சில வரி செய்திகள்...: இந்தியா

Added : செப் 14, 2021
Share
Advertisement
வக்கீல்களுக்கான மனு தள்ளுபடி புதுடில்லி: நாட்டில், கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால், 60 வயதுக்கு முன் உயிரிழக்கும் வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு, மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது. 'சமூகத்தில், வழக்கறிஞர்களின் உயிர் மற்றவர்களை விட அதிக விலைமதிப்புள்ளது என

வக்கீல்களுக்கான மனு தள்ளுபடி

புதுடில்லி: நாட்டில், கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால், 60 வயதுக்கு முன் உயிரிழக்கும் வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு, மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது. 'சமூகத்தில், வழக்கறிஞர்களின் உயிர் மற்றவர்களை விட அதிக விலைமதிப்புள்ளது என கூற முடியாது' என்ற நீதிபதிகள், விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அர்ச்சகர் அடித்துக் கொலை

தார்: மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டம் ஞானபுரா கிராம ஹனுமன் கோவில் அர்ச்சகர் பாபா அருண் தாஸ், 58. சமீபத்தில் இரவு நேரத்தில் கோவிலுக்கு வெளியே சுற்றிய நான்கு பேரை அருண் தாஸ் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் அருண் தாஸ் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடுகின்றனர்.

ரூ.40 லட்சம் வைரம்

பன்னா: மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்ட சுரங்க தொழிலாளி ரத்தன்லால் பிரஜாபதி, நண்பர்கள் மூவருடன் சேர்ந்து குத்தகை சுரங்கத்தில் வைரம் தேடும் பணிகளை 15 ஆண்டுகளாக மேற்கொண்டார். அவர்களுக்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்தது. மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட வைரம் 21ம் தேதி ஏலம் விடப்படும். வரிகள் தவிர்த்து மீதமுள்ள தொகை அவர்களிடம் வழங்கப்படும்.

எம்.பி., மீது பாலியல் வழக்கு

புதுடில்லி: பீஹாரில் லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வானின் சித்தப்பா மகன் பிரின்ஸ் பாஸ்வான். சமஸ்திபூர் லோக்சபா தொகுதியில் லோக் ஜன்சக்தி சார்பில் வென்று எம்.பி.,யான இவர் மீது, டில்லி கன்னாட் பிளேஸ் போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீசார் கூறினர்.

குஜராத் வெள்ளம்: 200 பேர் மீட்பு

ஆமதாபாத்: குஜராத்தில் ராஜ்கோட், ஜாம்நகர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித்தவித்த 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்; 7,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

தொழிற்சாலையில் மூவர் பலி

ஆமதாபாத்: குஜராத்தில் ஆமதாபாத் நகரின் காட்லோடியா பகுதியில் 'வெஜிடபிள் பப்ஸ், சமோசா' உள்ளிட்டவை தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு மூன்று பேர் வேலை பார்த்தபோது அதிக புகை வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் பலியாயினர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விமானம் மீது பறவை மோதல்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 179 பயணியருடன் டில்லி புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் மீது பறவை மோதியது. இதனால் விமானப் புறப்பாடு ரத்தானது. அதிலிருந்த மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் ரேணுகா சிங் உட்பட, பயணியர் அனைவரும் இறக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X