போலீஸ் டைரி| Dinamalar

போலீஸ் டைரி

Added : செப் 14, 2021
Share
நகை, வெள்ளி திருட்டுகடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, கசவநல்லாத்துார் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் நாராயணன், 61. ஓய்வு பெற்ற மின் ஊழியரான இவர், கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள மகளை பார்க்க வீட்டைப் பூட்டி குடும்பத்துடன் சென்றிருந்தார்.கடந்த 12ம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் இருந்த இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

நகை, வெள்ளி திருட்டு

கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, கசவநல்லாத்துார் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் நாராயணன், 61. ஓய்வு பெற்ற மின் ஊழியரான இவர், கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள மகளை பார்க்க வீட்டைப் பூட்டி குடும்பத்துடன் சென்றிருந்தார்.கடந்த 12ம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் இருந்த இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது.இதுகுறித்து, நேற்று முன்தினம், நாராயணன் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மயங்கி விழுந்தவர் பலி

செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த, வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் மகன் கன்னியப்பன் 42. இவருக்கு, சசிகலா 40 என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து, சசிகலா அளித்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வழிப்பறி செய்த மூவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்: கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரன், 45, ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் தங்கி, 'சிப்காட்'டில் கூலி வேலை செய்து வருகிறார்.கடந்த 8ம் தேதி இரவு தேவேந்திரன் பணி முடித்து, 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி, நண்பர் காமராஜ், 44, என்பவருடன் ஒரகடம் நடந்து சென்றார்.அப்போது மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, தேவேந்திரனை தாக்கி, 14 ஆயிரம் ரூபாய், மொபைல் போன் பறித்து சென்றனர்.ஒரகடம் போலீசார் விசாரித்து, வழிப்பறியில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூரைச் சேர்ந்த கணபதி, 20, கண்ணன், 20, மணி, 19, ஆகியோரை கைது செய்தனர். பணம், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

செங்கல்பட்டு: மறைமலை நகர் வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்த ரவிசந்திரன் மனைவி கவிதாசங்கரி, 48. நேற்று முன்தினம், வீட்டின் அருகில் மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கவிதாசங்கரி கழுத்திலிருந்த ஒரு சவரன் செயினை பறித்துச்சென்றனர். அவர் புகாரை, மறைமலை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருடன் குண்டாசில் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், நசரத்பேட்டை அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்ற விக்னேஷ், 24. இவர் மீது காஞ்சி தாலுகா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிதடி, வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதால், அவரை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து விக்னேஷ், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா கடத்திய மூவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்றை நிறுத்தி, பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர்.அதில் பயணித்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த, ராஜீவ் ரவுத், 34, கஷ்வின் ரவுத், 31, நித்திஷ்குமார், 20, ஆகிய மூவரிடம், ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய மூன்று பேரையும், போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X