இந்திய நிகழ்வுகள்
முஸ்லிம் பெண்ணுக்கு 'லிப்ட்' ஹிந்து வாலிபருக்கு அடி, உதை
பெங்களூரு-முஸ்லிம் பெண்ணை தன் இரு சக்கர வாகனத்தில் 'லிப்ட்' கொடுத்து அழைத்துச் சென்ற நபரை தாக்கிய இரு முஸ்லிம் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களான ஒரு ஆணும், பெண்ணும் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அவமரியாதை
பன்னர்கட்டா சாலை, டெய்ரி சதுக்கம் அருகே வந்த போது அவர்களின் வாகனத்தை நிறுத்திய முஸ்லிம் இளைஞர்கள், பின்னால் அமர்ந்திருந்த அந்த முஸ்லிம் பெண்ணிடம், 'ஏன் புர்கா அணியவில்லை. வாகனம் ஓட்டுபவர் யார்?' என கேட்க, வாகனம் ஓட்டி வந்தவர் ஹிந்து என்பதை தெரிந்து கொண்ட அவர்கள், அந்த நபரை தாக்கினர்.'முஸ்லிம் பெண்ணான நீ, ஹிந்து நபருடன் இரு சக்கர வாகனத்தில் செல்லலாமா? உன்னை போன்றவர்களால் தான் நம் சமுதாயத்துக்கு அவமரியாதை ஏற்படுகிறது' என கூறி, அந்த பெண்ணையும் தாக்கினர்.
அந்த பெண்ணின் கணவர் மொபைல் போன் எண்ணை வலுக்கட்டாயமாக பெற்ற இளைஞர்கள், அவருக்கு போன் செய்து, 'உன் மனைவி, ஹிந்து நண்பருடன் பைக்கில் உன் வீட்டுக்கு வரும் விஷயம் தெரியுமா?' என கேட்டதற்கு, 'அவர் தெரியும். அதனால் என்ன...' என கூறியுள்ளார்.இதனால் மேலும் கோபமடைந்த இளைஞர்கள் அந்த பெண்ணை தாக்கி, 'இனிமேலும் இதுபோன்று செய்யக்கூடாது' என மிரட்டி, பைக்கிலிருந்து இறக்கி, ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.தொலைத்து விடுவோம்பின், அந்த பைக்கை ஓட்டிய நபரை பார்த்து, 'இனிமேல் இதுபோன்று முஸ்லிம் பெண்களுடன் உன்னை பார்த்தால் தொலைத்து விடுவோம்' என மிரட்டி அனுப்பினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு இளைஞர்களை கைது செய்தனர்.இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் எனவும் உறுதியளித்து உள்ளார்.
தமிழக நிகழ்வுகள்
20 ஆயிரம் லிட்டர் சாராயம் லிட்டர் அழிப்பு
செஞ்சி : வளத்தி போலீசார் பறிமுதல் செய்த 20 ஆயிரம் லிட்டர் சாராயத்தை ஆற்றில் கொட்டி அழித்தனர்.
வளத்தி போலீஸ் நிலையம் சார்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் புதிதாக சோதனைச் சாவடி துவக்கினர். இது துவங்கப்பட்ட சில நாட்களில் இந்த வழியாக வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 573 கேன்களில் 20 ஆயிரத்து 55 லிட்டர் ஏரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து டாரஸ் லாரி மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ஏரி சாராயத்தை நேற்று செஞ்சி மாஜிஸ்ட்ரேட் தினேஷ் முன்னிலையில் செஞ்சி அடுத்த செல்லபிராட்டி கூட்ரோடு சங்கராபரணி ஆற்றில் கொட்டி அழித்தனர்.தாசில்தார் நெகருன்னிசா, டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை கள்ளக்குறிச்சியில் வடமாநில வாலிபர் வெறிச்செயல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், ஆசைக்கு இணங்க மறுத்த வெளிமாநில பெண் கூலித் தொழிலாளி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பீகார் மாநிலம், தாஜ்பூர் தாலுகா, அம்ரித்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜ்ஜிபிரானு. இவரது மனைவி மூர்த்திதேவி, 25; இவர்களுக்கு தில்கூஷ், 9, என்ற மகனும், கூஷி, 5, என்ற மகளும் உள்ளனர். இதில், தில்கூைஷ அம்ரித்பூரில் விட்டுவிட்டு, மகள் கூஷியுடன், கணவன், மனைவி இருவரும் கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டுமானப் பணி செய்து வருகின்றனர்.கல்லுாரிக்கு அருகே உள்ள அண்ணாமலை என்பவரது விளைநிலத்தில் தற்காலிகமாக 'ெஷட்' அமைத்து தங்கியுள்ளனர். அதே பகுதியில் தங்கி கூலி வேலையில் ஈடுபட்டு வரும், ஒடிசா மாநிலம், பததேரா பகுதியைச் சேர்ந்த ரகபாநாயக் மகன் கேசப்நாயக், 33; என்பவர் மூர்த்திதேவியை அடிக்கடி கிண்டல் செய்துள்ளார்.
நேற்று காலை 8.30 மணியளவில் கழிவறையில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூர்த்திதேவியின் புடவையை கேசப்நாயக் பிடித்து இழுத்து ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதிர்ச்சியடைந்த மூர்த்திதேவி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேசப்நாயக், மூர்த்திதேவியை கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டுச் சென்று தடுத்த பிரிஜ்ஜிபிரானுவை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூர்த்திதேவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.கள்ளக்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று மூர்த்திதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதலில் காயம் அடைந்த பிரிஜ்ஜிபிரானு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார், கேசப்நாயக், 33; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆத்தூரில் டைலர் கடையில் தீ விபத்து
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், ராணிப்பேட்டை சாலையில் உள்ள டைலர் கடையில் தீ விபத்து. முதல் மாடியில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏணி உதவியுடன், ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு
பாம்புக்கு பயந்து ஓடிய விவசாயி கிணற்றில் விழுந்து பலி
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி அருகே, கடம்பூர் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த, சிவக்குமார், 35. விவசாயியான இவர், இன்று, மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, பெரிய பாம்புவை பார்த்து ஓடியபோது, கிணற்றில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த சிவக்குமார், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோவிலுக்குள் பாய்ந்த கார்; டயர் வெடித்ததால் விபரீதம்
பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கோவிலுக்குள் பாய்ந்தது.
திருவள்ளூரைச் சேர்ந்தவர், பாலசந்தர். நேற்று காலை பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் இருந்து, திருவள்ளூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.டிரங்க் சாலையில் சென்ற போது, திடீரென டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது இடித்து அங்கிருந்த கோவிலுக்குள் பாய்ந்தது. இதில், கோவிலுக்குள் படுத்திருந்த, ராஜேஷ் என்பவர் காயமடைந்தார். அவரின், அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த ராஜேஷை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.காரை ஓட்டி வந்த பாலசந்தர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவத்தில், குடியிருப்பு கள் கட்ட வாடகைக்கு விடப்படும், ஏணி கடையும் சேதமடைந்தது.இது குறித்து வழக்கு பதிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார் மிதமான வேகத்தில், வந்ததால் பெரிய விபத்து, தவிர்க்கப்பட்டதாக போலீசார் கூறினர்.
உலக நிகழ்வுகள்
போலியோ தடுப்பூசி முகாமில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை
பெஷாவர்-நம் அண்டை நாடான பாகிஸ்தானில், போலியோ தடுப்பூசி முகாமில் போலீஸ்காரர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.பாகிஸ்தானின் கைபர் பன்க்துன்க்வா மாகாணத்தில் தால் பெஷாடி என்ற கிராமத்தில் போலியோ தடுப்பூசி முகாம் ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. மூன்றாவது நாளான நேற்று, தடுப்பு மருந்து முகாமில் இருந்த போலீஸ்காரரை, 'மோட்டார் பைக்'கில் வந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
தகவல் அறிந்து போலீஸ் படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் யாரும் பிடிபடவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.உலக அளவில் பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே போலியோ நோய் உள்ளது. மற்ற அனைத்து நாடுகளும் போலியோ நோயை முற்றிலும் ஒழித்து விட்டன.இந்த ஆண்டு இறுதிக்குள் பாக்., முழுதும் போலியோ தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் போலியோ தடுப்பு முகாம் ஊழியர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளன.போலியோ தடுப்பூசியால் கருவுறுதல் தடுக்கப்படுகிறது என, சில பயங்கரவாத அமைப்புகள் பிரசாரம் செய்வதோடு, மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றனர்.
ஆப்கனில் பெண்களுக்கு தடை?
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டு பெண்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்நிலையில் நேற்று, தலைநகர் காபூலின் தற்காலிக மேயராக உள்ள ஹம்துல்லா நமோனி பிறப்பித்த உத்தரவில், “பணி நிமித்தமாக பெண்கள் வெளியே செல்லக் கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும்,” என்றார். மேயரின் இந்த உத்தரவு, பெண்கள் மீதான தலிபானின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
படகு விபத்து: 8 பேர் பலி
பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் குயிஜோவ் மாகாணத்தில், 40 பயணியருடன் படகு ஒன்று நதியில் பயணித்தது. அப்போது நிலை தடுமாறிய அந்த படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. நீரில் தத்தளித்த மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்; எட்டு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
மிகப்பெரிய மரத்திற்கு ஆபத்து
த்ரீ ரிவர்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீ, சீக்வோயா தேசிய பூங்காவில் உள்ள வனத்திற்கு உள்ளேயும் பரவத் துவங்கி உள்ளது. இந்த வனத்திற்குள் தான், உலகின் மிகப்பெரிய மரமான 'ஜெனரல் ஷெர்மன் மரம்' உள்ளது. தீ வேகமாக பரவி வருவதால் அந்த மரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எனவே அந்த மரத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE