புதுடில்லி:''எனக்கு கிடைத்த நினைவுப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுஉள்ளன. இந்த ஏலத்தில் மக்கள் பங்குபெற வேண்டும்,'' என, பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நபர்கள், அவருக்கு பரிசுப் பொருட்களை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி அவருக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள், மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தால் ஏலம் விடப்படுகின்றன. அதன் வாயிலாக திரட்டப்படும் நிதி, நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற நம் வீரர்கள் நாடு திரும்பியதும் பிரதமரை சந்தித்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய விளையாட்டு உபகரணங்களை பிரதமருக்கு நினைவுப் பரிசுகளாக வழங்கினர்.இந்நிலையில், பிரதமருக்கு கிடைத்த அந்த நினைவுப் பரிசுகளை மத்திய அரசு ஏலத்தில் விட்டுள்ளது.'ஆன்லைன்' வாயிலாக நடந்து வரும் இந்த ஏலம், அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடக்கிறது.
இதில், பாராலிம்பிக் வீரர்கள் கிருஷ்ண நாகர் மற்றும் யத்திராஜின் பாட்மின்டன் ராக்கெட்டுகள், ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவின் ஈட்டி, வீராங்கனை லவ்லினாவின் கையுறை உள்ளிட்டவை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
இந்த ஏலம் குறித்து, பிரதமர் மோடி தன் 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுஉள்ளதாவது:கடந்த காலங்களில் எனக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களும் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இதில் ஒலிம்பிக் ஹீரோக்களின் நினைவுப் பொருட்களும் உள்ளன. இந்த ஏலத்தில் மக்கள் பங்குபெற வேண்டும். இதில் திரட்டப்படும் நிதி, கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.