தமிழ்நாடு

சொர்க்கமே என்றாலும்... அது நம் ஊரைப் போல வருமா... இன்று 37 வது பிறந்தநாள்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டுக்கல் :சொந்த ஊர்ப்பிரியம் யாருக்குத்தான் இல்லை. சொந்த ஊர்க்காரர்கள் மட்டுமின்றி, சொந்த ஊரை விட்டு வந்தவரையும் வாழ வைக்கும் மலைக்கோட்டை மாநகரம் திண்டுக்கல்லுக்கு இன்று (செப்.15) 37 வது பிறந்தநாள். திண்டுக்கல் உருவாக்கம்மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து உருவானது திண்டுக்கல் மாவட்டம். 1985 செப்.15 ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாவட்டம். திண்டுக்கல்,
சொர்க்கமே என்றாலும்... அது நம் ஊரைப் போல வருமா...   இன்று 37 வது பிறந்தநாள்

திண்டுக்கல் :சொந்த ஊர்ப்பிரியம் யாருக்குத்தான் இல்லை. சொந்த ஊர்க்காரர்கள் மட்டுமின்றி, சொந்த ஊரை விட்டு வந்தவரையும் வாழ வைக்கும் மலைக்கோட்டை மாநகரம் திண்டுக்கல்லுக்கு இன்று (செப்.15) 37 வது பிறந்தநாள்.
திண்டுக்கல் உருவாக்கம்

மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து உருவானது திண்டுக்கல் மாவட்டம். 1985 செப்.15 ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாவட்டம். திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்துார், நத்தம், ஒட்டன்சத்திரம் தாலுகாக்களுடன் உருவானது. தற்போது குஜிலியம்பாறையுடன் 10 தாலுகாக்கள். 'அண்ணாத்துரை' பெயரில் துவங்கிய திண்டுக்கல், கருணாநிதி முதல்வராக இருந்த போது 'திண்டுக்கல் அண்ணா' என பெயர் மாற்றப்பட்டது. 1988 ல் 'காயிதே மில்லத்' எனவும், 1996 ல் 'மன்னர் திருமலை நாயக்கர்' எனவும் பெயர் உருமாற்றம் பெற்றது. 1997 ஜூலை முதல் 'திண்டுக்கல்' மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

மக்களுக்கு வரம்மாவட்டத்தை பிரித்ததால் மக்கள் பலன் பெற்றனரா. ஆம் என்றே சொல்ல வேண்டும். முன்பெல்லாம் பிரச்னையை கலெக்டரிடம் மனுவாக கொடுக்க, கடை கோடியில் இருந்து மதுரை செல்ல வேண்டி இருந்தது. இந்நிலை மாறி தற்போது திண்டுக்கல்லிலேயே கலெக்டர், எஸ்.பி., உட்பட ஒரே வளாகத்திற்குள் அனைத்து துறை அதிகாரிகளும் இருப்பது மக்களுக்கு கிடைத்த வரம்தானே. தனி மாவட்டமாக உருவாக்கிய பின் கல்வி, வேளாண், மருத்துவம் என பல துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தின் முதல் கலெக்டர் மாதவன் நம்பியார், தற்போதைய கலெக்டர் விசாகன். இவருடன் 27 கலெக்டர்கள் திண்டுக்கல் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.திண்டுக்கல்லில் என்ன ஸ்பெஷல்இங்குள்ள மலைக்கோட்டை ஆங்கிலேயர், திப்புசுல்தான், ராணி மங்கம்மாள் என மன்னர்களுக்கு அரணாக இருந்து பேருதவி புரிந்துள்ளது. பூட்டு நகரம் என்ற பெயருக்கேற்ப இன்றும் விதவிதமான திண்டுக்கல் பூட்டுக்கு மவுசு குறையவில்லை. அடுத்தது பிரியாணி. இந்த ருசியான உணவுக்கும் உலகளவில் திண்டுக்கல் பெருமை பெற்றுள்ளது.

கோடையிலும் 'குளுகுளு' வென வசிக்க மலைகளின் இளவரசியாம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக இம்மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. இங்கு வானியியற்பில் ஆராய்ச்சி நிலையம் உள்ளது மற்றொரு சிறப்பு.அதுமட்டுமின்றி ஆன்மிக நகரான பழநிக்கும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் அதிக வருவாய் உள்ள கோயில்களில் பழநியும் ஒன்று. வேறெந்த மாவட்டத்திலும் இல்லாதவாறு இம்மாவட்டத்தில்தான் தாண்டிக்குடியில் காபி, வாகரையில் மக்காச்சோளம், வேடசந்துாரில் புகையிலை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

அனுமன் இலங்கைக்கு துாக்கி சென்ற சஞ்சீவி மலையில் இருந்து சிதறிய துண்டு தான் சிறுமலை என புராண நம்பிக்கைக்கு பாத்திரமான இடமும் இங்குதான் உள்ளது.இங்கு காய்கறி, பழங்கள், பூக்கள், மலைத்தோட்ட பயிர்கள், சிறுதானியங்கள், மூலிகைகள் என வேறெங்கும் இல்லாத வகையில் இயற்கை வளம் குவிந்து கிடக்கிறது. மேற்கு மலைத்தொடரில் உள்ள கொடைக்கானலிலும், கிழக்கு மலைத் தொடரான சிறுமலையிலும் விளையும் வாழை, மலைப்பூண்டு மருத்துவ குணம் கொண்டது. ஒட்டன்சத்திரத்தில் பிற மாநிலங்களுக்கும் காய்கறிகளை அனுப்பும் 'மெகா' காய்கறி மார்க்கெட். வேடசந்துாரில் எண்ணற்ற நுாற்பாலைகள். ஒரு காலத்தில் வெளிநாட்டு பெண்களையும் அதிகம் ஈர்த்த சுங்குடி சேலைகளின் நகரம் அருகில் உள்ள சின்னாளபட்டி. நம்ப முடியாத பல ஆச்சர்யங்களை கொண்ட வரலாற்று களஞ்சியமும் நம்ம திண்டுக்கல்தாங்க.

அதன் பிறந்தநாளை அதன் மக்களாகிய நீங்கள் கட்டாயம் கொண்டாட வேண்டும்தானே.பயோ-டேட்டா தெரிஞ்சிக்கோங்க...---மாநகராட்சி / 1நகராட்சிகள் / 3வருவாய் கோட்டம் / 3தாலுகாக்கள் / 10பேரூராட்சிகள் / 23ஒன்றியங்கள் / 14ஊராட்சிகள் / 306அணைகள் / 9வருவாய் கிராமங்கள் / 361கல்வி மாவட்டம் / 4பள்ளிகள் / 1930கல்லுாரிகள் / 32பல்கலை கழகம் / 2பரப்பளவு / 6266.64 ச.கி.மீ.,மக்கள் தொகை / 21,59,775(2011 வரை)வாகன பதிவு / TN 57, TN 94எம்.எல்.ஏ., தொகுதி / 7எம்.பி., தொகுதி / 1வாக்காளர்கள் / 19 லட்சம்* பசுமையாக்க திட்டம் இருக்கு------- விசாகன், கலெக்டர், திண்டுக்கல்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 10க்கும் கீழ் குறைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க தினமும் 3 ஆயிரம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்கிறோம். கொடைக்கானல், பழநி நகராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 85 சதவீதம், திண்டுக்கல் மாநகராட்சியில் 75 சதவீதத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது விரைவில் 100 சதவீதமாகும்.திண்டுக்கல்லை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகளுக்கு இலக்கு நிர்ணயித்து, ஆந்திராவின் ராஜமுந்திரியில் இருந்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் வாங்கி நடவு செய்துள்ளோம். ஜப்பான் 'மியாவாக்கி' திட்டத்தில் இந்தாண்டுக்குள் 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம்.மாவட்டம் முழுதும் கண்மாய், குளங்களை துார்வாரி நீர்வளம் பெருக்கவும் திட்டம் உள்ளது. கடந்தாண்டை விட வேளாண் சாகுபடியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். எழில்மிகு மாவட்டம் என்பதால் சுற்றுலாவை மேம்படுத்த மன்னவனுர், ஆடலுார், சிறுமலையில் 'சாகச விளையாட்டு'கள் நடத்தவும் திட்டம் உள்ளது. சிறுமலையில் சூழல் சுற்றுலாவும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
15-செப்-202111:07:08 IST Report Abuse
JeevaKiran நல்ல தகவல்கள். இதுபோல் தினம் ஒன்று என்று அணைத்து மாவட்டங்களின் தகவல்களை தந்தால், பயனுள்ளதாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X