போபால்:'மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என, காங்., அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மத்திய இணை அமைச்சருமான முருகன் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் காலியாக உள்ள சில இடங்களுக்கு, அக்., 4ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்தில் ஒரு இடமும் இதில் அடங்கும்.பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக கவர்னரானதால் காலியான இந்த இடத்துக்கான வேட்பாளராக, மத்திய இணை அமைச்சர் முருகனின் பெயரை பா.ஜ., அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என, காங்., அறிவித்துள்ளது. இதையடுத்து, முருகன் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ம.பி., சட்டசபையில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு 125 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்., சார்பில் 95 பேர் உள்ளனர். தேர்தல் நடந்தாலும் முருகன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE