சில வரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : செப் 19, 2021
Share
தேஷ்முக் ரூ.4.7 கோடி லஞ்சம்மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்., தலைவருமான அனில் தேஷ்முக் மீதான லஞ்ச புகாரை தொடர்ந்து அமலாக்கத் துறை விசாரணையை துவக்கியது. முடிவில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் உட்பட 11 பேர் மீது சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ., சச்சின் வாஸே மற்றும் உதவியாளர்

தேஷ்முக் ரூ.4.7 கோடி லஞ்சம்

மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்., தலைவருமான அனில் தேஷ்முக் மீதான லஞ்ச புகாரை தொடர்ந்து அமலாக்கத் துறை விசாரணையை துவக்கியது. முடிவில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் உட்பட 11 பேர் மீது சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ., சச்சின் வாஸே மற்றும் உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரிடம் அனில் தேஷ்முக் 4.7 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது, முதன்மை குற்றச்சாட்டாக இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிக்கிம் மாநில மீன் 'கட்லி'

காங்டாக்: வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் 'கட்லி' என்ற மீன், மாநில மீனாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக 'கூப்பர் மஹ்சீர்' என அழைக்கப்படும் இந்த வகை மீன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், மாநில மீனாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக மீன்வளத் துறை அதிகாரிகள் கூறினர். மாநிலத்தில் 'டீட்' மற்றும் 'ரங்கிட்' ஆறுகள், அவற்றின் துணை நதிகள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கட்லி மீன் பரவலாக காணப்படுகிறது.

பயங்கரவாதியின் உறவினர் சரண்

புதுடில்லி: பாகிஸ்தானில் ஐ.எஸ்., பயங்கரவாதி களிடம் பயிற்சி பெற்ற ஒசாமா என்பவர் உட்பட நான்கு பயங்கரவாதிகளை சமீபத்தில் டில்லி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, இவர்கள் பாக்., சென்று பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற உதவிய ஒசாமாவின் மாமாவான ஹுமைத் -உர்- ரஹ்மான் மற்றும் ஐந்து பேர், உத்தர பிரதேசத்தின் அலகாபாத் மாவட்ட போலீசில் சமீபத்தில் சரண் அடைந்தனர். தகவல் அறிந்த டில்லி தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

முதல்வரின் தந்தை மீது அவதுாறு

பிலிபிட்: உத்தர பிரதேசத்தின் பிலிபிட் நகரில், சமாஜ்வாதி கட்சி சார்பில் சமீபத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடந்தது. இதில், மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின் தந்தை குறித்து அவதுாறாக பேசப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்த பா.ஜ., நிர்வாகியின் புகார் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவரும், எம்.எல்.சி.,யுமான ராஜ்பால் காஷ்யப், மாவட்ட தலைவர் யூசுப் காத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் பள்ளி திறப்பு?

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 325 பேரிடம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், நவ., 1 முதல் பள்ளிகளை திறப்பது என முடிவானது. எந்த வகுப்புகள் முதலில் துவங்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசு

கோஹிமா: வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசு அமைக்க, எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி கோரியது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, நாகாலாந்து ஐக்கிய அரசு என்ற பெயரில் புதிய அனைத்துக் கட்சி அரசு அமையும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் கோஹிமாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் புதிதாக அமைவது ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசு என்ற பெயரில் அழைக்கப்படும் என முடிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X