கென்னை :'முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் நடத்தப்படும் சோதனை, பழிவாங்கும் படலம். இத்தகைய பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு, அ.தி.மு.க.,வும், அதன் நிர்வாகிகளும் அடிபணிந்ததில்லை' என, அ.தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது.
இடையூறு
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிக்கை:சட்டசபை தேர்தலில், நிறைவேற்ற முடியாத 505க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், மக்களின் வெறுப்பை, தி.மு.க., சம்பாதித்துஉள்ளது.அதை மூடி மறைத்து, உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.இதற்காக, அ.தி.மு.க., வினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில், போலீசாரை ஏவி, பலவித இடையூறுகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையில், முன்னாள் அமைச்சர் வீரமணி; அவரை சார்ந்தோர் வீடுகளில், ஸ்டாலினின் போலீசார், சோதனை என்ற பெயரில், ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இது உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு, ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. அ.தி.மு.க., செயல்வீரர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், வீரமணி வீட்டில் நடத்தப்படும் சோதனையை, பழிவாங்கும் படலமாகவே, அரசியல் பார்வையாளர்களும், பொதுமக்களும் பார்க்கின்றனர்.
நடவடிக்கை
இத்தகைய பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு, அ.தி.மு.க.,வும் அதன் நிர்வாகிகளும், செயல் வீரர்களும் அடிபணிந்ததில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.அ.தி.மு.க.,வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE