புதுடில்லி: ‛‛நேற்று ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதால், ஒரு எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் ஏற்பட்டது'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

கோவாவில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அம்மாநில மாநில சுகாதார பணியாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடினார்.

அப்போது மோடி பேசியதாவது: உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவேகமாக தடுப்பூசி திட்டத்தில் கோவாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றை முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் கோவா தைரியத்துடன் எதிர்கொண்டது.டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், நிர்வாக ஊழியர்கள் அனைவரையும் பாராட்ட விரும்புகிறேன்.

உங்கள் அனைவரின் முயற்சியால், நேற்று ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்தியா சாதனை படைத்து உள்ளது. வளர்ச்சியடைந்த மற்றும் சக்திவாய்ந்தவை கருதிக்கொள்ளும் எந்த நாடும் அதனை செய்யவில்லை.நேற்று ஒரு மணி நேரத்திற்கு 15 லட்சம் பேருக்கும், ஒரு நிமிடத்திற்கு 26 ஆயிரம் பேருக்கும், ஒவ்வொரு நொடிக்கும் 425 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவிட் தடுப்பூசி செலுத்தினால் காய்ச்சல் ஏற்படும் கூறப்படுகிறது. ஆனால், நேற்று 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால், ஒரு அரசியல் கட்சிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அதிகாலை 12 மணிக்கு மேல் தடுப்பூசி திட்டம் குறித்து கருத்து தெரிவித்தது. நேற்று எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாளாக அமைந்தது. உங்களின் முயற்சியினால், நேற்றைய நாள் எனக்கு சிறப்பான நாளாக அமைந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE