'தமிழக காங்., விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்' என, சீனியர் தலைவர்கள் சோனியாவிடம் சொல்ல, 'இப்போதைக்கு தமிழகம் முக்கியம் இல்லை. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கவனியுங்கள்' எனக் கறாராக சொல்லி விட்டார். தமிழக காங்., தலைவர்கள் சிலர், தீவிரமான தி.மு.க., பக்தர்களாகி விட்டது சோனியாவுக்கு பிடிக்கவில்லை. பீட்டர் அல்போன்ஸ் விவகாரத்தில் தமிழக காங்., தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் சோனியா.
பீட்டருக்கு தி.மு.க., அரசு பதவி கொடுத்தது காங்., தலைமைக்கு பிடிக்கவில்லை. காங்கிரசை விட தி.மு.க., தலைவர் ஸ்டாலினை புகழ்வதிலேயே பீட்டர் அல்போன்ஸ் அதிக கவனம் செலுத்துகிறார் என சொல்லும் காங்., தலைவர்கள், ஒருவேளை அவர் தி.மு.க.,வில் சேர்ந்து விடுவாரோ என, சோனியா காந்தி சந்தேகப்படுகிறார் என்கின்றனர்.
தமிழக அரசுக்கு தனி விமானம்?
தனி விமானம் வாங்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. எந்த ஒரு மாநில அரசும் தனி விமானம் வாங்க வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் அனுமதி அவசியம். அனுமதி தர முடியாது என மத்திய அரசு மறுக்கவும் முடியாது. 16 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய சிறிய விமானத்தை வாங்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
தனி விமானம் இருந்தால் நினைத்த நேரத்தில் டில்லிக்கு வந்து போகலாம். தமிழகத்தின் எந்த பகுதிக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் உடனடியாக செல்லலாம். ஏர் இந்தியா அல்லது தனியார் விமான சேவைக்காகவோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தின் தென்பகுதியில் வெள்ள சேதம் உட்பட பல இயற்கை சீற்றங்களை உடனடியாக சென்று பார்க்கவும் இந்த தனி விமானம் உதவும்.
வந்துவிட்டார் புதிய கவர்னர்
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுள்ளார். விரைவில் டில்லி சென்று ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் ரவி. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார்.உளவுத் துறை உட்பட மத்திய அரசின் ரகசிய அமைப்புகளின் தலைவர்களிடமும் ரவி பேசுவார் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஓய்வு பெற்ற சீனியர் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் இவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஜேம்ஸ்பாண்ட் போல செயல்படுவாரா என சிலர் சந்தேகப்படுகின்றனர். இதெல்லாம் வீண் வதந்தி என்கின்றன டில்லி வட்டாரங்கள்.
'எப்போதும் முதல்வருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார். ஆனாலும் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை கறாராக செய்து முடிக்கவும் தயங்க மாட்டார்' என, புதிய கவர்னர் பற்றி கூறப்படுகிறது. கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை அனைவருக்கும் எப்போதும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் கவர்னரை சந்திக்கலாம் என்கின்றனர்.'ஆனால், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தேவையில்லாமல் எதற்கு அவரைப் பார்த்து பயப்படுகின்றன என தெரியவில்லை' என்கின்றனர் டில்லியில் உள்ள மூத்த அதிகாரிகள்.
முதல்வர்களை பந்தாடும் பா.ஜ.,
நான்கு மாதங்களில் நான்கு மாநில பா.ஜ., முதல்வர்களை மாற்றிவிட்டார் மோடி. இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பவர் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். விரைவில் இவரும் மாற்றப்படுவார் என சொல்லப்படுகிறது. குஜராத், உத்தரகண்ட் மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பழைய முதல்வர்கள் பதவியில் நீடித்தால் கட்சி வெற்றி பெறுவது சந்தேகம் என்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார் மோடி என்கின்றனர் தலைவர்கள்.இன்னொரு பக்கம், அடுத்த லோக்சபா தேர்தல் தொடர்பாக இப்போதே வேலைகளைத் துவங்கி விட்டார் பிரதமர் மோடி. அதன் விளைவு தான் இந்த மாற்றங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE