பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள்

Updated : செப் 20, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு உணவகத்தில், பிரியாணி வாங்கி சாப்பிட்ட சிறுமி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், தமிழகம் முழுக்க புற்றீசல் போல பிரியாணி கடைகள் உருவாகி வருகின்றன.இது குறித்து, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியதாவது:சென்னையில் மட்டும் 40 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய பிரியாணி கடைகள் உள்ளன. சென்னை
சென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு உணவகத்தில், பிரியாணி வாங்கி சாப்பிட்ட சிறுமி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், தமிழகம் முழுக்க புற்றீசல் போல பிரியாணி கடைகள் உருவாகி வருகின்றன.

இது குறித்து, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியதாவது:
சென்னையில் மட்டும் 40 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய பிரியாணி கடைகள் உள்ளன. சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் மட்டும் 40 பிரியாணி கடைகள் உள்ளன. தமிழகம் முழுதும் சாப்பாட்டு கலாசாரம் மாறியுள்ளது. ஒரு சைவ சாப்பாட்டின் குறைந்தபட்ச விலை 70 ரூபாய். ஆனால், சிக்கன் பிரியாணி 50 ரூபாய்க்கு கிடைக்கிறது.


latest tamil news


பெரும்பாலான ஏழைகள், கூலி தொழிலாளிகள் பிரியாணி தான் சாப்பிடுகின்றனர். இரவு 2:00 மணிக்கு கூட சுடச்சுட பிரியாணி கிடைக்கிறது. சென்னையில் கோடம்பாக்கம், புளியந்தோப்பு பகுதிகளில் இந்த கடைகள் உள்ளன.கொரோனா தொற்றுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், 'சிங்க்' பொருள், இயற்கையாக மாட்டுக் கறியில் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய பின், மாட்டுக் கறி பிரியாணி சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில், 'பீப் கார்னர்' என்று அழைக்கும் அளவுக்கு, மாட்டுக் கறி பிரியாணி விற்பனை உள்ளது. மாட்டுக் கறியில் சமைக்கப்பட்ட, 98 வகை உணவுகள் அங்கே விற்கப் படுகின்றன. ஆட்டுக் கறி விலை கிலோ 800 ரூபாய். ஆனால், மாட்டுக் கறி விலை 300 ரூபாய். மாட்டுக் கறியில் எலும்பு அதிகம் இருக்காது; சதைப் பற்றாக இருப்பது, சாப்பிடுவோருக்கு வசதியாக இருக்கிறது. சென்னையில் மட்டும் தினமும் 50 ஆயிரம் கிலோ மாட்டுக் கறி; 65 ஆயிரம் கிலோ கறிக் கோழி தேவைப்படுகிறது.


லாபம் எப்படி?


ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை 90 ரூபாய்க்கு விற்பவர்கள் அதிகம் உள்ளனர். கிலோ சிக்கன் பிரியாணியை நான்கு பேர் தாராளமாக சாப்பிடலாம். ஒரு கிலோ பிரியாணி அரிசியின் குறைந்த பட்ச விலை 50 ரூபாய். அப்படி இருக்கையில், கிலோ பிரியாணி 90 ரூபாய்க்கு எப்படி கிடைக்கிறது என்ற குழப்பம் இருக்கிறது. சிக்கன், தக்காளி, தயிர், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட மசாலா பொருட்கள் மற்றும் தண்ணீர் சேர்ந்து, 1 கிலோ பிரியாணி அரிசியில் தயாராகும் சிக்கன் பிரியாணி 6 கிலோவாகி விடும். எனவே தான், கிலோ சிக்கன் பிரியாணியை 90 ரூபாய்க்கு விற்றாலும் லாபம் கிடைக்கும்.


latest tamil newsவேனில் 'சப்ளை'


சிறிய கடைகளில் ஒரு நாளைக்கு 20 கிலோ பிரியாணி விற்கப்படுகிறது. இவர்களுக்கு தேவையான பிரியாணியை தயாரிக்க பிரத்யேகமாக ஆட்கள் உள்ளனர். சென்னையில் வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அம்பத்துார், ஆவடி, பல்லாவரம், சாலிகிராமம் போன்ற பகுதிகளில் 800 பேர் பிரியாணி தயார் செய்கின்றனர். பெரிய பெரிய அண்டாக்களில் தயார் செய்யப்படும் பிரியாணி, சென்னை முழுதும் சிறிய வேன்கள் வாயிலாக, சிறிய பிரியாணி கடைகளுக்கு 'சப்ளை' செய்யப்படுகின்றன.

சிறிய கடை, தள்ளு வண்டி கடையில் பிரியாணி விற்கும் ஒருவர், தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்கிறார். பெரிய முதலீடு மற்றும் 'ரிஸ்க்' இல்லாத இந்த தொழிலை செய்ய பலரும் வருகின்றனர். குறைந்த அளவில் பிரியாணி தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய, மாநகராட்சி 'லைசன்ஸ்' உள்ளிட்ட எந்த சான்றிதழும் வைத்திருப்பதுஇல்லை. கடை வைத்து வியாபாரம் செய்ய தீயணைப்புத் துறை அனுமதி பெற வேண்டும். அப்படி யாரும் செய்வதில்லை; அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

விற்பனைக்கு வரும் பிரியாணி, சில இடங்களில் தரமற்ற வகையில் தயாராகிறது. குறைந்த செலவில் தயார் செய்து, கூடுதல் விலைக்கு விற்று, நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை தான் இதற்கு காரணம்.


இறந்த கோழிகள்

வெளியூர்களில் இருந்து வேன்களில் கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், பயணத்தின் போது வீசும் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இறந்து விடும். லாரியில் 4,000 கிலோ கறிக் கோழிகளை ஏற்றி வரும் போது, குறைந்தபட்சம் 100 கோழிகள் இறந்து விடும். இப்படி இறக்கும் கோழிகளை கிலோ 20 ரூபாய்க்கு விற்கின்றனர். அதில் செய்யப்படும் பிரியாணி ஆரோக்கியமற்றது; விரைவில் கெட்டுப் போய் விஷமாகிறது.


நட்சத்திர ஓட்டல்கள் கதை


நட்சத்திர ஓட்டல்களுக்கு தேவையான சிக்கன், மட்டன், 'பீப்' போன்றவற்றை டன் கணக்கில் வாங்கி, 'ஸ்டாக்' வைக்கின்றனர். குறிப்பிட்ட வெப்பநிலையில் பதப்படுத்தி வைக்கும் போது, ஆறு மாதம் வரை அதை பயன்படுத்த அரசு அனுமதிக்கிறது. இப்படி, 'ஸ்டாக்' வைக்கப்படும் இறைச்சியை குறிப்பிட்ட காலத்துக்கு பின் பயன்படுத்த முடியாதபோது, குறைந்த விலைக்கு விற்கின்றனர். அதை வாங்கும் சிறிய கடைக்காரர்கள் தயாரிக்கும் பிரியாணியை சாப்பிட்டால், வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும். இந்த வகை இறைச்சியை வீடுகளுக்கு விற்கும் நிலையும் உள்ளது.


மருத்துவர் சான்றில்லை


சென்னையின் ஒரு நாளைய ஆட்டுக்கறி தேவை 35 ஆயிரம் கிலோ. ஆடு, மாடுகளை நினைத்த இடத்தில் வெட்டி விற்க, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி கொடுப்பதில்லை. இதற்கென ஆட்டுத் தொட்டிகள் உள்ளன. அங்கு ஆடோ, மாடோ முழு ஆரோக்கியத்துடன் இருப்பதை கால்நடை மருத்துவர் உறுதி செய்த பின்பே, கறிக்காக வெட்ட வேண்டும். வெட்டப்பட்ட பின் கிடைக்கும் இறைச்சியின் தொடைப்பகுதியில், 'சீல்' இட்டு, அதை மாநகராட்சி அதிகாரிகள் அங்கீகரிப்பர். அந்த இறைச்சி வெளியே எடுத்து செல்லப்பட்டு, சில்லரை வியாபாரம் செய்யப்படும். இதுதான் நடைமுறை.

ஆனால், கொரோனாவால் ஆட்டுத் தொட்டிகள் மூடப்பட்டதால், ஆடு, மாடுகளை, வியாபாரிகள் தங்களுக்கு சவுகரியமான இடத்தில் வெட்டலாம் என உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி கொடுத்தன. இதற்கு கால்நடை மருத்துவர் சான்று இருக்காது. எனவே, கறியின் ஆரோக்கிய தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


தரமற்ற பிரியாணி அரிசி


பிரியாணி அரிசிக்கு தரமும், உபயோகப்படுத்த வேண்டிய காலக்கெடுவும் உண்டு. அந்த காலத்தை கடக்கும் போது, அது தரமற்றதாகி விடும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரியாணி அரிசி, சில காரணங்களால் நிராகரிக்கப்படும். இந்த அரிசி, குறிப்பிட்ட காலத்தை கடந்தபின், பயன்படுத்துவதற்கான தகுதியை இழந்து விடும். அதை அடிமாட்டு விலைக்கு வாங்கி வந்து பிரியாணி தயாரிக்கின்றனர்.


ராஜஸ்தான் ஆடுகள்


ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், ஜெய்ப்பூர் பகுதிகளில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. ஆனால், பிழைப்புக்காக ஆடுகள் வளர்க்கின்றனர். அந்த ஆடுகள், ரயில் வாயிலாக சென்னை, மதுரை, ஜோலார்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் என, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அறுக்கப்படுகின்றன. குறைந்த விலையில் கறியாக விற்கப்படுகின்றன.

தமிழக அன்றாட உணவு பழக்கத்தில் இருந்து பிரியாணி, இறைச்சியை முழுமையாக தவிர்க்க முடியாது. அதனால், பிரியாணி விற்பனை கடைகள் அதிகரிக்க தான் செய்யும். இதை முறையாக கண்காணித்து, தரமான, ஆரோக்கியமான பிரியாணிக்கு உத்தரவாதம் தர வேண்டியது உணவு பாதுகாப்புத் துறை. இல்லையேல், பிரியாணி சாப்பிட்ட ஆரணி சிறுமி மரணம் என்பது போன்ற செய்திகள், அவ்வப்போது வெளிப்பட்டு அதிர்ச்சியூட்டவே செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


சில நாட்களாக புகார்கள் அதிகம்!


latest tamil news


சமீப காலமாக, சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுதும் பிரியாணி பிரியர்கள் அதிகமாகி விட்டனர். அதனால், பிரியாணி விற்பனை செய்வோரும் அதிகரித்து வருகின்றனர். சாதாரண சைவ சாப்பாட்டை விட, மாட்டுக் கறி பிரியாணி விலை குறைவாக இருக்கிறது; சுவையாக இருக்கிறது என, மக்கள் அதை நாடிச் செல்கின்றனர்.

வியாபார போட்டியில் விலையை குறைத்து விற்கின்றனர். நமக்கு அது சகாயம் தானே என, பிரியாணி பிரியர்கள் ரோட்டோர கடைகளில் பிரியாணி வாங்கி சாப்பிடுகின்றனர். அது தரமானதாக இருக்கிறதா என, யாரும் கவலைப்படுவதில்லை. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தான், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.

வீட்டில் சமைத்து விற்பனை செய்தாலும், எங்கள் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை உணவு பொருள் விற்பனை செய்வோர் பதிவு செய்தால் போதும். அதுவே 20 கோடி ரூபாய் வரை விற்பனை செய்வோர், முறையாக 'லைசன்ஸ்' பெற வேண்டும். விற்பனை 20 கோடி ரூபாய்க்கு மேல் என்றால், மத்திய அரசின் 'லைசன்ஸ்' பெற வேண்டும். அதற்கு பல்வேறு ஆவணங்கள் கொடுக்க வேண்டும். பல்துறை சான்று பெற்றாக வேண்டும்.

சென்னையில் ரோட்டோர கடைகள், தள்ளுவண்டிகளில் பிரியாணி விற்பனை செய்வோரில் 3,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கடையை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து, முறையான வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்ய வேண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக, பிரியாணி சம்பந்தப்பட்ட புகார்கள் தான் அதிகம் வருகின்றன.

அதனால், அதை விற்பவர்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்திருக்கிறோம். எந்த உணவு பொருள் வண்ணம் கலந்து விற்பனை செய்யப்படுகிறதோ, அந்த பொருளை சாப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
டாக்டர் பி.சதீஷ்குமார்,
நியமன அலுவலர், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை.
----- நமது நிருபர் - -

Advertisement


வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
23-செப்-202116:19:55 IST Report Abuse
INDIAN Kumar உயிர்களை கொல்வது பாவம், அது யாராக இருந்தாலும் சரி.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-செப்-202101:29:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மனுசனுக்கு வேலை இல்லாம, பணக்காரனுக்காக சட்டங்களை போட்டு, ஏழையை ஏழரை பிடிக்க வெச்சி, பட்டினி போட்டு கொல்லலாம். அது தப்பே இல்ல....
Rate this:
Cancel
Durai - Chennai,இந்தியா
21-செப்-202121:54:37 IST Report Abuse
Durai இன்னும் பதிவிட்ட தகவல் மிகவும் தவறான தகவல் இந்த பதிவினை பற்றி ஏன் நம் வியாபாரிகள் சங்கம் சங்கமும் நமது வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?????
Rate this:
Cancel
Durai - Chennai,இந்தியா
21-செப்-202121:48:22 IST Report Abuse
Durai ஐயா நீங்கள் பேசுங்கள் அது பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாகவும்,சிறிய ரோட்டோர கடை களும் சிறிய கடைகளுக்கும் எதிராகவும் கூறுகின்றீர்கள் இது மிகவும் கண்டிக்கத்தக்கது வருத்தத்துக்கு உரியது தவறான தகவல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X