இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 48; பத்திர எழுத்தராக உள்ளார். இவரது தாய் காசியம்மாள், விஜயமாநகரம் பகுதியில் இறந்ததால் ஈமச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருடன் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டை பூட்டிச் சென்றார்.மதியம் 3:00 மணியளவில் மர்ம
தமிழக நிகழ்வுகள்பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள்


உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 48; பத்திர எழுத்தராக உள்ளார். இவரது தாய் காசியம்மாள், விஜயமாநகரம் பகுதியில் இறந்ததால் ஈமச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருடன் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டை பூட்டிச் சென்றார்.மதியம் 3:00 மணியளவில் மர்ம நபர்கள் இருவர், அன்பழகன் வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர்கள் இருவர் வந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடன் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அந்த நபர்கள் கத்தியை காட்டியும், கல்லால் தாக்கவும் முயன்றனர்.

இருப்பினும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் கொண்டு வந்த கைபை மற்றும், பல்சர் பைக்கையும் விட்டு விட்டு தப்பியோடினார். ஆசாமிகள் விட்டுச் சென்ற கைப்பையில் அன்பழகன் வீட்டில் இருந்து திருடி வந்த 60 ஆயிரம் ரூபாய் இருந்தது.இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், அன்பழகன் வீட்டில் திருடி தப்பியோடிய நபர்கள் விருத்தாசலம் சாலையில் நின்றிருந்த பைக்கை திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.latest tamil newsவிளையாட்டு வினையானது


திருப்பூர்: காதலியை பயமுறுத்த, துாக்கு மாட்டுவது போல் விளையாடிய வாலிபர் பரிதாபமாக பலியானார்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜாகுமார், 18; திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம், முட்டியங்கிணறு பகுதியில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தார். சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம், தான் பணிபுரியும் கட்டடத்தில் இருந்து, பீஹாரில் உள்ள காதலிக்கு, 'வாட்ஸ் ஆப்' வீடியோவில் பேசி உள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுஉள்ளது. உடனே ராஜாகுமார், காதலியை பயமுறுத்தும் வகையில், விளையாட்டாக, 'நான் தற்கொலை செய்ய போகிறேன்' எனக் கூறி, கயிற்றால் கழுத்தில் சுற்றி மரத்தை பிடித்து தொங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக, கயிறு கழுத்தை இறுக்கியதில் பலியானார். இதை வீடியோவில் பார்த்து, காதலி அதிர்ச்சி அடைந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


3 கல்யாணம்; 2 கள்ளக்காதல் கொலையில் முடிந்த கூடாநட்பு


சேலம்:கள்ளக்காதல் விவகாரத்தில், பெண்ணை சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட மோதலில், தொழிலாளியை அவரது நண்பரே கத்தியால் குத்தி கொலை செய்தார்.
சேலம், அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த இளம்பெண் கலைமணி, 23. இவர், 2017ல் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். 2018ல் மற்றொருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றார். 2019ல் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன், 29, கலைமணியை திருமணம் செய்தார். முருகேசனை விவாகரத்து செய்யாத நிலையில், அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி கிருபைராஜ், 23, என்பவருடன் கலைமணி நெருங்கி பழகினார்.கிருபைராஜ், கலைமணியை பார்க்க செல்லும்போது, அவரது நண்பர் கலையரசன், 23, என்பவரை அழைத்து சென்றார். கலைமணி, கலையரசனுடனும் நெருங்கி பழகினார்.
கலைமணி ஆறு மாத கர்ப்பமானார். அவரை யார் திருமணம் செய்து கொள்வது என்பதில், கலையரசன், கிருபைராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று சேலம் கந்தாஸ்ரமம் மலைப் பகுதிக்கு கலைமணி, கிருபைராஜ் சென்றனர்.அப்போது, கலையரசனை தொடர்பு கொண்டு கிருபைராஜ் வரவழைத்தார். அவர் வந்ததும், கலைமணியை விட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவித்த கிருபைராஜ், கடைசியாக அவருடன் ஒருமுறை நெருக்கமாக இருந்தார். அப்போது, அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த கலையரசன், கத்தியால் கிருபைராஜை குத்தினார். இதில், அவர் உயிரிழந்தார். கிச்சிப்பாளையம் போலீசார், கலையரசனை கைது செய்தனர்; கலைமணியிடம் விசாரிக்கின்றனர்.


திருச்சி பயிற்சி டாக்டர் துாக்கிட்டு தற்கொலை


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னமாண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24; திருச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் பயிற்சி டாக்டர். திருச்சி பெரியமிளகு பாறையில் உள்ள மருத்துவ கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த ரஞ்சித்குமார், நேற்று முன்தினம் இரவு தன் அறைக்கு சென்றவர் வரவே இல்லை. சந்தேகம் அடைந்த நண்பர்கள், நேற்று காலை அறை ஜன்னலை திறந்து பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து, கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், பயிற்சி டாக்டராக பணியாற்றிய ரஞ்சித்குமார், நிறைய பாடங்களில் 'அரியர்' வைத்துள்ளார். இதனால் விரக்தியில் தற்கொலை செய்தது தெரிந்தது.


அனுமதியில்லாத மஞ்சு விரட்டு; மாடு முட்டி இன்ஸ்பெக்டர் காயம்


நாச்சியாபுரம்-திருப்புத்துார் அருகே நடுவிக்கோட்டை அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அனுமதியில்லாமல் நடந்த மஞ்சுவிரட்டில் இன்ஸ்பெக்டர் மீது மாடு முட்டியதில் காயம் அடைந்தார்.

5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நடுவிக்கோட்டையில் அனுமதியில்லாமல் காளைகள் அவிழ்க்கப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீசார் ரோட்டில் வாகனங்களில் வந்த மாடுகளை தடுத்து அனுப்பினர். இருப்பினும் வயல், கண்மாய் பகுதியில் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டது. போலீசார் கண்மாய்,வயல் பகுதியிலும் காளைகளுடன் வந்தவர்களை வெளியேற எச்சரித்தனர். அப்போது அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் மீது குத்தியது. காயமடைந்த அவர் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது குறித்து என்.மேலையூர் குரூப் வி.ஏ.ஓ., கணேஷ் கிருஷ்ணகுமார் நாச்சியா புரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணையில் என். மேலையூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன், ஆண்டான் அடியான் மகன் ஜெயக்குமார், நடராஜன் மகன் போஸ், கிருஷ்ணன் மகன் சண்முக நாதன், மணி மகன் ராதா கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


latest tamil newsகெட்டுப்போன இறைச்சி பறிமுதல்


தேவகோட்டை, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தேவகோட்டையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் 20 கிலோ மீதமான இறைச்சி, தயாரிக்கப்பட்ட மீதி 10 கிலோ புரோட்டோவை பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், முதல்நாள் தயாரித்து மிஞ்சிய கெட்டு போன பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து அழித்துள்ளோம். நோட்டீஸ் கொடுத்துள்ளோம். தொடர்ந்து தவறு செய்து பிடிபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும், என்றார்.


ஆயுதங்களுடன் திரிந்த மாணவர்கள்


ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களே அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ஆயுதங்களுடன் தெருவில் ரகளையில் ஈடுபட்டனர்.செப்.1 முதல் 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் ஒரு தரப்பினரை தாக்குவதற்காக ரவுடிகள் சிலருடன் சேர்ந்து மாணவர்களும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர்.அரண்மனை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குள் சென்ற நிலையில், அந்த பள்ளி வாசலில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வீடுகளில் இருந்தவர்கள் அச்சமடைந்து கதவை மூடினர். மேலும் பள்ளியில் ஜன்னல்களில் தாக்கினர். தட்டிக்கேட்ட ஆசிரியர்களை தரக்குறைவாக பேசினர்.


எஸ்.ஐ.,க்கு அபராதம்


சென்னை:மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மொத்தக்கல் பகுதியைச் சேர்ந்த காமராஜ், மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:மொத்தக்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். எனக்கும், குரு என்பவருக்கும் இருந்த முன்பகை காரணமாக, பணி முடித்து வீடு திரும்பும் போது, என்னை ஒரு கும்பல் தாக்கியது. இதுகுறித்து, தனிப்பாடி எஸ்.ஐ., இளங்கோவன் முதல், திருவண்ணாமலை எஸ்.ஐ., வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

பின், நீதிமன்றம் வாயிலாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்.ஐ., இளங்கோவன் துாண்டுதலில், என்னை வீடு புகுந்து சிலர் தாக்கினர். அவர்கள் அளித்த புகாரில், என் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், 'பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு 25 ஆயிரம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். அந்த தொகையை எஸ்.ஐ., இளங்கோவனிடம் அபராதமாக பெற்றுக் கொள்வதுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


இந்திய நிகழ்வுகள்168 பயங்கரவாதிகள் கைது என்.ஐ.ஏ., அறிவிப்பு


புதுடில்லி: என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயங்கரவாத தாக்குதல், சதித்திட்டம் மற்றும் நாசவேலைக்கான நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்ட 31 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்களை குறிவைத்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பிரசாரம் செய்து வருகிறது.யாராவது அவர்களின் பதிவுகளில் ஆர்வம் காட்டினால், அந்த நபரை மூளைச்சலவை செய்து விடுகின்றனர். மேலும் வெளிநாட்டில் உள்ள தங்கள் இணையதள நிர்வாகியுடன் தொடர்பு ஏற்படுத்தி விடுகின்றனர்.


போலீசாரிடம் ரூ.40 கோடி லஞ்சம்: சிக்குகிறார் மஹாராஷ்டிர அமைச்சர்


மும்பை:மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குடன் இணைந்து, தற்போதைய அமைச்சர் அனில் பராப், போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது அம்பலமாகி உள்ளது.
குற்றப்பத்திரிகை
இங்கு, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங்கை, மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் சில மாதங்களுக்கு முன், பணி இடமாற்றம் செய்தார்.இதையடுத்து, அனில் தேஷ்முக் மீது பரம்வீர் சிங் லஞ்ச புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைஅடுத்து தேஷ்முக், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அனில் தேஷ்முக்கின் முன்னாள் தனி செயலர் சஞ்சீவ் பலாண்டே மற்றும் உதவியாளர் குந்தன் ஷிண்டேவின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மும்பையில் 10 உதவி போலீஸ் கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து பரம்வீர் சிங் உத்தரவிட்டார்.
மதுபான விடுதி
பின் அந்த உத்தரவை திரும்பப் பெற, பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து 40 கோடி ரூபாயை, போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பராப் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் லஞ்சமாக பெற்றுள்ளனர். இந்த விபரமும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனில் பராப் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். இதேபோல் ஓட்டல்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட 4.6 கோடி ரூபாய், அனில் தேஷ்முக்கின் செயலர் ஷிண்டேவிடம் வழங்கப்பட்டதும் தெரியவந்து உள்ளது. அனில் தேஷ்முக்கின் உதவியாளர் பலாண்டேவுக்கும் இந்த லஞ்ச விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.


வருமான வரித்துறை சோதனைமஹா., முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அனில் தேஷ்முக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் நாக்பூர், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உலக நிகழ்வுகள்முன்னாள் அதிபர் ஜுமா சிறை தண்டனை உறுதி


ஜோகன்னஸ்பர்க்:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட 15 மாத சிறைத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தென் ஆப்ரிக்க அதிபராக 2009 - 2018 வரை பதவி வகித்தவர் ஜேக்கப் ஜுமா, 79. இவர் தன் பதவி காலத்தில் பல்வேறு ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தை அவமதித்தார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, ஜூலையில் உத்தரவிடப்பட்டது.
தற்போது மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யும்படி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஜேக்கப் ஜுமா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை 72 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீவிரமாக விசாரித்து ஜுமாவுக்கு தண்டனை விதித்துள்ளதாக கூறி, மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி


பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது. இதில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 15 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நில தகராறில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X