'லெட்டர் பேடு' கட்சிகளின் ஆதிக்கம் குறைக்கப்படுமா?

Added : செப் 14, 2021 | |
Advertisement
கடந்த மார்ச் நிலவரப்படி, நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகளில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளின் எண்ணிக்கை 2,698. இவற்றில் ஏழு தேசிய கட்சிகள், ௫௨ மாநில கட்சிகள். அதே நேரத்தில், இந்த கட்சிகளில் அங்கீகரிக்கப்படாதவை 2,638. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகள்அனைத்தும் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனாலும், 400 முதல் 500 கட்சிகள் வரையே தேர்தலில்

கடந்த மார்ச் நிலவரப்படி, நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகளில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளின் எண்ணிக்கை 2,698. இவற்றில் ஏழு தேசிய கட்சிகள், ௫௨ மாநில கட்சிகள்.

அதே நேரத்தில், இந்த கட்சிகளில் அங்கீகரிக்கப்படாதவை 2,638. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகள்அனைத்தும் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனாலும், 400 முதல் 500 கட்சிகள் வரையே தேர்தலில் போட்டியிடுகின்றன; 200 கட்சிகள் தான் தீவிர அரசியலில் ஈடுபடுகின்றன. மீதமுள்ள கட்சிகள் பெயரளவில் மட்டுமே தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தல் தொடர்பான விபரங்களை ஆய்வு செய்து வரும், அரசு சார்பற்ற அமைப்பான, ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள தகவலில், 'அங்கீகரிக்கப்படாத, அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 2010ல் 1,112 ஆக இருந்த இத்தகைய கட்சிகளின் எண்ணிக்கை, 2019ல் 2,301 ஆகவும், தற்போது 2,700 ஆகவும் அதிகரித்துள்ளது.

'இந்த கட்சிகள் லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளையோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களையோ பெறாத போதும், 2017 - 2018ல் 24.6 கோடி ரூபாயும், 2018 - 2019ல் 65 கோடி ரூபாயும் நிதி திரட்டி உள்ளன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரி சட்ட விதிகளின்படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகள், சில வழியிலான வருமானங்களுக்கு வரி விலக்கு பெறவும் முடியும். இந்த சலுகையைப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சட்ட விரோத பண பரிமாற்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, பல ஆண்டுகளாக தேர்தலில் நிற்காத மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என, கடந்த வாரம் சட்ட அமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. அதற்கு காரணம், தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே அதிகாரம் உள்ளது. பதிவை நீக்க, ரத்து செய்ய அதிகாரம் கிடையாது.

தேர்தலில் போட்டியிடாத, 'லெட்டர் பேடு' அளவில் உள்ள கட்சிகளின் பதிவை ரத்து செய்ய,1999ம் ஆண்டிலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முற்பட்டது. இது தொடர்பாக, பல கட்சிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியும், அந்த நோட்டீஸ்களில் ஏராளமானவை, போன வேகத்தில் திரும்பி விட்டன. நோட்டீஸ் பெற்ற கட்சிகளில் பல, அதற்கு பதில் அளிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளில் ஏராளமானவை, இரண்டு அல்லது மூன்று நபர்களால் நடத்தப்படுபவை. சில கட்சிகள் ஒரே நபரால் கூட நடத்தப்படுகின்றன. சில கட்சிகள் இதுவரை பல தேர்தல்களில் போட்டியிட்டும், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும், அவை தொடர்ந்து களமிறங்குவதன் காரணம் பண ஆதாயமே.

பிரதான அரசியல் கட்சிகளிடம் இருந்து, தேர்தல் நேரத்தில் கணிசமான தொகையை பெற முடியும் என்ற கணக்கில் தான் அவை தேர்தல் களம் காண்கின்றன. அந்த ஆதாயத்தை பெற்றதும், அடுத்த தேர்தல் வரை அவை காணாமல் போய் விடுகின்றன. தேர்தல் நேரத்தில் மிகக் குறைந்த ஓட்டு சதவீதத்தில் பெரும்பான்மையை தவறவிடும் பிரதான கட்சிகளும், அந்த நேரத்தில் மட்டும் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என முழங்குவது உண்டு. ஆனால், அந்த கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்றால் வாய் திறப்பதில்லை.

மேலும், புதிதாக கட்சி துவக்குவதற்கும் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். முதலில் ஒரு அமைப்பின் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்டு, கணிசமான ஓட்டுகளை அல்லது எம்.பி., - எம்.எல்.ஏ., 'சீட்'களை பெற்றால் மட்டுமே கட்சியாக அங்கீகரிக்க முடியும் என்பது போன்ற நிபந்தனைகள் தேவை. இதற்காக ஒரு குழு அமைத்து பரிந்துரைகளை பெற்று அமல்படுத்தலாம்.

மேலும், வாக்காளர் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்குவது, தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தவறான தகவல்களை அளிப்போருக்கு சிறை தண்டனையை அதிகரிப்பது, பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குவது உட்பட பல சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

வரி ஏய்ப்பு செய்ய, கறுப்பு பணத்தை சட்டப்பூர்வமான பணமாக மாற்ற முற்படும் நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது உட்பட பல விஷயங்களில் தற்போது சிறப்பான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, இந்த செயல்படாத, லெட்டர் பேடு கட்சிகள் கலாசாரத்தை ஒழித்து கட்டவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே பலரின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X