சூரி இல்ல விழாவில் திருட்டு தொழிலதிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூரி இல்ல விழாவில் திருட்டு தொழிலதிபர் கைது

Added : செப் 15, 2021
Share
ராமநாதபுரம்:மதுரையில், நடிகர் சூரி இல்ல விழாவில் திருடி கைதான நகைக்கடை உரிமையாளர் 'கிக்'குக்காகவும், விளம்பரத்திற்காகவும் திருடுபவர் என போலீசார் கூறினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இரண்டு நகைக்கடைகள் நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ், 29; பட்டதாரி.சமீபத்தில் மதுரையில் நடந்த நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணத்தில் நகை

ராமநாதபுரம்:மதுரையில், நடிகர் சூரி இல்ல விழாவில் திருடி கைதான நகைக்கடை உரிமையாளர் 'கிக்'குக்காகவும், விளம்பரத்திற்காகவும் திருடுபவர் என போலீசார் கூறினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இரண்டு நகைக்கடைகள் நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ், 29; பட்டதாரி.சமீபத்தில் மதுரையில் நடந்த நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணத்தில் நகை திருடப்பட்ட வழக்கில், விக்னேஷை மதுரை போலீசார், நேற்று முன்தினம் இரவு பரமக்குடியில் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:இரண்டு நகைக் கடைகளுக்கு சொந்தக்காரரான விக்னேஷ் விளம்பர பிரியர். மதுரை, சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கி முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்களுடன் நெருங்கி பழகி, புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி பழகும் பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் முக்கிய விழாக்களில் அழைப்பு இல்லாமலேயே பங்கேற்பார். அங்கு, தில்லாலங்கடி திரைப்படத்தில், ஜெயம் ரவி பாணியில் திருடுவதில், 'கிக்' தேடிஉள்ளார். திருட்டில் சிக்கி கொண்டால், அவரது படத்துடன் வரும் செய்தியை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார்.

சில மாதங்களுக்கு முன், மதுரையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரியின் மகள் பிறந்தநாள் விழாவில் விக்னேஷ் பங்கேற்றார். அதிகாரி மகள் அணிந்திருந்த வைர நெக்லசை திருடினார். இதை கவனித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுபோல் மதுரை, சிவகங்கை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

இவற்றை ஒரு பொருட்டாக கொள்ளாமல், 'புல்லட்டில்' பரமக்குடியில் வலம் வருவார். வசதியான குடும்பத்தில் வசதியாக வாழ்ந்து வரும் விக்னேஷ் பொழுது போக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் இது போன்ற திருட்டுகளில் ஈடுபடுவது, விசாரணை நடத்திய போலீசாரை வியப்படைய செய்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X