சென்னை : உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை, பா.ஜ., நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர்.தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித்து போட்டியிட உள்ளதாக, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., அறிவித்து விட்டது. அதனால், பா.ஜ., மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து களம் இறங்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.
தொகுதி பங்கீடு
இந்நிலையில், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச் செயலர் கேசவவினாயகன் ஆகியோர், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியை சந்தித்தனர்.உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசினர்.கூட்டணியில், பா.ம.க., இல்லாத நிலையில், கூடுதல் இடங்களை பா.ஜ., எதிர்பார்க்கிறது. சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் மட்டுமே பா.ஜ.,வால் வெற்றி பெற முடிந்தது. எனவே, பா.ஜ.,வுக்கு அதிக இடங்களை ஒதுக்காமல், அ.தி.மு.க., களம் இறங்க வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.இதையும், பா.ஜ., கோரிக்கையையும் பரிசீலித்து, ஓரிரு தினங்களில், பா.ஜ.,வுக்கு எத்தனை சதவீத இடங்கள் என்பதை, அ.தி.மு.க., தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழப்பம் இல்லை
இதற்கிடையில், அண்ணாமலை அளித்த பேட்டியில், ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பா.ம.க., தங்களின் கட்சி வளர்ச்சிக்காக, தனித்து போட்டியிட இருப்பதாக கூறியுள்ளது.''உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வின் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைப்போம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE