இந்தியா, பாகிஸ்தான் உறவுக்கும் உரசலுக்கும், 75 ஆண்டுகால சோக வரலாறு உண்டு. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக, அந்த அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது? நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதல் அதை எப்படி மாற்றி எழுதினார்?
முதலில், மோடிக்கு இருந்த ஒருசில வாய்ப்புகளைச் சொல்லவேண்டும். அவருக்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களைப் போல், எந்தவிதமான தோள்சுமையும் மோடிக்கு இல்லை. அன்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. புதிய கேன்வாஸில், புதிய உறவு ஓவியம் வரையத் துவங்கினார் மோடி.
முதல்முறை 2014ல் பதவியேற்கும் வைபவத்துக்கு அனைத்து 'சார்க்' நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் மோடி அழைத்தார். அதில், பாகிஸ்தானுக்கும் அழைப்பு உண்டு. முதல் இரண்டு ஆண்டுகாலம் தொடர்ச்சியாக பாகிஸ்தானோடு உறவைப் பலப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்.பாக்., பிரதமருக்கு ரமலான் வாழ்த்து சொன்னார். பாரீஸில் நவாஸ் ஷெரீப்பை நேரடியாகச் சந்தித்தார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தார். திடீரென்று லாகூர் நகரத்துக்குச் சென்று, அந்நாட்டுப் பிரதமருக்கு சால்வை பரிசளித்தார். பதான்கோட் தாக்குதலை ஆய்வு செய்வதற்கு பாக்., விசாரணை குழுவுக்கு அனுமதி அளித்தார்.
ஏதேனும் ஒரு வகையில் பாக்., தன்னுடைய வெறுப்பைவிட்டுவிட்டு இந்தியாவோடு கைகோர்க்கும் என்ற நம்பிக்கை மோடிக்கு இருந்தது. ஆனால், அவருக்கு ஞானோதயம் பிறந்த தருணம் ஒன்று உண்டு. அதுதான் பதான்கோட் தாக்குதலை விசாரணை செய்ய வந்த பாக்., குழுவினரது மோசடி. இதற்கு அடுத்து நடந்த உரி தாக்குதல் தான், மோடியின் பார்வையை முற்றிலும் மாற்றியது.

பாக்., பம்மாத்து
இதன் பின்னர் இரண்டு விஷயங்கள் நடைபெற்றன. இந்தியா துணிந்து, எல்லை தாண்டிப் போய் பதிலடி கொடுக்கத் துவங்கியது. இன்னொரு புறம் பேச்சுவார்த்தை என்ற பம்மாத்தை முற்றிலும் நிறுத்தியது.பாக்., கடந்த 70 ஆண்டுகளாக, பேச்சுவார்த்தை என்ற ஆயுதத்தைத்தான் பயன்படுத்தி வந்தது. எப்போது தாக்குதல் நடந்தாலும் மோதல் நடந்தாலும் சர்வதேச நாடுகள், இரு தரப்பையும் 'பேசுங்கள், பேசுங்கள்' என்று தான் வலியுறுத்தும்.
பேச்சுவார்த்தை மூலம் சாதிக்க முடியாததே இல்லை என்பது உண்மைதான். ஆனால், அதையே தன்னைப் பலப்படுத்திக்கொள்ளவும், மறைமுகத் தாக்குதல்களைத் தொடுக்கவும் கால அவகாசம் பெறும் உத்தியாகப் பயன்படுத்தியது பாகிஸ்தான்.இந்த முறை அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் நரேந்திர மோடி. பாக்., பேச்சுவார்த்தை முயற்சி அனைத்தும் போலியானவை, பம்மாத்து என்பதை நிரூபிக்க இந்த அணுகுமுறையே பயன்பட்டது.இதன் மறுபக்கம் முக்கியமானது.
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் கிடைத்துவந்த அங்கீகாரமும் உதவிகளும் பேச்சுவார்த்தைகள் நின்றுபோனவுடன், காணாமல் போய்விட்டன. தார்மீக ரீதியாக கிடைத்து வந்த உதவிகளும் ஆதரவுகளும் கூட அருகிப் போயின.பாக்., குரலைக் கேட்போர் குறைந்துபோக ஆரம்பித்தனர். அதன் குரல்கள் எந்த அரங்கிலும் எடுபடவில்லை.
காஷ்மீர் எங்கே?
இதன் தொடர்ச்சியாக இரண்டு அம்சங்களைச் செய்தார் நரேந்திர மோடி. பாகிஸ்தான் இந்தியாவோடு மோதுவது எதற்காக? காஷ்மீருக்காக. அந்தக் காஷ்மீரையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான முயற்சி மேற்கொண்டு, அதை நிறைவேற்றியும் காட்டினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் விலக்கினார். ஆக, இனி பாகிஸ்தான் கோருவது எந்தக் காஷ்மீரை? அப்படியொரு காஷ்மீர் அங்கே இல்லவே இல்லை.இரண்டு, 'ஜி7' மற்றும் 'ஜி20' ஆகிய பன்னாட்டு அரங்குகள் அனைத்திலும், பயங்கரவாதத்துக்கு துணை நிற்கும் நாடாக பாகிஸ்தானைத் தொடர்ந்து அடையாளப்படுத்தும் வேலையை மோடி செய்துவந்தார். பயங்கரவாதத்துக்கு நாடுகளின் எல்லைக்கோடு தெரியாது. அது எல்லை தாண்டி, எந்த நாட்டையும் வீழ்த்தும் என்ற செய்தியை சிவப்புமையால் அடிக்கோடிட்டுக் காட்டினார். அவரது முயற்சி பலன் அளிக்கத் துவங்கியது.
கடந்த ஜூலை மாதம், 39 நாடுகளைக் கொண்ட, 'பைனான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் போர்ஸ்' என்ற சர்வதேச அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இரண்டு அம்சங்களைக் கண்காணிக்கும். பயங்கரவாதத்துக்கு செய்யப்படும் நேரடி நிதியுதவி மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தின் மூலமாக கிடைக்கும் உதவி. பாகிஸ்தான், இவர்களது கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதே முதல் அவமானம். இதில் பங்கேற்றுள்ள 39 நாடுகள் மத்தியிலும் பாகிஸ்தானுடைய பயங்கரவாத தொடர்பு நிச்சயம் கண்காணிக்கப்படும் என்பது இரண்டாவது விளைவு.
பாக்., முகத்திரை கிழிப்பு
பாகிஸ்தானில் இருந்து இயங்கும், ஜெய்ஷ் - இ - முகம்மது, லஷ்கர் - இ - தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மீது சர்வதேச தடை விதிக்கப்படவும் மோடி அரசு எடுத்த முயற்சிகளே முக்கிய காரணம்.கடந்த ஏழு ஆண்டுகளில், பாகிஸ்தானை மோடி அரசு கையாண்ட விதத்தை இவ்வாறு தொகுத்துச் செல்லலாம். முதலில் மனமாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் அரவணைத்து அன்பு பாராட்டியது. அதற்கு பாகிஸ்தான் தகுதியற்ற நாடு என்பதைப் புரிந்துகொண்ட பின்னர், பலமுனைத் தாக்குதல்.
அதில் முதலாவது நிமிர்ந்து பேசுவதற்கான தார்மீக பலமே பாகிஸ்தானுக்கு கிடையாது என்று உணர்த்துவது. இரண்டாவது, சர்வதேச நாடுகளே, பாகிஸ்தானை விலக்கி வைப்பது. மூன்று, சர்வதேச நாடுகளின் சந்தேகப் பார்வையும் கண்காணிப்பும். நான்கு, இந்தியாவின் பாதுகாப்பை நிரூபிக்கும் விதமாக திருப்பித் தாக்குவது.
இப்போது பாகிஸ்தான், இந்தியாவுக்கு மட்டுமான தலைவலி அல்ல. அது அனைத்து நாடுகளாலும் கையாளப்பட வேண்டிய பெருந்துன்பம் என்பதை சர்வதேச அரங்குக்குக் கொண்டுசென்றது தான், நரேந்திர மோடியின் கடந்த ஏழாண்டுகால பங்களிப்பு. 75 ஆண்டுகால பாகிஸ்தான் பிரச்னை இதனால் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. ஆனால், அடுத்து வரும் காலங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய திசையையும் பாதையையும் நரேந்திர மோடி வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
- ஆர்.வெங்கடேஷ்
செய்தியாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE