சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தீர்மானம் இருக்க கவலை ஏன்?

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தீர்மானம் இருக்க கவலை ஏன்?க.சிவஞானம், பெருமாள்புரம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், 'தீர்மானம்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன. நாட்டு மக்களாகிய நாமும், அதன் சூட்சுமம் புரியாமல், பூரித்து மகிழ்கிறோம்.'குடி'காரன் ஒருவன், தினமும் மது அருந்துவதால் வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும்


தீர்மானம் இருக்க கவலை ஏன்?க.சிவஞானம், பெருமாள்புரம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், 'தீர்மானம்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன. நாட்டு மக்களாகிய நாமும், அதன் சூட்சுமம் புரியாமல், பூரித்து மகிழ்கிறோம்.'குடி'காரன் ஒருவன், தினமும் மது அருந்துவதால் வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும் தான். இதற்கு முடிவு கட்ட, ஒரு நாள் தன் மனைவி-, குழந்தைகள் அனைவரையும் அழைத்து, 'நாளை முதல் குடிக்க மாட்டேன்; இது சத்தியம்' என தீர்மானம் போடுகிறான்.இதனால், அவனது குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறது; ஆனந்தக் கூத்தாடுகிறது.அவன் போட்ட தீர்மானத்தால், 'டாஸ்மாக்' கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுமா அல்லது 'குடி'மகன்கள் அனைவரும், 'டேய், ஐயா தீர்மானம் போட்டுட்டார்டா... இனிமே நாமும் தண்ணியடிக்க கூடாதுடா' என திருந்தி விடுவரா?இது தான்ங்க, தீர்மானம் என்பது!உங்கள் ஊரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அமைச்சரிடம், நீங்கள் ஆர்வமாக கொடுக்கும் கோரிக்கைக்கு என்ன மரியாதை கிடைக்குமோ, அதே மரியாதை தான், அரசியல் கட்சிகள் போடும் தீர்மானத்திற்கும் கிடைக்கும்.சில நாட்களுக்கு முன் தமிழக சட்டசபையில் 2021 ஜன., 10ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் போடப்பட்டது.மத்திய அரசு அமல்படுத்தி, அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கட்டுப்படுத்துமா... நிச்சயம் கட்டுப்படுத்தாது!சமீபத்தில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.உச்ச நீதிமன்றத்தாலேயே தடை விதிக்க முடியாது, விலக்கு அளிக்க இயலாது என தீர்ப்பளிக்கப்பட்ட நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க., அரசு வேடிக்கை காட்டுகிறது.எதிர்க்கட்சியாக இருந்தால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து விடலாம்; விஷயம் சுலபமாக முடிந்து விடும். ஆளும் கட்சியாக இருப்பதால், தி.மு.க.,வினரால் வெளிநடப்பு செய்ய இயலாது; அதனால், 'தீர்மானம்' என, 'படம்' காட்டுகின்றனர்.
தேர்தலுக்கு முன் அளித்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக தேர்வு செய்து, அடுத்தடுத்து வரும் சட்டசபை கூட்ட தொடர்களில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், விஷயம் முடிந்தது.அதன் பின், நாக்கு மீது பல்லு போட்டு யாரும் ஒரு கேள்வி கேட்க முடியாது. அது தான் பதில் தெளிவாக இருக்கிறதே... 'தீர்மானம் போட்டு இருக்கிறோம்' என்று!


தமிழ் படிக்க ஆள் இல்லை!சி.கண்ணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சில ஆண்டுகளுக்கு முன் வரை, 'பண்டிட்' என்ற தமிழ் புலவர் பட்டயப்படிப்பு இருந்தது. அதில் பட்டம் பெறுவோர், தமிழாசிரியர் ஆகலாம்.தமிழ் பண்டிட் முடித்த பலர் சிறந்த பேச்சாளர், ஆய்வாளர், ஆசிரியராக பணியாற்றினர். சமூகத்தில் அவர்களுக்கு என தனித்த மரியாதை இருந்தது.இப்போது, அந்த படிப்பு எங்கும் இல்லை. ஆனால், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் பட்டம் பெறுவதற்கான வசதி, தமிழகத்தில் உள்ளது.தமிழகத்தில் தமிழ் படித்து பட்டம் பெற வேண்டுமென்றால், பி.லிட்., என்ற இளங்கலை படிப்பு இருக்கிறது.இன்று தமிழின் மீது ஆர்வம் ஏற்பட்டு, யாரும் பி.லிட்., படிப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அந்த படிப்பிற்கு வேலை வாய்ப்புகள் பெருமளவில் இல்லை.சமூக நிலையில் பின்தங்கியோர், முதல் தலைமுறைப் பட்டதாரி, கிராமப்புறப் பெண்கள் என எளிய மக்களின் தேர்வாக, தமிழ் இருக்கிறது.தமிழ் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் ஆள் இல்லையென்றால், எப்படி நம் தாய்மொழி வளர்ச்சி பெறும்?
இனி வரும் காலங்களில், 'தமிழாசிரியர்' என்ற மரபே இல்லாமல் போக கூடிய வாய்ப்பு உள்ளது.ஆகையால் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வதை விட, மனிதனுக்கு தமிழ் கற்பிப்பது முக்கியமானது என்பதை, அரசு உணர வேண்டும்.


பேச்சில் சுத்தம் இல்லையே!ரா.மாணிக்கம், பாளையம்பட்டி, அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: எதுகை, மோனையில் பேசி எளிய மக்களைக் கூட கவர்ந்து இழுப்பதில், தி.மு.க., தலைவர்களான அண்ணாதுரை, கருணாநிதிக்கு நிகரானவர் தமிழக அரசியலில் யாருமில்லை. அவர்கள் பேசுவதை எதிர்க்கட்சியினரே ரசித்து கேட்பர்.
அண்ணாதுரை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு, பார்லிமென்டில் முதல்முறையாக உரையாற்றியபோது, பேச்சை முடித்துக் கொள்ளுமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.அப்போது பிரதமராக இருந்த நேரு, 'அவரை தொடர்ந்து பேச அனுமதியுங்கள்' என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டாராம். அவ்வளவு சிறப்பாக பேசினார், அண்ணாதுரை.கடந்த 1962-ல், தமிழக சட்டசபையில் தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது
காங்கிரஸ் உறுப்பினர்கள், 'தி.மு.க.,விற்கு சரியான எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை' என கிண்டல் செய்தனர்.அப்போது அண்ணாதுரை, 'விரைவில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர் என எண்ணுகிறேன்... எதிர்க்கட்சியாக செயல்படும் வாய்ப்பை, வரும் தேர்தலில் நாங்கள் உங்களுக்கு தருவோம்' என்றார்.கருணாநிதி ஒரு முறை, 'தாழ்த்தப்பட்ட மக்கள், கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே...' என்றார். அதற்கு காங்கிரசை சேர்ந்த அனந்தநாயகி, 'கோவிலுக்கே போகாத
கருணாநிதிக்கு இது பற்றி எதற்கு கவலை' என கேள்வி எழுப்பினார்.

'கொலை செய்தவர் மட்டுமா நீதிமன்றம் செல்கின்றனர்; வாதாடுபவரும் தானே போக வேண்டும்' என, சாதுர்யமாக பதில் அளித்தார் கருணாநிதி.இன்று, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் யாருக்கும் அவ்வாறு நயமாக பேசத் தெரியவில்லை.நிதி அமைச்சராக இருக்கும் தியாகராஜன், தமிழை படுகொலை செய்கிறார். 'வாக்குறுதிக்கு தேதி குறிப்பிட்டோமா' என எடக்குமடக்காக கேள்வி கேட்கிறார். முதல்வரே வருத்தம்
தெரிவிக்கும் அளவுக்கு இவரின் பேச்சு உள்ளது.பொருளாதாரத்தில் மேதையாக இருந்தால், முதல்வரின் தனி ஆலோசகராக தியாகராஜனை நியமித்திருக்கலாம். அதை விடுத்து, தமிழை பார்த்து கூட படிக்கத் தெரியாதவருக்கு, தமிழக அரசில் அமைச்சர் பதவி கொடுத்தது ஏற்புடையதல்ல.தமிழ் உணர்வு எல்லாம் அரசியலுக்கு மட்டும் தான்; ஆட்சிக்கு இல்லையா?

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
17-செப்-202116:34:58 IST Report Abuse
Darmavan எந்த மொழியும் நடைமுறை வாழ்வதற்கு உதவியாக இருக்க வேண்டும் .தமிழில் இலக்கியம் தவிர வாழ்க்கைக்கு உபயோகமாகும் ஒன்று கிடையாது.இதை வைத்து அரசியல் செய்யும் திருடர்களுக்கே இது தெரியும் .ஏமாற்று வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X