சென்னை : செம்மஞ்சேரி தாமரைக்கேணி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக, எடுக்க போகும் நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில், தாமரைக்கேணி நீர்நிலையை ஆக்கிரமித்து காவல் நிலையம் கட்டுவதற்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில், 'அறப்போர் இயக்கம்' சார்பில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, காவல் நிலைய கட்டுமானப் பணிக்கு தடை விதித்தார். இதற்கிடையில், கட்டுமானப் பணி முடிந்து விட்டதால், காவல் நிலையம் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டியிருந்தால், இடிக்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தது.நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., பேராசிரியர்களை, உயர் நீதிமன்றம் நியமித்தது. அவர்களும் ஆய்வு செய்து, நீர்நிலையில் காவல் நிலையம் கட்டப்பட்டிருப்பதாக அறிக்கை அளித்தனர்.காவல் நிலையம் மட்டுமின்றி, வேறு கட்டுமானங்களும் நீர்நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணத்தில், நீர்நிலை தான் எனவும், வருவாய் ஆவணங்களில், 1987க்கு முன் அந்த பகுதி மேய்ச்சல் நிலமாக இருந்ததாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சி.எம்.டி.ஏ., ஆவணமும், நிபுணர்கள் கருத்தும், நீர்நிலை தான் என தெரிவித்திருக்கும்போது, வருவாய் ஆவணத்தின் நிலைப்பாடு நீர்த்து போகிறது.மழைக்காலங்களில் நீர்நிலையாகவும், வறட்சியின்போது காய்ந்து போவதும் உண்டு. தண்ணீர் சேகரிக்கும் பகுதியாக விளங்கும் இவற்றையும் பாதுகாக்க வேண்டும்.இந்த வழக்கு விசாரணை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
அப்போது, அனைத்து அம்சங்களையும் அரசு பரிசீலித்து, செம்மஞ்சேரி காவல் நிலையம் மட்டுமின்றி, மற்ற ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்பாகவும், என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE