திருப்பூர்:'கோவில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் முடிவை தடுக்க வேண்டும்' என, சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த நகைகளை உருக்கி, தங்கக் கட்டியாக மாற்றி, வைப்பு நிதி வாயிலாக வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதற்கு, பல்வேறு ஹிந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.

சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி செயலர் திருமுருக தினேஷ், இதை எதிர்த்து, ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோவில் சொத்துக்களை பாதுகாக்க உடனடியாக தலையிட வேண்டும். சுவாமி சிலை அலங்காரத்துக்காக பக்தர்கள் நகைகளை வழங்கியுள்ளனர். வேறு நோக்கத்துக்காக அவற்றை பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. கோவில் நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும். கோவிலின் சொத்துக்களை பாதுகாக்க, தாமாக முன்வந்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE