சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலாலிடம் வழங்கினார். தொடர்ந்து, கட்சியில் சமீபத்திய நிகழ்வுகள் என்னை அவமானபடுத்துவது போல் உள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.
பஞ்சாபில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசில் உட்கட்சி மோதல் வலுத்தது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் மேலிடம் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கருதிய முதல்வர் அமரீந்தர் சிங் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தானும், அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகுவதாக அந்த கடிதத்தில் தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமரீந்தர் சிங் கூறியதாவது: தற்போது நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். எதிர்கால நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். சமீபத்திய நிகழ்வுகள் என்னை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இன்று காலை காங்கிரஸ் தலைவரிடம் பேசினேன். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். எனக்கு தெரியாமல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடப்பது மூன்றாவது முறை. இதனால், பதவி விலக முடிவு செய்தேன். தங்களுக்கு நம்பிக்கைக்குரிய யாரை வேண்டுமானாலும் கட்சி மேலிடம் முதல்வர் பதவியில் அமர்த்தட்டும்.நேரம் வரும் போது எனக்கு முன் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலனை செய்வேன். இவ்வாறு அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE