபீஸ்ல, ரிடையர்டு ஆனப்புறமும் ஒருத்தரு ஆபீசுக்கு போய்ட்டு வந்துட்டு இருக்காருன்னு, எங்கசொந்தக்காரர் 'மூர்த்தி' சொன்னாரு.

''இதுமாதிரியான புகார்களை அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டு போகத்தானே, ஒவ்வொரு ஆபீஸ் முன்னாடியும் போன் நம்பர் எழுதி வச்சிருக்காங்க.... ஆனா, கூப்பிட்டு சொல்லத்தான் யாரும் முன்வர்றதில்ல'' என்று, மித்ரா ஆதங்கப்பட்டாள்.

''நீ திருவாய் மலர்ந்துட்டா, உடனே 'ஆக் ஷன்' எடுத்துருவாங்க, கவலைப்படாதே மித்து'' என்று, நம்பிக்கையூட்டினாள், சித்ரா.டூவீலரில் சென்ற அதிகாரிகள்''ஞாயித்துக்கிழமை மாவட்டத்துல இலக்கை தாண்டி, 1.21 லட்சம் பேருக்கு ஒரே நாள்ல தடுப்பூசி போட்டு முடிச்சிருக்காங்க. கலெக்டர் மட்டுமில்லாம, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கூட, முகாம் பணிகளை பார்வையிட்டாரு.

''அவிநாசில ரோட்டோரமா இருக்கற ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்துலயும் ஆய்வு பண்ணாங்க. பள்ளி, மெயின் ரோட்ல இருக்கறது. ரொம்ப வசதியா போச்சு. தேர்தல் ஓட்டுப்பதிவு, போலியோ சொட்டு மருந்து முகாம்னு எது நடந்தாலும், அங்க மட்டும் தான், ஆய்வு பண்றத அதிகாரிகள் வழக்கமா வச்சிருக்காங்க. கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருக்கற கிராமப்புறங்களுக்கு போய் ஆய்வு பண்ணா தானே எதார்த்தம் தெரியும்.

''அப்புறம், முகாம் பணிகளை மேற்பார்வையிடற பொறுப்பு, ஒன்றிய ஆணையாளர் அந்தஸ்துல இருக்கற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கு. அவங்களுக்கான ஜீப்பை, முகாம் பணிக்கு தேவைன்னு, மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கிட்டதால, அந்த அதிகாரிங்க டூவீலர்ல போய் வேலை பார்த்தாங்களாம். என்ன பண்ண... சில நேரங்கள்ல 'அட்ஜெஸ்ட்' பண்ணிதான் போக வேண்டியிருக்குன்னு புலம்பறாங்களாம்'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.அசரவைத்த 'நாடகம்'''ம்ம்ம்.... சரிதான் மித்து. வடக்கு பார்த்த போக்குவரத்தை சரி செய்ற பொறுப்புல இருக்கிற சின்ன அதிகாரி, லாரிங்க அதிகமாக நிற்கும் ராம் நகர் பகுதிக்கு போய், அபராதம் வசூல் பண்ணிட்டிருந்திருக்காரு. லாரிக்காரங்க சிலரு, அவருக்கு மேல இருக்கிற அதிகாரியை கூப்பிட்டு புலம்பி இருக்காங்க. உடனே, சின்ன அதிகாரியை 'மைக்'கில் தொடர்பு கொண்ட பெரிய அதிகாரி, 'எந்த இடத்துல இருக்கீங்க'னு கேட்க, அவரு, வேற ஒரு இடத்தை மாத்தி சொல்லியிருக்காரு. டென்ஷனான பெரிய அதிகாரி, அவரை குமரன் ரோட்ல போய் 'டியூட்டி' பாருங்கன்னு உத்தரவு போட்ருக்காரு.அங்க போன சின்ன அதிகாரி, 'லாரிக்காரங்க இருக்கிற ஏரியாவுல டிராபிக் அதிகமா இருக்கு'னு, ஒரு போலீஸ்காரர் மூலமா, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்ல வச்சாரு. திரும்பவும் அந்த இடத்துக்கே போயிருக்காரு. சின்ன ஆபீசரோட இந்த 'உலக மகா நடிப்பு' தெரிஞ்சு, பெரிய ஆபீசருங்களே மலைச்சு போயிட்டாங்களாம்... மேலிடம் வரைக்கும் இது தெரிஞ்சுடுச்சாம்,'' என்று சித்ரா, சுவாரசியம் கலந்து சொன்னாள்,

''தன்னோட 'கொடி' பறக்குற இடத்துல, இன்னொருத்தர் 'ஜெயம்' காண்பிக்க நினைச்சா இப்படி தான் நடக்கும் போல,'' என, சிரித்தாள் மித்ரா.'கறை' படியாதவர் வரணும்'கோழிப்பண்ணை ஊர்ல, எந்த போலீஸ் அதிகாரி வந்தாலும், குற்றச்சம்பவம் குறைந்தபாடில்லையாம். குட்கா, புகையிலை விக்கிறது, வழிப்பறி, திருட்டுன்னு நடந்துட்டு தான் இருக்காம். கறை படியாத அதிகாரிங்க வந்தா மட்டும் தான், இதையெல்லாம் சரிபண்ண முடியும்ன்னு, கரைப்புதுார் பக்கம் பேசிக்றாங்க.

''அணைமேடு பகுதியில ஆக்கிரமிப்பு இடத்தை சுத்தி, வருவாய்த்துறைக்காரங்க வேலி போட்டுட்டு இருந்திருக்காங்க. நிறைய போலீசும் பாதுகாப்புக்கு இருந்திருக்காங்க. 'நம்ம ஆட்சியில இப்படியா... விடக்கூடாது'ன்னு 'வீர வசனம்' பேசியபடி, உள்ளூர் ஆளுங்கட்சி வி.ஐ.பி., ஒருத்தரு அந்த இடத்துக்கு கார்ல போயிருக்காரு. பக்கத்து 'சீட்'ல உட்கார்ந்துட்டு வந்த ஒருத்தரு, 'கோர்ட் உத்தரவுபடி தான், ஆக்கிரமிப்பை எடுக்கிறாங்களாம்'ன்னு சொல்ல, அப்படியே 'ரிவர்ஸ் கியர்' போட்டு காரை திருப்பிட்டு வீட்டுக்கு போயிட்டாராம் அந்த லோக்கல் வி.ஐ.பி.,

''எல்லாம் அந்த 'நாகராஜனு'க்கே வெளிச்சம்,'' என சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டதுபோல் 'நடித்தாள்' மித்ரா.கலெக்டர் 'அர்ச்சனை'''சட்டசபை தேர்தலுக்கு அப்புறமா, கிராம ஊராட்சி பகுதிகள்ல புதுசா எந்த வேலையும் நடக்கறது இல்லையாம். போன வருஷம் துவங்கின வேலைகள் கூட, பாதியில நிக்குதாம். கள ஆய்வு பண்ண கலெக்டர், இதை தெரிஞ்சு, ரொம்ப 'அப்செட்' ஆகி, அதிகாரிகளை 'அர்ச்சனை' பண்ணிட்டாராம்.

''ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஒரே கான்ட்ராக்டர், நிறைய வேலைகளை எடுத்து செய்றதுதான், இதுக்கு காரணம்னு தெரியவர, சீக்கிரமா வேலைகளை முடிங்கன்னு உத்தரவு போட்டிருக்காரு. நுாறு நாள் வேலையிலும், நிறைய குளறுபடி இருக்காம். போன வருஷம், சமூக பாதுகாப்பு தணிக்கைல, நிறைய ஆட்பேசனை சொல்லியிருக்காங்க.

''மாநகராட்சி ஏரியாவுல, நிலங்களை மறு சர்வே செய்ற வேலை நடந்து முடிஞ்சிருக்கு, இதுதொடர்பான விவரம், தெளிவா இல்லையாம். புதிய பட்டா எண், சர்வே எண் தெரியாம மக்கள் குழம்பிப்போய் இருக்காங்க. பாமர மக்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு போய் விவரம் கேட்டா, சொல்ல மாட்டேங்கறாங்களாம். ஆனா, அங்க வேலை செய்றவங்களை 'கவனிச்சா' மட்டும் வேலை நடக்குதாம்,'' என்று, சித்ரா விஷயங்களை புட்டுப்புட்டு வைத்தாள்.இஷ்டம் போல் வசூல்


''திருப்பூர்ல ஓடுற மினிபஸ்கள்ல இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கிறாங்களாம்; குறைந்தபட்ச கட்டணமே, 10 ரூபாயாம். 'கலெக்ஷன்' இருந்தா ஓட்றாங்க; இல்லைனா, ஓரங்கட்டி நிறுத்திடறாங்களாம். அதிகாரிங்க கிட்ட கேட்டா, 'யாரும் புகார் கொடுக்கலையே'ன்னு கைய விரிச்சுடறாங்களாம்...'' என்று மித்ரா கூறும்போதே, வார்த்தைகளில், 'கடுகு' வெடித்தது.

''அங்கேரிபாளையத்துல இருக் கிற ஒரு கூட்டுறவு சங்கத்தில, ரேஷன் கடைல வேல பார்க்குறவங்களுக்கு இந்த மாச சம்பளம், கிடைக்கலையாம். எல்லாத்துலயும் தலைவரு காசு பார்க்க ஆசைபடறார்ன்னு, சங்கத்தோட செயலாளரு சொல்லீட்டு இருக்காராம். எந்த வேலையும் சரியா செய்ய மாட்டேங்கறார்ன்னு, செயலாளர் மேல தலைவர் புகார் வாசிக்கிறாராம். கலெக்டர் தான் கவனிக்கணும்னு ஊழியருங்க பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

'அடுத்த வாரம், 'ராமசாமி' அங்கிளை போய் பார்த்துட்டு வரலாம்... சரி, நாட்டுக்கோழி பிரியாணி மணக்குது... சாப்பிடலா மாக்கா'' என, மித்ரா சொல்ல, ''நீயா கண்டுபிடிக்கிறியானு பாப்போம்னுதான் நான் சொல்லல... ஆனா, நாட்டுக்கோழி பிரியாணி இல்ல... வெறும் வெஜிடபிள் பிரியாணிதான்'' என்று சித்ரா கலகலத்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X