சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

யோகப் பயிற்சிகளில் பூட்டுகள்... சக்திநிலையில் நிகழ்வதென்ன?

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஈஷா யோகாவில் கற்றுத் தரும் சில யோகப் பயிற்சிகளில் பந்தாஸ் எனப்படும் பூட்டுகள் இடம்பெறுவதை அறிவோம். ஆனால், அதன் சூட்சும தன்மைகள் பற்றியும், அந்தப் பூட்டுகளால் சக்திநிலையில் நிகழும் அற்புதங்கள் பற்றியும் நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை! சத்குருவின் இந்த உரை, உடலை இறுகப்பிடித்து நாம் போடும் பூட்டுகள், சூட்சும நிலையில் நிகழ்த்தும் அற்புதங்களைத்
யோகப் பயிற்சிகளில் பூட்டுகள்... சக்திநிலையில் நிகழ்வதென்ன?

ஈஷா யோகாவில் கற்றுத் தரும் சில யோகப் பயிற்சிகளில் பந்தாஸ் எனப்படும் பூட்டுகள் இடம்பெறுவதை அறிவோம். ஆனால், அதன் சூட்சும தன்மைகள் பற்றியும், அந்தப் பூட்டுகளால் சக்திநிலையில் நிகழும் அற்புதங்கள் பற்றியும் நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை! சத்குருவின் இந்த உரை, உடலை இறுகப்பிடித்து நாம் போடும் பூட்டுகள், சூட்சும நிலையில் நிகழ்த்தும் அற்புதங்களைத் தெளிவுபடுத்துவதாய் அமைகிறது!

Question:நமஸ்காரம் சத்குரு. ஆசனங்கள் மற்றும் கிரியாக்களின் முடிவில் செய்யும் பந்தா அல்லது பூட்டுக்களின் முக்கியத்துவம் என்ன?
சத்குரு:
முதலில் பொதுவாக பந்தா என்பதைப் பற்றிப் பேசுவோம். நீங்கள் செய்யும் பூட்டுக்கள் ஆரம்பப் படிகள். அடிப்படையில் பந்தா என்பது மெதுவாக ஆளுமை கொண்டுவந்து, உங்கள் சக்திகளை நீங்கள் விரும்பும்விதமாக பூட்டிக்கொள்வது. உங்கள் சக்தி கட்டமைப்பு மீது ஆளுமை கொண்டுவரவே இந்த பூட்டுக்களை பயன்படுத்துகிறோம். முதலில் இதை கொஞ்சகாலம் உடல் கொண்டு செய்யவேண்டும். ஒருநாள் உங்களை தசைகளையோ எலும்பு அமைப்பையோ பயன்படுத்தாமலேயே உங்களால் இதைச் செய்ய முடிகிறது என்றால் உங்கள் பூட்டுக்கள் நல்லபடியாக நடக்கின்றன என்று அர்த்தம். அப்போது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பூட்டி, நீங்கள் செய்யவிரும்பும் காரியம் எதுவானாலும் அதற்கேற்ப உங்கள் சக்திகளை உங்களால் திசைதிருப்ப முடியும். சிறிது காலத்திற்குப் பிறகு, அதனைப் பூட்டுவது பற்றி நீங்கள் சிந்திக்கக் கூடத் தேவையிருக்காது, அது தானாக நடக்கும். நீங்கள் குறிப்பிட்ட ஒரு செயல் செய்ய விரும்பினால் அதற்கான தேவைகளுக்கேற்ப உங்கள் உடல் அதுவாகவே மாறத்துவங்கிவிடும்.
உங்கள் பொருள் உடல் அல்லது அன்னமய கோஷா மீது உங்களுக்கு இருக்கும் அதே ஆளுமையை உங்கள் சக்தி உடல் அல்லது பிராணமய கோஷா மீதும், உங்கள் மன உடல் அல்லது மனோமய கோஷா மீதும் கொண்டுவருவது யோகாவின் ஒரு முக்கிய அம்சம். ஒரு சோதனையாக உங்கள் கைகளை வைத்து இதை முயற்சித்துப் பார்க்கலாம். ஆரம்பத்தில் கைகளில் முஷ்டி உருவாக்கி இறுகப்பிடித்து பிறகு திறக்கவேண்டும் - இப்படி மூன்று முறை செய்யுங்கள். பிறகு அதையே மனதளவில் செய்யுங்கள். இந்தச் செயலினால் நடக்கும் உணர்ச்சிகள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும். உங்கள் கை மூடியிருப்பது உங்களுக்குத் தெரிவது அதனால் ஏற்படும் உணர்ச்சிகளால்தான், வேறெப்படியும் அதனை நீங்கள் அறிய வாய்ப்பில்லை. இதனை நீங்கள் மனதளவில் செய்தால், ஓரளவிற்காவது கைகளை இறுக்கும்போது உருவாகும் உணர்ச்சிகளை நீங்கள் உணரவேண்டும். இந்த அளவிற்கு உங்கள் உடல்மீது உங்களுக்கு ஆளுமை இருக்கிறது. யோகா என்றால், இம்மூன்று கோஷங்களையும் நீங்கள் விரும்பும் விதமாக இயக்கும் நிலைக்கு நீங்கள் வர விரும்புகிறீர்கள். நீங்கள் உண்மையில் உங்கள் உச்சநிலையில் இயங்க விரும்பினால், உங்கள் சக்தி உடலும் மன உடலும் உங்கள் பொருள் உடல் செய்வதையே செய்வது முக்கியமானது. இல்லாவிட்டால் அவற்றுக்கிடையே உராய்வு ஏற்படும்.

உராய்வு இல்லாத வாழ்க்கை
உங்கள் அன்னமய கோஷா, மனோமய கோஷா மற்றும் பிராணமய கோஷா சரியாக ஒருங்கிணைந்து ஒத்திசைவாக செயல்படாவிட்டால் உங்கள் செயல்கள் சுமூகமாகவும், சுலபமாகவும், முயற்சியின்றியும் நடக்காது. சாதாரண விஷயங்களைச் செய்ய நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படுகிறது என்பதை இம்மூன்றுக்கும் இடையேயான ஒத்திசைவே நிர்ணயிக்கிறது. நீங்கள் அதிகப்படியான உடல் உழைப்பில் ஈடுபட்டிருந்தாலொழிய, உங்களுக்கு எட்டு மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது என்றால், இம்மூன்று உடல்களுக்கும் இடயே சரியான ஒத்திசைவு இல்லை என்று அர்த்தம். ஒன்றுக்கொன்று உராய்கிறது. உங்களுக்குள் நிகழ்ந்திருக்கும் உராய்வுகள் குணமடைய உங்களுக்கு அவ்வளவு ஓய்வு தேவைப்படுகிறது. இம்மூன்று அம்சங்களும் முறையாக ஒருங்கிணைந்திருந்தால், நீங்கள் உடலளவில் நிறைய செயல்பட்டிருந்தாலும் உங்களுக்கு நான்கரை முதல் ஐந்து மணிநேர தூக்கம்தான் தேவைப்படும். உடலளவில் நீங்கள் அதிகம் செயல்படவில்லை என்றாலும் எல்லாம் சரியான ஒத்திசைவுடன் இயங்குவதால் உங்களுக்கு அதைவிடக் குறைவான தூக்கமே போதுமானதாக இருக்கும்.

மனிதர்கள் தங்கள் திறமையின் உச்சத்தில் செயல்படுவதைத்தான் நாம் உலகில் கொண்டுவர விரும்புகிறோம். எந்த ஒரு இயந்திரத்தின் செயல்திறனும் அதற்குள் உள்ள உராய்வைச் சார்ந்ததாகவே இருக்கிறது. அந்த உராய்வை நீங்கள் குறைந்தபட்சமாகச் செய்தால், அந்த இயந்திரம் வியக்கத்தக்க செயல்திறனுடன் இயங்கும். உராய்வு குறைந்தபட்சமாக இருக்கும்போது, அதே அளவு சக்தியுடன், அது இன்னும் அதிகமாக வேலை செய்யும். மாறாக, அதிக உராய்வு இருக்கும்போது, உள்நிலையில் ஏற்படும் தேய்மானமும், இழப்பும் அதிகமாக இருக்கிறது. அதுதான் பல மனிதர்களுக்கு நடக்கிறது. தேவையான கிரகிக்கும் திறம் உங்களுக்கு இருந்தால், எந்தெந்த உடல்கள் ஒத்திசைவாக இயங்குகின்றன எவை ஒத்திசைவின்றி இயங்குகின்றன என்பதை நீங்கள் தெளிவாகக் காணமுடியும். மனிதர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் உடல் பாகங்களை வைத்துப் பார்க்காமல், அவர்கள் உடலிலுள்ள ஒருங்கிணைப்பையும் வடிவியலையும் உங்களால் பார்க்க முடியவேண்டும்.

வெளிப்புற உடலைவிட வடிவியலில் கூடுதல் அழகு இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு மனிதரின் வடிவியலில் பற்பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் நடந்தபடி உள்ளன. உடல் அல்லது உடல் பாகங்கள் ஆச்சரியமூட்டுவதாக இருப்பது நீங்கள் ஹார்மோன்களால் விஷமாகியிருக்கும்போது மட்டும்தான். ஹார்மோன்களின் விஷமில்லாமல் எந்தவொரு உடலையும் பார்த்தல் அதில் எதுவும் இருக்காது. பொருளளவில் அதை நீங்கள் விலக்கத் தேவையில்லை, ஆனால் உங்கள் விழிப்புணர்வில் உங்களால் அதை விலக்கமுடிந்திருக்க வேண்டும். ஏதோவொன்றை நீங்கள் பார்த்தால், உங்களுக்குள் நடப்பதன் தாக்கமில்லாமல் அதனை அப்படியே பாருங்கள். எல்லாவற்றையும் இருக்கும்படியே பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் சக்திகளை விரும்பும் திசையில் செலுத்துவது
இது முக்கியம், ஏனென்றால் யோகா என்பது 33 அல்லது 84 ஆசனங்கள் கற்பது பற்றியது மட்டுமல்ல, இது உயிர் இயங்கும் விதத்தில் நுட்பங்களை அறிவது குறித்தது. இதில் எந்த அளவு நுட்பங்கள் இருக்கிறதென்றால், நூறு ஜென்மங்கள் அதற்கு செலவழித்தாலும் அதை முழுமையாக அறியமாட்டீர்கள். அது உங்களுக்கு எந்த அளவு பொருந்துமோ அந்த அளவு மட்டுமே அறிவீர்கள், ஆனால் ஆழமாகச் செல்ல விரும்பினால், அதில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

பந்தங்கள் என்பது யோகாவின் எத்தகைய பரிமாணம் என்றால், நம் முன்பே சொன்ன சோதனையைப் போல, உடலை பயன்படுத்தாமல் கையில் முஷ்டி உருவாக்கக் கற்றுக்கொள்வீர்கள். ஆரம்பத்தில் உடலைப் பயன்படுத்துவீர்கள். ஆனால் மெதுமெதுவாக, நீங்கள் உடலோடு எதுவும் செய்யாமல் நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் பூட்டுப் போடும் நிலைக்கு நீங்கள் வரவேண்டும். எட்டு விதமான பூட்டுக்கள் உள்ளன, ஆனால் பொதுவாக நாம் மூன்றைத் தான் மக்களுக்குக் கற்றுத் தருகிறோம், ஏனென்றால் மூன்றுதான் அவர்களுக்குப் பொருந்தும். மற்ற அம்சங்களுக்குச் செல்லும்முன் சற்று பயிற்சி தேவை. உங்கள் உடலில் போதுமான சக்தி ஓட்டம் இருந்தால், அது தேவையான அளவு வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், எட்டு விதமான பூட்டுக்களையும் நீங்கள் போட முடியும். பெரும்பாலான மனிதர்கள் பிறர் கனவில் கூட கண்டிராத விஷயங்களைச் செய்யும் ஆற்றலை அவை உங்களுக்கு வழங்கும்.

நீங்கள் செய்யும் இம்மூன்று பூட்டுக்கள் மூலமாகவும், மெதுவாக உங்களைத் தசைகளைப் பயன்படுத்தாமலே பூட்டுப்போடும் நிலைக்கு எடுத்துச்செல்லவே விரும்புகிறோம். அதனை இப்போது செய்ய முயலாதீர்கள் - உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்கிவிடுவீர்கள். முதலில் உடலைப் பயன்படுத்தி இந்தப் பூட்டுக்களை சரியாகச் செய்யவேண்டும். பிறகு நீங்கள் விரும்பினால், தசைகளை பயன்படுத்தாமலே நீங்கள் விரும்பும் பூட்டைப் போட்டுக்கொள்ளும் நிலைக்கு உங்களால் வரமுடியும். நீங்கள் செய்யவிரும்பும் ஒரு குறிப்பிட்ட செயலில் சக்திகள் செலுத்தப்படும் விதமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட பூட்டு போடமுடியும். வேறெங்கும் வீணாகாமல் உங்கள் சக்தி அதைநோக்கிச் செலுத்தப்படுவதால் அந்தச் செயல் அற்புதமாக நிகழும். அதனால் பந்தங்கள் என்பது பூட்டுப்போட்டு உங்கள் சக்தியை விரும்பும் திசையில் செலுத்தவல்ல உங்கள் திறமையைக் குறிக்கிறது.

உதாரணத்திற்கு நீங்கள் பேச விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் - அதற்கு உங்கள் சக்தி எல்லாப்பக்கமும் ஓடத் தேவையில்லை. உங்கள் சக்திமீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், ஒரு குறிப்பிட்ட செயலுக்கு எங்கு தேவைப்படுகிறதோ அங்கு உங்களால் வைத்துக்கொள்ள முடியும். சக்தியின் தேவையில்லாத ஓட்டம் உங்களை திறம்பட செயல்பட அனுமதிக்காது. நீங்கள் ஒரு திசையில் போக விரும்பி உடல் வேறெங்கோ சென்றால், அது திறம்பட இயங்குவதா? அது மனதிற்கும் பொருந்தும், மனதில் தேவையற்ற அசைவு உங்களை திறம்பட செயல்பட அனுமதிக்காது. நீங்கள் ஏதோவொன்றைச் செய்ய விரும்பும்போது உங்கள் மனது வேறெங்கோ இருந்தால் அச்செயலை உங்களால் நல்லபடியாக செய்யமுடியாது. பொருள்நிலையில் இருக்கும் உடல் நீங்கள் விரும்புவதை செய்யாவிட்டால், நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததையே இது குறிக்கிறது. மன உடல் நீங்கள் விரும்புவதை செய்யாதபோது, நீங்கள் சற்று கட்டுக்கடங்காமல் இருக்கிறீர்கள். உங்கள் செயல் என்பது எந்த அளவு நுட்பமானதோ அந்த அளவு அதில் ஈடுபாடு இல்லாமல் உங்களால் அதனைச் செய்ய முடியாமலிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். யோகா என்பது மிகவும் நுட்பமான செயல்.

பரிணாம வளர்ச்சி சார்ந்தது
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அர்த்தமுள்ள செயல் செய்ய விரும்பினால், உங்களுக்கு பலம் இருந்தால் மட்டும் போதாது, பலத்தில் விடாப்பிடியான தன்மையும் இருக்கவேண்டும். அப்போதுதான் உங்கள் பலம் உங்களை விட்டுக்கொடுக்காமல் தாங்கிப்பிடிக்கும். நுட்பமான செயல்களுக்கு, உங்கள் அன்னமய கோஷா, மனோமய கோஷா மற்றும் பிராணமய கோஷா நீங்கள் விரும்பும்விதமாக செயல்பட முடியவேண்டும். உங்கள் விரலை உங்களால் அசைக்க முடிவது போல, உங்கள் சக்தி உடலை உங்களால் அசைக்க முடியவேண்டும். அப்போதுதான் செயலாற்றுவதற்கான உங்கள் திறமை பெரியளவில் மேம்படும். மனிதர்கள் இப்போது ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னவாக இருக்கமுடியும் என்பதற்கும், என்னவாக தங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. ஒரு புலி அல்லது குரங்கு அல்லது வேறெந்த உயிரினமும் தன் முழுத்திறனுடன் பிறந்திருக்கும்போது, மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தகைய முயற்சி தேவைப்படுகிறது? இது பரிணாம வளர்ச்சியில் உள்ள பிரச்சனை.
உங்கள் மரபணு அமைப்புக்கும் ஒரு மனிதக் குரங்கின் மரபணு அமைப்புக்கும் இடையிலான வித்தியாசம் மிகச் சிறியது, ஆனால் விழிப்புணர்வு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பொருத்தவரையில் இரண்டுக்கும் இடையே உலகளவு வித்தியாசமுண்டு. ஒரு மனிதக் குரங்குக்கு, பொருள் நிலையிலுள்ள உடல் மனிதர்களை ஒத்த விழிப்புணர்வையும் புத்திசாலித்தனத்தையும் அடையும் விதமாக பரிணமிக்க முயன்றது, ஆனால் அது அந்த நிலையை அடையவில்லை. ஏனெனில் மனித விழிப்புணர்வின் பரிணாம வளர்ச்சியில் வேறு பல விஷயங்கள் பங்கு வகித்துள்ளன. ஆனால் பொருள்நிலை உடலோ, நாம் வாழும் சூரிய மண்டலத்தால் முற்றிலும் உருவாக்கப்பட்டது. நம் சூரிய மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாதவரை நம் பொருளுடல் இதற்கு மேல் பரிணமிக்க முடியாது என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதியோகி சொன்னார். ஆனால் நம் புத்திசாலித்தனமும், விழிப்புணர்வும் வீண்போகாத விதமாக நம்மால் இந்த உடலை ஸ்திரமான உறுதியான அடித்தளமாக்கிட முடியும்.

பந்தங்களிலிருந்து பேரானந்தத்திற்கு
பூட்டுக்களின் இன்னொரு பரிமாணம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட ஆசன நிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் உடலை வைத்திருந்தால், ஒருவிதத்தில் அது அதன் இயல்பிலேயே ஒரு பூட்டாகிவிடுகிறது. அன்னமய கோஷா, மனோமய கோஷா மற்றும் பிராணமய கோஷா ஒருங்கிணைந்து இயங்கும் விதமான வடிவியலை உருவாக்கவே நீங்கள் ஆசனநிலையில் இருக்கிறீர்கள். பொருள் உடல், மன உடல், சக்தி உடல், இம்மூன்றும் பொருள்தன்மை கொண்டவை. நீங்கள் பொருள்தன்மையை சீர்செய்ய முயல்கிறீர்கள். அதற்கு அப்பாற்பட்ட ஆனந்தமய கோஷா அல்லது "பரவச உடலுக்கு" எவ்வித ஒருங்கிணைப்பும் தேவையில்லை, அதை நீங்கள் அனுபவித்துணர்ந்தால் போதும். ஆனால் அதைத் தொடுவதற்கு, உங்கள் பொருள் உடல், மன உடல் மற்றும் சக்தி உடல் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும். நமது பாவஸ்பந்தனா நிகழ்ச்சிகளில் பலபேர் பரவச நிலையை அடைவதைக் காண்பீர்கள். இம்மூன்றும் ஒருங்கிணையும் சூழ்நிலையை உருவாக்குவதால், திடீரென அவர்களுக்குள் பரவசம் வெடித்தெழுகிறது. ஆனால் அதனை தக்கவைத்துக்கொள்ளவும், அதனை எப்போதும் தொடவும், அனுபவித்துணரவும் வேண்டும் என்றால், இம்மூன்றையும் ஒருங்கிணைப்பதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.

ஹடயோகா என்பது அதற்காகத் தான். வெடித்தெழும் பரவசத்தை நீங்கள் உணர்ச்சிகளின்றி உணரமுடியும். இது முக்கியமானது, ஏனென்றால் உங்கள் உணர்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தீவிரப்படுத்த முடியாது. ஆனால் உங்கள் உயிர்சக்தியை நீங்கள் மென்மேலும் தீவிரப்படுத்தலாம். யோகா என்றால் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் எல்லைக்குள் அடங்கிட நீங்கள் விரும்பவில்லை. உங்கள் உடலும், மனதின் எல்லைகளும் உங்கள் வாழ்க்கையின் எல்லைகளை வரையறுப்பதை நீங்கள் விரும்பவில்லை, அதைக் கடந்துசெல்ல விரும்புகிறீர்கள்.

எல்லைகளைக் கடந்து செல்வது
உங்கள் சக்தி உடலை நீங்கள் விரும்பும் விதமாக உங்களால் பயன்படுத்த முடிந்துவிட்டால், பிறகு எல்லையே கிடையாது. பொருள்தன்மைக்கு எல்லையிருக்கும், ஆனால் அனுபவத்தையும் ஆராய்ந்துணர்வதையும் பொருத்தவரை எல்லையிருக்காது. அதைத்தான் பந்தங்கள் மூலமாக ஒரு யோகி அடைய முயற்சிக்கிறார். இந்தியாவில் பல ஆண்டுகளாக யோகிகள் தங்கள் கையை மேலே உயர்த்தி வைத்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், இது ஒருவித பூட்டு. சிலகாலத்திற்குப் பிறகு, இருதயத்தால் கையிற்கு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் கை வாடி சுருங்கிவிடும். மெதுவாக கை முழுவதும் உலர்ந்த குச்சியைப் போல ஆகிவிடும். அப்போதும் அந்தக் கையை அவர் தாழ்த்தமாட்டார். ஏனெனில் இந்தப் பூட்டைப் போட்டு பொருள்தன்மை மற்றும் மனதின் எல்லைகளைக் கடப்பதே நோக்கமாக இருக்கிறது.

மனம் மற்றும் உடலின் எல்லைகளை நீங்கள் கடக்கும்போது, தூய்மையான சக்தி மட்டுமே இருக்கும் ஒரு இடத்தை நீங்கள் அடைவீர்கள். இந்த பிரபஞ்சத்திலிருந்து மாறுபடாத வெறும் சக்தியாக நீங்கள் இங்கே இருந்தால், பிரபஞ்சத்துடன் ஒன்றாகி, அதனை உணர்ந்து, அதனுடன் இரண்டறக் கலந்து, படைப்பையும் படைத்தவனையும் அறிவது ஒரு சாத்தியமாகிறது. பந்தங்கள் இந்த நோக்கத்தில் செயல்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X