குஜராத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ., இப்போதே செயல்பட துவங்கியுள்ளது.
மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான படேல் சமூகத்தினரின் ஆதரவை பெறும் நோக்கில் தான் முதல்வரை பா.ஜ., மாற்றியுள்ளது. குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த வாரம் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார்.விஜய் ரூபானி மீது பெரிய அளவில் எந்த புகாரும் இல்லை. கட்சியிலும் எதிர்ப்பு இல்லை. அவரது தலைமையில் மாநிலத்தில் பா.ஜ.,வின் வெற்றி தொடர்ந்தது.அப்படிப்பட்ட நிலையில் ரூபானி மாற்றப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், முதல்முறை எம்.எல்.ஏ.,வான பூபேந் திர படேல் முதல்வரானது, மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
வழித்தோன்றல்கள்
அடுத்த ஆண்டு நடக்க உள்ள குஜராத் சட்டசபை தேர்தலை மனதில் வைத்துத் தான் இந்த நடவடிக்கையை பா.ஜ., தலைமை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி செய்தாலும், அக்கட்சியின் கோட்டையாக குஜராத் கருதப்படுகிறது. 1998 முதல் குஜராத்தில் பா.ஜ., ஆட்சியே நடந்து வருகிறது.
அதனால் குஜராத்தில் ஆட்சியை தக்க வைப்பதை பா.ஜ., மிகப் பெரிய கவுவரமாக கருதுகிறது.மாநில சட்டசபைக்கு 2017ல் நடந்த தேர்தலில் 182 தொகுதிகளில் 99 இடங்களில் மட்டுமே வென்று, பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இது பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு படேல் சமூகத்தினரில் பெரும்பான்மை யோர் பா.ஜ, வுக்கு ஓட்டுப் போடாததே காரணம் என தெரிந்தது. குஜராத்தில் மக்கள் தொகையில் படேல் சமூகத்தினர் 14 சதவீதமாகவும், வாக்காளர்களில் 21 சதவீதமாகவும் உள்ளனர். மாநிலத்தில் மருந்து, உணவுப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல தொழில்களை படேல் சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.படேல் சமூகத்தில் லவாஸ் மற்றும் கடாவ்ஸ் என இரண்டு துணை பிரிவுகள் உள்ளனர். கடவுள் ராமரின் மகன்களான லவன், குஷனின் வழித்தோன்றல்களாக இவர்கள் கருதப்படுகின்றனர்.மத்திய குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் லவாஸ் படேல்களும், வடக்கு குஜராத்தில் கடாவ்ஸ் படேல்களும் பெரும்பான்மையாக உள்ளனர்.
பா.ஜ., குறி
மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில் 75 - 80 தொகுதிகளின் முடிவை படேல் சமூகத்தினரின் ஓட்டுகள் தான் முடிவு செய்கின்றன. 1985 வரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த படேல் சமூகத்தினர், அதன்பின், பா.ஜ., ஆதரவாளர்களாக மாறினர். மாநிலத்தில் வளர்ச்சிஅடைந்த சமூகங்களில் ஒன்றாக படேல் சமூகம் உள்ளது. குஜராத்தின் முதல் பா.ஜ., முதல்வராக கேசுபாய் படேல் இருந்தார். அதன் பின் நரேந்திர மோடி முதல்வராக 2001ல் பதவியேற்றார். ஆனாலும் நரேந்திர மோடிக்கு படேல் சமூகத்தினர் ஆதரவு அளித்தனர்.பிரதமராக மோடி பதவியேற்ற பின், முதல்வராக ஆனந்திபென் படேல் பதவியேற்றார்.
அப்போது அரசு பணிகள் மற்றும் கல்லுாரிகளில் இட ஒதுக்கீடு வழங்க கோரி ஹர்திக் படேல் தலைமையில் படேல் சமூக இளைஞர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலமே ஸ்தம்பித்தது. இந்தப் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆனந்திபென் படேல் மாற்றப்பட்டு, புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார். இவரது தலைமையில் தான் கடந்த சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்தித்தது. ஆனால் 2012 தேர்தலுடன் ஓப்பிடும் போது, பா.ஜ., பெற்ற ஓட்டு 60 சதவீத்திலிருந்து 42 சதவீதமாக குறைந்தது.அதேநேரத்தில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் 33லிருந்து 41 ஆக அதிகரித்தது. கடந்த 2019ல் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் குஜராத்தில் அமலானது. இதையடுத்து இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை படேல் சமூகத்தினர் வாபஸ் பெற்றனர்.இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ., குறியாக உள்ளது.
'கிளீன் இமேஜ்'
இதை மனதில் வைத்துத் தான் முதல்வர் பதவியிலிருந்த விஜய் ரூபானியை மாற்றிவிட்டு பூபேந்திர படேலை பா.ஜ., தலைமை முதல்வராக்கியுள்ளது. பூபேந்திர படேல், கடாவ்ஸ் படேல் பிரிவைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுஉள்ளனர். கடாவ்ஸ் படேல் இனத்தில் செல்வாக்கு மிக்க பூபேந்திர படேல் மீது எந்த வித முறைகேடு புகாரும் இல்லை. அவரது 'கிளீன் இமேஜ்' படேல் சமூகத்தினர் ஆதரவை முழுமையாக பெற்றுத்தரும் என, பா.ஜ., நம்புகிறது. மேலும் பூபேந்தரை முதல்வராக்கி உள்ளதன் வாயிலாக காங்கிரசின் ஹர்திக் படேலின் செல்வாக்கை, பா.ஜ., குறைத்து விட்டதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு குஜராத் சட்டசபை தேர்தல் பற்றி இதுவரை எந்த சிந்தனையும் இல்லை. குஜராத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு, மாநில மற்றும் தேசிய தலைமையிடம் இல்லை. இதையும் தனக்கு சாதகமாக பா.ஜ., கருதுகிறது.அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வென்று மாநிலத்தில் ஆட்சியின் வெள்ளி விழாவை கொண்டாட பா.ஜ., திட்டமிட்டுள்ளது. முதல்வர் மாற்றம் என்ற பா.ஜ.,வின் துருப்பு சீட்டு திட்டம் வெற்றி பெறுமா என்பது அடுத்த ஆண்டு தெரிந்துவிடும்.
புதிய முகங்கள் ஏன்?
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 21 பேர் புதுமுகங்கள்.விஜய் ருபானி அரசில் இடம் பெற்றிருந்த துணை முதல்வர் நிதின் படேல் உட்பட அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜாதி, மாவட்ட மற்றும் மண்டல அடிப்படையில் அமைச்சர்களை பா.ஜ., மேலிடம் தேர்வு செய்துள்ளது. மேலும், புதிய அமைச்சர்கள் மீது, எந்த முறைகேடு புகாரோ, கிரிமினல் வழக்குகளோ இல்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அரசுக்கு எதிரான அலை வீசுவதை தவிர்க்கும் நோக்கில் தான் முதல்வர் உட்பட அமைச்சர்கள் பலரும் புதுமுகங்களாக தேர்வு செய்யப்பட்டுஉள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE