சென்னை- --இன்ஜினியரிங் கல்லுாரிகளின் செயல் திறன் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதில், அண்ணா பல்கலை நடத்திய மறுதேர்வில், மாணவர்களுக்கு அமோக தேர்ச்சி கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள், கல்லுாரிகளின் செயல் திறனை அறிவதற்கான பட்டியலை, அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது.இதன்படி, 400க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௨௦௨௦ நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் மற்றும் ஏப்ரல், மே செமஸ்டர் தேர்வுகளின் தேர்ச்சி சதவீதம் இடம் பெற்றுள்ளது.100 சதவீத தேர்ச்சிநவம்பர், டிசம்பர் மாதம், அண்ணா பல்கலை நடத்திய செமஸ்டர் தேர்வுகளில், இரண்டு கல்லுாரிகள் மட்டும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுஉள்ளன.
இந்த கல்லுாரிகளில் மிகவும் குறைந்த மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 41 கல்லுாரிகள், 99 சதவீத தேர்ச்சி பெற்றுஉள்ளன. அவற்றில், திருவள்ளூர், ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லுாரி முதல் இடமும்; பனிமலர் 'இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' இரண்டாம் இடமும்; ஆர்.எம்.டி., இன்ஜினியரிங் கல்லுாரி, மூன்றாம் இடமும் பெற்றுள்ளன.பிரபலமாக பேசப்படும் கோவை பி.எஸ்.ஜி., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எட்டு; காஞ்சிபுரம் ராஜலஷ்மி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஒன்பது; எஸ்.எஸ்.என்., 13ம் இடங்களையே பிடித்துள்ளன.
மத்திய அரசு நிறுவனங்களான சேலம் கைத்தறி தொழில்நுட்ப கல்வி நிறுவனம், 18; சென்னை மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம், 23; காரைக்குடி மத்திய 'எலக்ட்ரோகெமிக்கல்' ஆராய்ச்சி நிறுவனம், 27ம் இடங்களை பெற்றுஉள்ளன.பத்து கல்லுாரிகள், 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சியை பெற்றுள்ளன. இரண்டு கல்லுாரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.மறுதேர்வில் அமோகம்கடந்த ஏப்., மே மாத 'ஆன்லைன்' வழி செமஸ்டர் தேர்வில், கட்டுப்பாடுகளால் பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, தி.மு.க., அரசு அமைந்ததும், அண்ணா பல்கலை நடத்திய ஆன்லைன் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதில், கலை, அறிவியல் கல்லுாரிகளை போன்று, மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதி, விடைத்தாளின் பிரதியை 'ஸ்கேன்' செய்து, கல்லுாரிகளுக்கு அனுப்பும் தேர்வு அறிமுகமானது.இந்த தேர்வில் எதிர்பார்த்தது போல அதிக தேர்ச்சி கிடைத்துள்ளது.அதாவது, 30 கல்லுாரிகளில், 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவை தவிர, 138 கல்லுாரிகள், 99 சதவீத தேர்ச்சி பெற்றுஉள்ளன.

மொத்தம், 441 கல்லுாரிகளில், 439 கல்லுாரிகளில் 70; 429 கல்லுாரிகளில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.அண்ணா பல்கலை நிலவரம்அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளில், ஏப்ரல், மே மாத தேர்வில் அதிகபட்சம், 96 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. கிண்டி இன்ஜி., கல்லுாரியில் 95 சதவீதம்; குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில் 96; கிண்டி அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரியில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டிசம்பர் தேர்வுக்கான தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE