பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா: காங்., உட்கட்சி பூசலால் திடீர் முடிவு

Updated : செப் 19, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சண்டிகர் :பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் இந்த திடீர் முடிவை அவர் எடுத்துள்ளார். ''நான் அவமானப் படுத்தப்பட்டுள்ளேன்,'' என, அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், கடந்த சில மாதங்களாகவே
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா!காங்., உட்கட்சி பூசலால் திடீர் முடிவு

சண்டிகர் :பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் இந்த திடீர் முடிவை அவர் எடுத்துள்ளார். ''நான் அவமானப் படுத்தப்பட்டுள்ளேன்,'' என, அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது.முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.அதன்படி, கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இருப்பினும், அமரீந்தருக்கும், சித்துவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது.


போர்க்கொடி



இந்நிலையில், 'அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.இது தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்காவை சந்திக்க அனுமதிக்கும்படி அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.பஞ்சாப் மாநில காங்., கட்சியின் மேலிட பொறுப்பாளரான ஹரிஷ் ராவத் சமரச முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பிரச்னை தீவிரமானது. 'கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி, பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்' என, அமரீந்தர் எதிர்ப்பாளர்கள் கூறி வந்தனர்.

இதன்படி, நேற்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஹரிஷ் ராவத் அறிவித்தார். இந்த கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அவரிடம் அமரீந்தர் சிங் ஒப்படைத்தார். அவரது ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். அமரீந்தருடன், அவரது மனைவியும், எம்.பி.,யுமான பிரனீத் கவுர், மகன் ரனிந்தர் சிங், உடன் சென்றனர். கட்சி எம்.பி.,க்கள் குர்ஜித் சிங் அகுஜா, ரவ்னீத் சிங் பிட்டு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


கூட்டத்துக்கு அழைப்பு



கவர்னருடனான சந்திப்பிற்கு பின் அமரீந்தர் சிங் கூறியதாவது: கட்சித் தலைவர் சோனியாவிடம் பேசினேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அவரிடம் தெரிவித்தேன். அதன்படி ராஜினாமா செய்துள்ளேன். இனி, யாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். இரண்டு முறைஎம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்து பேசியுள்ளனர். தற்போது எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த அரசை என்னால் தொடர்ந்து நடத்த முடியாது என்றோ அல்லது கட்சித் தலைமைக்கு வேறு ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, அது என்னை அவமானப்படுத்துவதாக கருதுகிறேன்.என் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்வேன். சித்து, முதல்வர் பதவிக்கு லாயக்கற்றவர். அவரை முதல்வராக ஏற்க என்னால் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளது, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சோனியாவுக்கு அதிகாரம்



பஞ்சாப் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சண்டிகரில் நேற்று மாலை நடந்தது. இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா வுக்கு வழங்கி, முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கட்சிக்கு அமரீந்தர் சிங் ஆற்றிய பணிகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.''கட்சியின் 80 எம்.எல்.ஏ.,க்களில் 78 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். புதிய முதல்வர் யார் என்பதை சோனியாவே முடிவு செய்வார்,'' என, கட்சி யின் மேலிட பார்வை யாளரான மூத்த தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்து உள்ளார்.


ரகசிய அறிக்கை காரணமா?



அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தது, பஞ்சாபில் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கலாம். அதே நேரத்தில், அவருக்கு எதிரான நடவடிக்கைகள் 15 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டதாக காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அமரீந்தருக்கு எதிராக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியவுடன், இது குறித்து கட்சித் தலைமை ரகசிய ஆய்வை மேற்கொண்டது. இதற்கிடையே, எம்.எல்.ஏ.,க்களுடன் பேசும்படி ஹரிஷ் ராவத்துக்கும் உத்தரவிடப்பட்டது.அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து கட்சித் தலைமை ஆலோசனை நடத்தி வந்துள்ளது.

இந்த ரகசிய ஆய்வில், அமரீந்தர் தலைமையில் தேர்தலை சந்தித்தால் தோல்வி நிச்சயம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்க ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் தயாராகி விட்டனர்.அதே நேரத்தில், தன் கணவரும், மறைந்த முன்னாள் பிரதமரு மான ராஜிவால் அரசியலுக்கு வந்த அமரீந்தர் மீது கடுமையான நடவடிக்கைக்கு சோனியா தயாராக இல்லை என கூறப்படுகிறது.வேறு வழியில்லாமல் அவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்தே, கட்சியின்எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்ட திடீரென முடிவு செய்யப்பட்டது. தனக்கு எதிராகவே முடிவெடுக்கப்படும் என்பதை உணர்ந்து, அமரீந்தர் சிங் தன் பதவியை முன் கூட்டியே ராஜினாமா செய்துள்ளார்.

கட்சியில் இருந்தும் அவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது. 'ஆப்பரேஷன் புளூஸ்டார்' எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக, பஞ்சாபில் நடந்த நடவடிக்கைகளைக் கண்டித்து, 1984ல் காங்.,கில் இருந்து விலகிய அமரீந்தர், அகாலிதளத்தில் சேர்ந்தார். கடந்த 1992ல் அதில் இருந்து விலகி தனிக் கட்சி துவக்கினார். பின் 1998ல் காங்.,கில் மீண்டும் இணைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
19-செப்-202118:37:29 IST Report Abuse
DVRR அம்மாடி ஒரு வழியாக நான் இந்த தண்டைக் கருமாந்திரங்களிடமிருந்து விடுதலை அடைந்தேன் - இப்படிக்கு அம்ரிந்தர் சிங்
Rate this:
Cancel
19-செப்-202118:18:47 IST Report Abuse
பேசும் தமிழன் கேப்டன் அய்யா இருக்க வேண்டிய சரியான இடம்... பிஜேபி தான்... எது எப்படியோ... கான் கிராஸ் இல்லாத இந்தியா வேண்டும்.. அது நடந்தால் சரி தான்
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-செப்-202117:22:09 IST Report Abuse
தமிழ் மைந்தன் காங்கிரஸ் கட்சி என்பதை எப்படி அடிமையாக வைத்திருப்பது என்பது ....கேட்டு அமிரீந்தர் நடந்திருக்கலாம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X