சில வரி செய்திகள்...: சம்பவம்| Dinamalar

சில வரி செய்திகள்...: சம்பவம்

Added : செப் 16, 2021
Share
படகு விபத்து: 7 உடல்கள் மீட்புமும்பை: மஹாராஷ்டிராவின் அமராவதியில் உள்ள வர்தா ஆற்றில், சமீபத்தில் 13 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஏற்கனவே மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு பேர் ஏற்கனவே உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமாகி உள்ள ஒருவரை
 சில வரி செய்திகள்...: சம்பவம்

படகு விபத்து: 7 உடல்கள் மீட்பு

மும்பை: மஹாராஷ்டிராவின் அமராவதியில் உள்ள வர்தா ஆற்றில், சமீபத்தில் 13 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஏற்கனவே மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு பேர் ஏற்கனவே உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமாகி உள்ள ஒருவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

ஆணழகன் தற்கொலை முயற்சி

மும்பை: சில ஆண்டுகளுக்கு முன் 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் பட்டத்தை வென்ற மனோஜ் பாடீல், 29, மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார். வீட்டில் இருந்த இவர், நேற்று துாக்க மாத்திரைகளை அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன், ஒரு பாலிவுட் நடிகர் மீது போலீசாரிடம் இவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவிலியர்களை அனுப்ப உத்தரவு

புதுடில்லி: டில்லியில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது, வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை கண்காணிக்க, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த மூத்த செவிலியர்கள், தனியார் மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், அந்த செவிலியர்களை அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும்படி, தனியார் மருத்துவ மையங்களுக்கு டில்லி அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளம்பெண் கடத்தல்
நொய்டா: உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில், 20 வயதான ஒரு இளம்பெண், தன் மூன்று இளைய சகோதர, சகோதரிகளுடன் நேற்று அதிகாலை சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சில மர்ம நபர்கள், அந்த இளம்பெண்ணை கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாயமான பெண்ணை தேட, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடத்தலில் ஈடுபட்ட எஸ்.ஐ., கைது

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த எஸ்.ஐ., ஜிதேந்திர கோச் என்பவரை, வனத் துறை மற்றும் வன விலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளும் சேர்ந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 'பாங்கோலின்' எனப்படும் எறும்புண்ணியின் 3.5 கிலோ எடையிலான செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விலங்கின் செதில்கள் மற்றும் இதர உறுப்புகள், சீனா, மியான்மர், தாய்லாந்து, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

முழு அடைப்பு போராட்டம்

கோஹிமா: வடகிழக்கு மாநிலமான நாகாலாந் தில் அரசு அமைப்புகள் மற்றும் அரசியல் குழுக்களால் விதிக்கப்படும் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வர்த்தக சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 12 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தின்போது பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

11 மீனவர்கள் உயிருடன் மீட்பு

மங்களூரு: கர்நாடகாவில் 11 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க படகில் சென்றுள்ளனர். பலத்த காற்று வீசியதால் அந்த படகு 65 கி.மீ., துாரத்திற்கு காற்றில் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் கரையில் இருந்து 65 கி.மீ., தொலைவுக்கு அவர்களின் படகு இழுத்துச் செல்லப் பட்டது. தகவலறிந்த இந்திய கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் இறங்கினர். படகில் தத்தளித்த 11 மீனவர்களையும் அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X