உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது. இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா? யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.
ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார். கேரளாவில் பணியாற்றியதால், அண்டை மாநிலமான தமிழகத்தை பற்றியும் நன்கு அறிந்திருப்பார். மத்திய புலனாய்வு துறையில் ஊழல், 'மாபியா'க்களுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். நாகாலாந்தில் உள்ள ஆயுத குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தார்.

பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இலங்கையில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.இந்த சூழலில் பாதுகாப்பு மற்றும் உளவு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
'கவர்னர் ஆர்.என்.ரவி, ஆளுங்கட்சிக்கு இடையூறு ஏற்படுத்துவார்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறுகிறார். ஒருவரை பார்த்து பழகும் முன்பே இப்படி எதிர்மறை கருத்துக்களை வெளியிடுவது, ஒரு தலைவருக்கு அழகல்ல. முதல்வர் ஸ்டாலின் இது பற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் மனதில் குழப்பத்தை உண்டாக்கவே, அழகிரி இப்படி சொல்கிறாரோ என, எண்ண தோன்றுகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய கவர்னர் உதவட்டும். அவரை திறந்த மனத்துடன் வாழ்த்து கூறி வரவேற்போம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE