உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ரவி சர்வோத்தமன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சேப்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியால், சட்டசபையில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லையாம். எதிர்க்கட்சியினர் யாரும், ஆளும் அரசினை எந்த கேள்வியும் கேட்பதில்லை; மாறாக, பாராட்டு தெரிவிக்கின்றனர்... அதனால், 'போர்' அடிக்கிறதாம் உதயநிதிக்கு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை தவிர, வேறொன்றும் இல்லாமல், சட்டசபைக்குள் எளிதாக நுழைந்திருக்கும் உதயநிதிக்கு, போர் அடிக்கத் தான் செய்யும். வாரிசு அடிப்படையில், எந்தவித உழைப்பும், கஷ்டமும் இல்லாமல், கட்சி மற்றும் ஆட்சி பொறுப்புகள் தேடி வருவதால், மக்கள் பிரதிநிதி என்ற அங்கீகாரம் பயனற்ற ஒன்றாகத் தான் தெரியும்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நேர் பின்புறம் இருக்கை வழங்கி, எப்போதும் கேமராவில் படும்படி அமர வைக்கப்பட்டுள்ளதால், உதயநிதி நொந்து கொள்வதில் ஆச்சரியமில்லை.ஒரு காலத்தில் கண்ணியமிக்கதாக சட்டசபை இருந்தது; அதை நாகரிகமற்ற பேச்சால், செயலால் மாற்றியது யார் என்பது உதயநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சட்டசபை உறுப்பினர் பணியை பயனுள்ள வகையில் எவ்வாறு செய்வது என யோசித்து, தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து, உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்தி செயல்பட்டால், உதயநிதிக்கு, போர் அடிக்காது. முயற்சி செய்யுங்களேன் முதல்வர் ஸ்டாலினின் செல்லப் பிள்ளையான உதயநிதி அவர்களே!