இன்ஜி., கவுன்சிலிங் பதிவுகளில் குளறுபடி அரசு பள்ளி தர வரிசையில் சொதப்பல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கவுன்சிலிங் பதிவுகளில் குளறுபடி அரசு பள்ளி தர வரிசையில் சொதப்பல்

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:தமிழகத்தில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கிய நிலையில், பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ஆன்லைன் வாயிலாக கல்லுாரியை பதிவு செய்ய வசதியின்றி மாணவர்கள் திண்டாடினர். அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பட்டியலில், அரசு பள்ளி மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர்

சென்னை:தமிழகத்தில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கிய நிலையில், பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ஆன்லைன் வாயிலாக கல்லுாரியை பதிவு செய்ய வசதியின்றி மாணவர்கள் திண்டாடினர்.

அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பட்டியலில், அரசு பள்ளி மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் நடக்கிறது. 1.39 லட்சம் பேர்இந்த ஆண்டில், 440 கல்லுாரிகளில், 1.51 லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதற்கு, 1.39 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு, 15 ஆயிரத்து 660 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும், அவர்களில், 11 ஆயிரத்து 390 பேருக்கு இடம் கிடைக்கும் என்றும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் நாளில் கவுன்சிலிங் நேற்று துவங்கியது.கவுன்சிலிங்குக்கு தயாரான மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஆன்லைன் முறையில், 'சாய்ஸ் பில்லிங்' என்ற விருப்ப பதிவு வசதி செயல்படவில்லை.


தொலைபேசி எண் 'மக்கர்'

இதுகுறித்து, கவுன்சிலிங் இணையதளத்தில் வழங்கிய தொலைபேசி எண்ணில் அழைத்தால், 'இந்த எண் பதிவாகாத எண்' என, தகவல் வருகிறது. சில எண்கள், 'பிசி'யாக உள்ளது என, தானியங்கி தகவல் வருகிறது.இதனால், செயல்படாத எண் கொடுத்து விட்டனர்; செயல்படும் எண்களின் தொலைபேசியையும் கீழே எடுத்து வைத்துவிட்டனரோ என மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு கவுன்சிலிங் உதவி மையங்களுக்கு சென்றால், 'உங்களுக்கு எஸ்.எம்.எஸ்., வரும்; இ- - மெயில் வரும்' என்றுகூறி, மாணவர்களை திருப்பி அனுப்பினர்.இதுமட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலில், பல அரசு பள்ளி மாணவர்கள் பலரின் பெயர்கள் இடம் பெறாததால், செய்வதறியாமல் திணறினர். தங்களுக்கு பள்ளியிலும் வழிகாட்டவில்லை; உயர் கல்வி துறையும் வழிகாட்டவில்லை என, மாணவர்கள் விரக்தியில் புலம்பினர்.

அவர்களுக்கு சில அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் ஆறுதலாக இருந்து, கவுன்சிலிங் மையத்தை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.உதவி மையம் கைவிரிப்புபாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, கவுன்சிலிங் உதவி மையத்திலும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிலர் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கே நேரில் சென்றனர். அவர்களுக்கு மட்டும், 'மேனுவல்' முறையில் தரவரிசையை மாற்றி, அரசு பள்ளி மாணவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்கிலும் நேற்று மாணவர்கள் தவித்தனர். ஆன்லைன் முறையில் வாய்ப்பு வழங்கவில்லை. பின், மாணவர்களை போனில் தொடர்பு கொண்டு, 'வீடியோ' வாயிலாக வரவழைத்தும், அருகில் வசிப்பவர்களை நேரில் கவுன்சிலிங் மையத்துக்கு வரவழைத்தும், எந்த கல்லுாரி வேண்டும் என்று கேட்டு, மேனுவல் ஆக பதிவு செய்துள்ளனர்.


மாணவர்கள் அச்சம்

முதற்கட்டமாக, 15 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் நடத்துவதிலேயே நேற்று இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், 1.35 லட்சம் பேர் பங்கேற்கும் பொது கவுன்சிலிங்கில், எவ்வளவு குழப்பங்கள் நடக்குமோ; சரியாக இன்ஜினியரிங் படிப்பில் சேர முடியுமா என்றும் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீட் குறித்து மாத கணக்கில் பேசி கொண்டிருக்கும் தமிழக அரசு, பல லட்சம் பேர் படிக்கும் இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையை முறையாக நடத்துவதில் கோட்டை விட்டு விட்டதாக, மாணவர்களும், பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குளறுபடியாக துவங்கிய கவுன்சிலிங்கை ரத்து செய்து விட்டு, முறையாக திட்டமிட்டு, வேறு தேதிகளில் முறைப்படி புதிதாக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


வழிகாட்டுதலின்றிகவுன்சிலிங்

ஆன்லைன் கவுன்சிலிங்கை பொறுத்தவரை, ஐ.ஐ.டி.,யை போல 'சாய்ஸ் பில்லிங்' முறை, மூன்று ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலையால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையில், தர வரிசை வெளியான பின், கவுன்சிலிங்கை துவங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும். அதற்கு முன் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டல் வழங்கப்படும். சாய்ஸ் பில்லிங் என்ற விருப்ப பாடப் பிரிவு, விருப்ப கல்லுாரி பதிவு செய்யும் தேதிகள் அறிவிக்கப்படும்.

எந்த 'கட் ஆப்' மாணவர்கள் எப்போது விருப்ப பதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு முறைகள் வெளியாகும். சாய்ஸ் பில்லிங் குறித்த வீடியோக்கள் வெளியிடப்படும். இந்த ஆண்டு இந்த வழிமுறைகளில் ஒன்றை கூட, உயர்கல்வி துறை பின்பற்றவில்லை.முதல் கோணல்முற்றிலும் கோணல்?வழக்கமாக கவுன்சிலிங் விபரங்கள் குறித்து, அண்ணா பல்கலைக்கு பத்திரிகையாளர்களை அழைத்து, அமைச்சர், செயலர் ஆகியோர் விபரமாக பேட்டி அளிப்பர். அது இந்த முறை தவிர்க்கப்பட்டது.

தர வரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங்குக்கு மூன்று முறை தேதி மாற்றப்பட்டது. முதலில் செப்., 4ல் தர வரிசை வெளியாகும் என்றனர். செப்., 1ல், அண்ணா பல்கலையில், உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் அளித்த பேட்டியில், 'திட்டமிட்ட தேதியில் தர வரிசை பட்டியல் வெளியாகும்' என்றார்.பின், 30 வினாடிகளில் தேதியை மாற்றி, 11ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியாகும் என, அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அன்று மாலையிலேயே, இன்ஜினியரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 14ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியாகும் என்றும், 17ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், 12ம் தேதி கவுன்சிலிங் இணையதளத்தில், திடீரென தரவரிசை பட்டியல் வெளியானது; பின், நீக்கப்பட்டது.இந்நிலையில், 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக தரவரிசை பட்டியல் வெளியானது. அப்போது, கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டு, 15ம் தேதியான நேற்றே கவுன்சிலிங் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படி திட்டமிடுவதிலும், தேதியை நிர்ணயிப்பதிலும் தொடர் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X