சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்சிறுமிக்கு திருமணம்; 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர் உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இளையான்குடி அருகே நாகநாத புரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எஸ்.காவனுரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின்
crime,murder,theft


தமிழக நிகழ்வுகள்
சிறுமிக்கு திருமணம்; 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர் உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இளையான்குடி அருகே நாகநாத புரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எஸ்.காவனுரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் கோவிந்தராஜன் என்பவருக்கும் கடந்த 9ம் தேதி சிறுமியின் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது.தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பினர் பெற்றோர்களை அழைத்து பேசினர். திருமணத்தை நிறுத்துவதாக பெற்றோர் உறுதியளித்தனர். ஆனால் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தியுள்ளனர்.

இது குறித்து ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் சின்னப்பெண், சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மணமகன் கோவிந்தராஜன், அவரது தந்தை ராமச்சந்திரன், தாயார் தேவி, சிறுமியின் தந்தை ராமர், தாயார் முத்துலட்சுமி, திருமணத்திற்கு உதவிய இளமனூர் சத்தியேந்திரன், ஜெயந்தி, காட்டு பரமக்குடி பாண்டியன், எமனேஸ்வரம் பால்சாமி, நாகநாதபுரம் கிராம உதவியாளர் முருகன், திருமண பத்திரிக்கை அச்சிட்ட அச்சக உரிமையாளர் உள்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


8 பெட்டி மது, ரூ. 20 ஆயிரம் மொய் கொள்ளையன் 'ஜாலி' அம்பலம்திருப்பூர் : திருப்பூரில் பெண்ணிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற வாலிபர், கொள்ளையடித்த பணத்தில் எட்டு பெட்டி பீர் பாட்டில் வாங்கி நண்பர்களுக்கு வழங்கியதோடு, திருமணத்துக்கு மொய்யாக 20 ஆயிரம் ரூபாயை வைத்தது தெரியவந்துள்ளது.

திருப்பூர் - முத்தணம்பாளையம், குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் ராமநாதன்; இவரது மனைவி தேன்மொழி, 36. கடந்த 9ம் தேதி, பத்திரப்பதிவு அலுவலகம் சென்றனர். திரும்பி வரும்போது, கேத்தம்பாளையத்தில் பைக்கில் வந்த மர்ம நபர், தேன்மொழியிடம் இருந்து 11.12 லட்சம் ரூபாய் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றார். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர்.சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில், திருப்பூர் - தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண்குமார், 23 என்பவரை கைது செய்து, 10.30 லட்சம் ரூபாய் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

அருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பணத்தை தம்பதியரிடம் போலீஸ் கமிஷனர் வனிதா நேற்று ஒப்படைத்தார்.போலீசார் கூறியதாவது:கொள்ளையடித்த பணத்தில், 82 ஆயிரம் ரூபாயை அருண்குமார் செலவழித்துள்ளார். ஊருக்குள் இருந்தால் போலீசில் சிக்கி கொள்வோம் என திட்டமிட்ட வாலிபர், திருவண்ணாமலையில் நண்பரின் திருமணத்துக்கு சென்றார். அதற்காக, இரண்டு கார்களை வாடகைக்கு அமர்த்தி, நண்பர்களையும் அழைத்து சென்றார்.செல்லும் வழியில், எட்டு பெட்டிகளில் பீர் பாட்டில், நான்கு 'புல்' பாட்டில் மது வாங்கி நண்பர்களுடன் ஜாலியாக பணத்தை செலவு செய்தார். திருமணத்தில் பங்கேற்று, 20 ஆயிரம் ரூபாய் மொய் வைத்ததும் தெரியவந்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மனைவி கொலை கணவன் வெறிச்செயல்தடாகம் ரோடு, மஞ்சீஸ்ஸ்வரி காலனியில் வசிப்பவர் ஆனந்தகுமார், 50; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி, 45. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ஆனந்தகுமார், நேற்று மாலை குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தினார். ரத்த காயத்துடன் இடையர் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வி கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்வி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துடியலுார் போலீசார், ஆனந்தகுமாரை தேடி வருகின்றனர்.


32 பெண்களிடம் ரூ.1.50 கோடி மோசடி நைஜீரிய 'சிங்கிள்ஸ்' இருவருக்கு 'காப்பு!'சென்னை-வரன் தேடி வந்த, தமிழகத்தைச் சேர்ந்த 32 பெண்களிடம், டாக்டர்கள் போல நடித்து, 1.50 கோடி ரூபாய் மோசடி செய்தது, நைஜீரிய வாலிபர்களிடம் விசாரித்ததில் அம்பலமானது.

ஆப்ரிக்க நாடான நைஜீரி யாவைச் சேர்ந்தவர்கள் பாலினஸ் சிகேலுவோ, 31, சிலிட்டஸ் இகேசுக்வு, 23. மாணவர்கள் போல டில்லி உத்தம் நகரில் தங்கி இருந்தனர். இவர்கள், சமூக வலைதளமான 'பேஸ்புக், டுவிட்டர்' வாயிலாக பெண்களுடன் பழகி வந்தனர்.மேலும், திருமண தகவல் இணையதளத்தில் மணப்பெண் தேடுவது போல இணைந்துள்ளனர். அந்த இணையதளம் வாயிலாக, வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டும் என, வரன் தேடும் பெண்களை குறிவைத்து, அவர்களுடன் நட்பாக பழகி வந்தனர்.'வாட்ஸ் ஆப்'பில் பல மணி நேரம் 'சாட்டிங்' செய்து, நெதர்லாந்து டாக்டர் எனக்கூறி அந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தனர்.

தங்களிடம் சிக்கிய பெண்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறி வந்தனர். பின், அந்த பரிசுப் பொருளை அனுப்ப பதிவு கட்டணம், சுங்க வரி செலுத்த வேண்டும் என நம்ப வைத்து, வங்கி கணக்கு வாயிலாக கோடிக்கணக்கில் சுருட்டி வந்தனர்.இவர்களிடம், 7 லட்சம் ரூபாய் வரை இழந்த, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, டில்லியில் பதுங்கி இருந்த பாலினஸ் சிகேலுவோ மற்றும் சிலிட்டஸ் இகேசுக்வு ஆகியோரை ஆக., 31ல் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இவர்களை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, சென்னை உட்பட, தமிழகத்தைச் சேர்ந்த, 32 பெண்களிடம், 1.50 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இவர்களில், திருமண வயதை கடந்தவர்களே அதிகம் என போலீசார் தெரிவித்தனர்.


ரவுடியாகும் ஆசையில் அட்டூழியம்; சிறுவன் உட்பட மூவர் கைதுவிருகம்பாக்கம்-சென்னை, கே.கே.நகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடியை, இரு சக்கர வாகனத்தில் வந்த, மூன்று பேர் கும்பல் அடித்து நொறுக்கியது.பின், அந்த கும்பல், வளசரவாக்கம் பகுதியில் பால் வினியோகம் செய்யும் மேடவாக்கத்தைச் சேர்ந்த உமா சங்கர், 31, மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், 35, ஆகிய இருவரை, கத்தியால் வெட்டியுள்ளனர்.இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், ரகளையில் ஈடுபட்டது, விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக், 22, விருகம்பாக்கம், தங்கல் உள்வாயல் தெருவைச் சேர்ந்த அரவிந்தன், 23, மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.தொடர் விசாரணையில், ரவுடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பி இதை செய்ததாகக் கூறினர்.


'நீட்' தேர்வு எழுதிய மாணவி தற்கொலைவேலுார்:'நீட்' தேர்வு எழுதிய காட்பாடி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் அருகே, காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 63; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி, 50.இவர்களின் மகள் சவுந்தர்யா, 17, வேலுார் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 510 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.

கடந்த 12ம் தேதி கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில் நீட் தேர்வு எழுதினார்; தேர்வு கடினமாக இருந்ததாகவும், சரியாக எழுதவில்லை என்றும் தாய், தந்தையிடம் சொல்லி சவுந்தர்யா புலம்பியுள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறினர். ஆயினும், மனமுடைந்து காணப்பட்டார்.நேற்று காலை திருநாவுக்கரசு, ருக்மணி வெளியே சென்றிருந்தனர்.

வீட்டில் சவுந்தர்யா மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வந்தபோது, அறைக்குள் சவுந்தர்யா சேலையில் துாக்கிட்டு சடலமாக தொங்கினார்.தோல்வி பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. லத்தேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


நெல்லையில் பழிக்கு பழி பயங்கரம்; தலைகளை துண்டித்து வீசிய கும்பல்திருநெல்வேலி:-நெல்லையில் பழிக்குப் பழியாக இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தலைகள் துண்டித்து வீசப்பட்டிருந்தன.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளத்தை அடுத்துள்ள வடுவூர்பட்டியில் செப்., 13 இரவு கீழச்செவலை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், 37, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் தலையை காணவில்லை. கடந்த 2014ல், அரசு பஸ்சில் சென்றபோது மந்திரம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அதற்கு பழிக்கு பழியாக சங்கரசுப்பிரமணியனை கொலை செய்து, அவரது தலையை மந்திரத்தின் சமாதி அருகில் வீசிச் சென்றிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை கோபாலசமுத்திரம் அருகே மாரியப்பன், 38, என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்த கும்பல், சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக, அவரை கொலை செய்த இடத்தில் வீசிச் சென்றனர்.

சம்பவ இடத்தில் எஸ்.பி., மணிவண்ணன், டி.ஐ.ஜி., அபினபு, தென்மண்டல ஐ.ஜி., அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளத்தில் இரு ஜாதியினர் இடையே உள்ள பகையால், தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன. நேற்றைய கொலையில் ஈடுபட்டது 15 - 16 வயது சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சிக்கன் கடைக்காரர் கொலை; ஒரே குடும்பத்தில் 4 பேர் கைதுராணிபேட்டை:சிக்கன் கடைக்காரர் கொலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே தப்பூர் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45; சிக்கன் கடை வைத்துள்ளார். மனைவி கங்கா, 35. இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 75; விவசாயி. மனைவி கிருஷ்ணவேணி, 65, மகன்கள் உமேஷ், 35, அன்பு, 32; அங்கு டிபன் கடை நடத்தி வருகின்றனர்.

ரங்கநாதன், கிருஷ்ணன் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மீண்டும் மோதல் நடந்தது. இதில், கிருஷ்ணன் குடும்பத்தினர் கட்டையால் தாக்கியதில் ரங்கநாதன் இறந்தார்.பாணாவரம் போலீசார், கிருஷ்ணன், அவரது மனைவி, இரு மகன்களை கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.


தாயை கொலை செய்து அருகில் உறங்கிய மகன்தஞ்சாவூர்:தாயை கொலை செய்து, அருகிலேயே படுத்து உறங்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்திகேட்டைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 70. கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஐந்து மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். கடைசி மகன் பழனி, 36, தவிர மற்ற ஆறு பேருக்கும் திருமணம் ஆகி தனியாக வசிக்கின்றனர். மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்த பழனி, ஓராண்டுக்கு முன் பைக் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து, மனநிலை பாதிக்கப்பட்டார்.பழனி நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றபோது, தாய் சரஸ்வதி தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பழனி, கத்தியால் தாயின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியதில், அவர் இறந்தார். தாய் இறந்தது தெரியாமல், அவர் அருகிலேயே இரவு முழுதும் படுத்து உறங்கிய பழனி, நேற்று காலை தாயை எழுப்பியுள்ளார். வெகு நேரமாக தாய் எழுந்திருக்காததால், அருகில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு சென்று, 'அம்மா துாக்கத்தில் இருந்து எழவில்லை' என ரத்தம் படிந்த சட்டையுடன் சென்று கூறி உள்ளார். சகோதரி, வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சரஸ்வதி இறந்து கிடந்தார்.போலீசார், பழனியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


பைக்குகள் மோதல்; 3 பேர் பலிதென்காசி:தென்காசி மாவட்டம், புளியரையைச் சேர்ந்த சதாசிவம், 24, நண்பர் சுரேஷ்குமார், 23, என்பவருடன் செங்கோட்டையில் இருந்து புளியரைக்கு நேற்று, 'ஹோண்டா யுனிகான்' பைக்கில் சென்றார்.

மேலக்கடையநல்லுாரை சேர்ந்த நாகலிங்கம், 20, நண்பர் கார்த்திக், 20, என்பவருடன், 'பல்சர்' பைக்கில் புளியரையில் இருந்து செங்கோட்டை சென்றார்.கட்டளைகுடியிருப்பு அருகே இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின. நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். நாகலிங்கம், சதாசிவம், சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


latest tamil news

இந்திய நிகழ்வுகள்
தீப்பற்றிய கார்: 5 பேர் பலிராம்கர்: ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டம் முர்பந்தாவில், பஸ் மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்தது. இதில், காருக்குள் இருந்த, பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பலியாயினர். படுகாயம் அடைந்த பஸ் டிரைவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


சிறுத்தை அடித்து பெண் பலிசியோனி: மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டம் மோகான் கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர், நேற்று விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு வந்த சிறுத்தையால் பீதியுற்ற அவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதற்குள் 50 வயது பெண்ணை சிறுத்தை அடித்துக் கொன்றது. உடலை மீட்ட வனத்துறையினர், அவரது குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கினர். மேலும் 3.90 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என கூறினர்.


ஹரியானாவில் 10 நாளில் 8 குழந்தைகள் பலிசண்டிகர்: கொரோனா பரவலில் இருந்து ஹரியானா மாநிலம் மீண்டு வரும் நிலையில், இங்கு உள்ள பல்வால் மாவட்டத்துக்கு உட்பட்ட சிறிய கிராமமான சில்லியில், மர்ம காய்ச்சல் பரவிஉள்ளது. இந்த காய்ச்சலால், கடந்த 10 நாட்களில் 43 குழந்தைகள் உட்பட 52 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் எட்டு குழந்தைகள் இறந்து விட்டனர். இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள், கிராமத்தில் முகாமிட்டுஉள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
16-செப்-202123:56:23 IST Report Abuse
Aarkay பாருக்குள்ளே நல்ல நாடு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X