பண்ருட்டி-பண்ருட்டி அருகே முந்திரி ஆலையில் இறந்த தொழிலாளியின் மர்ம மரணத்தை கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டுவை சேர்ந்தவர் கோவிந்தராசு, 60; இவர் பனிக்கன்குப்பத்தில் உள்ள கடலுார் தி.மு.க. எம்.பி., ரமேஷிற்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலையில் பணிபுரிந்தார்.இவர் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று அதிகாலை 2:15 மணிக்கு முந்திரி கம்பெனியில் கோவிந்தராசு விஷம் குடித்ததாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவிந்தராசு தற்கொலை செய்யவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் மற்றும் பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் காடாம்புலியூர் போலீஸ் ஸ்டேஷனை நேற்று பகல் 11:30 மணிக்கு முற்றுகையிட்டனர். பின் வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவிந்தராசு மகன் செந்தில்வேல், 30; காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இதற்கிடையே மறியல் செய்தவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இறந்தவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு பணி வழங்க வலியுறுத்தி கலெக்டரை சந்தித்து முறையிடலாம் கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:கோவிந்தராசு மகன் செந்திலிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்ட தி.மு.க., எம்.பி., ரமேஷ் உதவியாளர் நடராஜன், 'உன் தந்தை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.கோவிந்தராசு குடும்பத்தினர், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, அவரது உடல் முழுதும் காயங்களும், ரத்தக்கரைகளும் உள்ளன. அவர் தற்கொலை செய்ய வாய்ப்புகளே இல்லை. அவர் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட கோவிந்தராசு பா.ம.க., நிர்வாகி. அவரது படுகொலைக்கு நீதிகிடைக்கும் வரை பா.ம.க., ஓயாது.கோவிந்தராசுவை இரக்கமற்ற முறையில் அடித்து கொடுமைப்படுத்தி, கொலை செய்த வழக்கில், ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, உடனே அனைத்து எதிரிகளையும் கைது செய்ய வேண்டும்.வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும். கோவிந்தராசு குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையானபோராட்டத்தை பா.ம.க.,முன்னெடுக்கும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE